சென்னை: ஒரு படம் முடிந்ததும் ஹீரோவின் பஞ்ச் வசனம், சண்டை, கிளைமாக்ஸ் எல்லாம் நினைவில் நிற்பது வழக்கம். ஆனால் ஜிடி நாயிடு ( G.D.N) படம் முடிந்த பிறகு மனசுக்குள் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரே கேள்வி இவ்வளவு பெரிய மனிதரைப் பற்றி நமக்கு ஏன் பெரிதாக தெரியவில்லை என்பதுதான். ஜிடி நாயுடு யார்? என்பதை தெரிந்தவர்களை விட தெரியாதவர்கள் தான் அதிகம். ஆனால் மாதவன் நடித்த ஜி டி நாயுடு படம் முடிந்து வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் கூகுளில் அவரைப் பற்றி தேட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதுதான் இந்த படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி.
ஜிடி நாயுடு படம் 1985இல் தொடங்குகிறது. பள்ளி பாட புத்தகத்தில் ஜிடி நாயுடுவின் பெயர் இல்லாததை எதிர்த்து ஒரு ஆசிரியர் கேள்வி கேட்கிறார். அங்கிருந்து ஃப்ளாஷ் பேக்கில் தொடங்கும் கதை, கோவையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இளைஞன் எப்படி இந்தியாவின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக மாறினார் என்பதை மெதுவாக நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறது.
ஒரு ஆங்கிலேயரின் பைக்கை பார்த்து அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வத்தில் தொடங்கும் பயணம், பின்னர் இயந்திரங்கள், தொழில், பேருந்து, போக்குவரத்து தொழிற்சாலை, கண்டுபிடிப்புகள் என விரிந்து செல்கிறது. United motor service (UMS) என்ற பெயரில் பேருந்து சேவையை லாபகரமாக நடத்தும் விதமும், தொழிலில் அவர் காட்டிய நேர்மையும் படத்தில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் படம் வெறும் சாதனை கதையை மட்டும் சொல்லவில்லை. திறமை இருந்தாலும் அதிகாரம் எப்படி ஒருவரை நசுக்க முடியும் என்பதையும் காட்டுகிறது. ஆங்கில ஆட்சியின் அழுத்தங்கள், சுதந்திரம் வந்த பிறகும் தொடர்ந்த சிக்கல்கள் கடைசியில். மன வேதனையில் தனது கண்டுபிடிப்புகளை தானே உடைத்து நொறுக்கும் அந்த காட்சிகள் மனதை கனக்க வைக்கிறது. இந்த படத்தில் மிகப்பெரிய பலம் மாதவன். இளம் வயது ஜிடி நாயுடுவாகவும், வயது முதிர்ந்த விஞ்ஞானியாகவும் இரண்டு பரிணாமங்களில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக வயதான ஜிடி நாயுடுவாக அவருடைய உடல் மொழி பார்வை பேசும் விதம் எல்லாம் அந்த மனிதரை கண் முன்னே நிறுத்துகிறது. படம் முழுவதும் ஹீரோவாக தெரியாமல் ஜிடி நாயுடுவாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். துஷாரா விஜயனின் அமைதியான நடிப்பால் கவனம் இயக்குகிறார். ஜெயராம் நேர்மையான வருமான வரி அதிகாரியாக கதைக்கு வலு சேர்க்கிறார். சத்யராஜ், கருணா முன்னிட்டு அனைவரும் கதைக்கு தேவையான அளவில் தங்களுடைய பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தாவின் இசைப்படத்திற்கு ஒரு கதாபாத்திரம் போல இருக்கிறது. எந்த இடத்திலும் உணர்ச்சியை திணிக்காமல் அந்த காலகட்டத்திற்குள் நம்மை இழுத்து செல்கிறது. கலை, இயக்கம், ஆடை வடிவமைப்பு, ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தி இருக்கின்றனர். ஆனால் படம் முழுக்க குறைகளே இல்லையா? என்றால் இருக்கிறது. ஜிடி நாயுடுவின் பல முக்கியமான கண்டுபிடிப்புகள் இன்னும் விரிவாக சொல்லப்பட்டிருக்கலாம். அறிவியல் மீது அவருக்கு வந்த ஈர்ப்பு, முதல் திருமண வாழ்க்கை, பெரியார், நேரு போன்ற தலைவர்களுடான உறவு, வெளிநாட்டு பயணங்கள், உலக அளவில் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் போன்ற பல விஷயங்கள் கொஞ்சம் அவசரமாக கடந்து செல்கின்றன. அதேபோல படம் முழுவதும் வருமானவரி பிரச்சனையை மையமாக வைத்து நகர்வதால், ஜி.டி நாயுடுவின் விஞ்ஞான சாதனைகள் இன்னும் அதிகமாக வந்திருக்கலாம் என்ற உணர்வு சில இடங்களில் வருகிறது. ஆனால் இந்த குறைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் படம் முடிந்ததும் நமக்கு கிடைப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். நியூட்டன், எடிசன், ஐன்ஸ்டீன் பற்றி புத்தகங்கள் படித்த நமக்கு தமிழ்நாட்டிலேயே இவ்வளவு பெரிய கண்டுபிடிப்பாளர் இருந்தாரா? என்று ஆச்சரியத்தை இந்த படம் கொடுக்கிறது. இது வழக்கமான பயோபிக் இல்லை ஒரு மனிதனின் வெற்றியை மட்டும் கொண்டாடாமல் திறமையானவர்களை நாம் எப்படி புறக்கணித்தோம் என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்லும் படம். வசூல் எவ்வளவு வரும் என்பது அடுத்த விஷயம். ஆனால் இந்த படம் பார்த்து வெளியே வரும்போது ஒரு விஷயம் மட்டும் தோன்றுகிறது. ஜிடி நாயுடுவுக்கு இந்த அங்கீகாரம் பல ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும். தாமதமாக இருந்தாலும் அந்த மனிதரை ஒரு புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியதற்காக ஜி டி என் படக்குழுவுக்கு பாராட்டுக்கள்.ஜிடி நாயுடு பட கதை
படத்தின் பிளஸ் பாயிண்ட்
படத்தின் குறைகள்
தரமான சம்பவம்