சென்னை: 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை மீனாட்சி சேஷாத்ரி மீண்டும் சினிமாவுக்கு வரப்போகிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டூயட் படத்தில் தனது அழகும், மென்மையான நடிப்பும், மறக்க முடியாத திரைநிகழ்வுகளும் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேமரா முன் நிற்க தயாராகி வருகிறார் என்ற தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
1994ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான டூயட் திரைப்படம் தமிழ் சினிமாவின் கிளாசிக் காதல் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிரபு, ரமேஷ் அரவிந்த், பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் மீனாட்சி சேஷாத்ரி நடித்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வந்த "அஞ்சலி அஞ்சலி" பாடல் இன்னும் பலரின் ஃபேவரிட் பட்டியலில் உள்ளது. அந்த படத்தின் மூலம் மீனாட்சி சேஷாத்ரி தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான முகமாக மாறினார். மீனாட்சி சேஷாத்ரி தமிழில் அதிகப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், நடித்த சில படங்களே அவருக்கு தனி அடையாளம் கொடுத்தன. என் ரத்தத்தின் ரத்தமே போன்ற படங்களிலும் நடித்த அவர், வடஇந்திய சினிமாவில் மிகப் பெரிய ஸ்டாராக இருந்தார். 1980களிலும் 90களிலும் ஹிந்தி சினிமாவின் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவராகவும் இருந்தார். அழகுக்கு மட்டுமல்ல, நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்த நடிகை என்ற பெயரை பெற்றவர். மீனாட்சி சேஷாத்ரி ஒரு நடிகை மட்டுமல்ல, திறமையான கிளாசிக்கல் டான்சரும் ஆவார். பரதநாட்டியம், கதக் உள்ளிட்ட இந்திய பாரம்பரிய நடனங்களில் தேர்ச்சி பெற்றவர். அவரது திரை நடிப்பிலும் அந்த நடன பின்புலம் வெளிப்பட்டது. அதனால்தான் அவர் நடித்த பாடல் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றன. சினிமாவின் உச்சத்தில் இருந்தபோதே, 1995ஆம் ஆண்டு ஹரிஷ் மைசூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனாட்சி சேஷாத்ரி. திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆன அவர், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். சினிமாவை விட்டு முழுமையாக விலகிய அவர், அமெரிக்காவில் தனது நடனப் பள்ளியை நடத்தி, பல மாணவர்களுக்கு இந்திய பாரம்பரிய நடனங்களை கற்றுக்கொடுத்து வந்தார். ரசிகர்கள் மத்தியில் அவரது கம்பேக் குறித்து இடையிடையே பேச்சு இருந்தாலும், அது நிஜமாகவில்லை. இப்போது பல வருட அமைதிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தயாராக இருப்பதாக மீனாட்சி சேஷாத்ரி தெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மும்பைக்கு குடிபெயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் எந்த மொழிப் படத்தில் நடிக்கப் போகிறார்? தமிழ் சினிமாவிலா? ஹிந்தி படமா? அல்லது ஓடிடி வெப் தொடரா? என்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அதுவே ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது. சமீப காலமாக பழைய நட்சத்திரங்கள் மீண்டும் கம்பேக் கொடுக்கும் டிரெண்ட் அதிகரித்திருக்கிறது. அந்த பட்டியலில் இப்போது மீனாட்சி சேஷாத்ரியும் இணையப்போகிறார் போல தெரிகிறது. "டூயட் ஹீரோயின் மீண்டும் வர்றாங்களா?", "இப்பவும் அதே அழகா இருப்பாங்க!", "தமிழ்ல கம்பேக் கொடுத்தா செம்ம இருக்கும்" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர். இதுதான் இப்போது பெரிய கேள்வி. முன்னணி ஹீரோவின் அம்மா ரோலா? முக்கிய குணச்சித்திர வேடமா? அல்லது கதையை மையமாகக் கொண்ட கதாபாத்திரமா? 30 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் என்பதால், சாதாரண வேடம் ஏற்க வாய்ப்பில்லை என சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன. ஒரு காலத்தில் ரசிகர்களின் இதயத்தை ஆட்கொண்ட நடிகை... குடும்பத்திற்காக சினிமாவை விட்டுச் சென்றவர்... இப்போது மீண்டும் திரைக்கு வர தயாராகிறார். அந்த கம்பேக் தமிழ் சினிமாவிலா என்ற கேள்விக்கான பதிலுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.'அஞ்சலி அஞ்சலி' நாயகி
தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள்
நடிப்பை தாண்டி நடனத்தில் ஜொலித்தவர்
திருமணத்துக்கு பிறகு
இப்போது ஏன் திடீர் கம்பேக்?
90ஸ் ரசிகர்களுக்கு இது செம்ம சர்ப்ரைஸ்
யாருடன் நடிக்கப் போகிறார்?