சென்னை: தமிழ் சினிமாவின் எமோஷனல் மிக்க படைப்புகளால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த இயக்குநரும் நடிகருமான சேரன் குடும்பத்தில் சோகம் ஏற்பட்டிருக்கிறது. சேரனின் தாயார் கமலா பாண்டியன் வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி திரையுலகினரையும், சேரனின் ரசிகர்களையும் மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த சேரன், சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து தனது கனவுகளை சுமந்தபடி சென்னை வந்தவர். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் ஆரம்பத்தில் பல சிரமங்களை சந்தித்தாலும், அதையே படிக்கட்டாக மாற்றி இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக உயர்ந்தார். அந்த பயணத்தில் அவருக்கு மிகப்பெரிய துணை அவரது தாயார் தான் என்று பலமுறை சேரன் எமோஷனலாக பேசியிருக்கிறார். சேரனின் வாழ்க்கையை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுவது என்னவென்றால், குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் அவர் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாது என்பதே. குறிப்பாக, தாயாரின் நம்பிக்கையும் ஊக்கமும் தான் சேரனுக்கு மிகப்பெரிய பலம் என்று கூறுகின்றனர். அதனால்தான் இந்த இழப்பு அவரை முற்றிலும் உடைத்திருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. சிறு வயதில் இருந்தே கலை மீது ஆர்வம் கொண்ட சேரன், சென்னை வந்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். புரியாத புதிர், சேரன் பாண்டியன், நாட்டாமை போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் தான் அவரை திறமையான இயக்குநராக உருவாக்கியது. அதன்பிறகு பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சேரன், தனது முதல் படத்திலேயே பேசப்படும் படைப்பாளியாக மாறினார். தொடர்ந்து பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற உணர்ச்சி மிக்க படங்களின் மூலம் குடும்ப உறவுகள், காதல், வாழ்க்கை போராட்டங்களை ரசிகர்களின் இதயத்துக்கு நெருக்கமாக கொண்டு சென்றார். அவரது படங்கள் பல விருதுகளையும் பெற்றன. இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனக்கென அடையாளம் உருவாக்கியவர் சேரன். சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் நடிகராகவும் பாராட்டு பெற்றார். பின்னர் பல படங்களில் நடித்தாலும், சமீப காலங்களில் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சில பேட்டிகளில் அவர் மனவேதனையுடனும் பேசியிருந்தார். இந்நிலையில், அவரது தாயார் மறைவு செய்தி வெளியாகியதும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதிச் சடங்குகள் சேரனின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெறும் என கூறப்படுகிறது. வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் பக்கத்தில் நின்ற ஒருவரை இழப்பது எந்த மனிதருக்கும் மிகப்பெரிய வலி. அதுவும் தன்னை உருவாக்கிய தாயை இழந்துள்ள சேரனுக்கு இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் குடும்ப பாசத்தை திரையில் கண்கலங்க வைத்த இயக்குநர், இன்று தனது சொந்த வாழ்க்கையிலேயே அந்த வேதனையை எதிர்கொண்டு நிற்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இயக்குனர் சேரன் ஆரம்பகாலம்
சேரனின் ஆரம்பகாலம்
இயக்குனர் சேரன் அம்மா இறப்பு