சென்னை: இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அசாத்திய மனவலிமை, அவரது உன்னதமான தொழில் பக்தி மற்றும் திரையுலக சாதனைகளை தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நெகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவின் 'ஆலமரமாக' திகழும் பாரதிராஜா, திரைக்குப் பின்னால் தன் குடும்பத்தின் மீது கொண்டிருந்த அளவற்ற பாசத்தையும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பகிர்ந்து கொண்டுள்ளார்.. இந்த அரிய தகவல்களை பாரதிராஜாவின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
பாலாஜி பிரபு அந்த பேட்டியில், "பொதுமக்கள் பலரும் "பாரதிராஜா மருத்துவமனை" என்பது பாரதிராஜாவுக்கு சொந்தமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் (MD) டாக்டர் நடேசன் அவர்கள், பாரதிராஜா அவர்களின் மீது அளவற்ற அன்பு கொண்ட ஒரு தீவிர ரசிகர் ஆவார்.
அவர் தனது இளமைப் பருவத்தில் பாரதிராஜாவை சந்தித்து, 'நான் ஒரு டாக்டர், இருந்தாலும் உங்களுடன் சேர்ந்து ஒரே ஒரு படமாவது தயாரிக்க வேண்டும். அது உங்களின் டைரக்ஷனில் உருவாக வேண்டும். அதுவே எனது வாழ்நாளின் ஆகச்சிறந்த மகிழ்ச்சியாக இருக்கும்' என்று தனது விருப்பத்தைக் கேட்டுக்கொண்டார். உடனே பாரதிராஜாவும் 'நீ எதுக்கும் கவலைப்படாதே, நான் உனக்குப் படம் இயக்கித் தருகிறேன்' என்று கூறி உருவாக்கிய படம்தான் "கடலோர கவிதைகள்". அந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டே டாக்டர் நடேசன், ஜி.என். செட்டி சாலையில் நிலம் வாங்கி இந்த மருத்துவமனையைக் கட்டி, அதற்கு பாரதிராஜா மருத்துவமனை என்று பெயரிட்டார். கடலோர கவிதைகள் படம் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஒரு நாள் உதவி இயக்குனர்கள் அனைவரும் பாரதிராஜா அவர்களிடம் வந்து, 'சார், இந்த படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வழக்கமாக நாம் கிராமத்துப் பின்னணியில்தான் படம் எடுப்போம். ஆனால், கடல் பகுதியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திற்கும் மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு இவ்வளவு வசூல், இங்கு இவ்வளவு வசூல்' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்கள். அதனைக் கேட்ட பாரதிராஜா உடனடியாக, "எல்லாரும் நாகர்கோவில் கிளம்புங்க, இப்பவே என்னுடன் புறப்படுங்கள்' என்று கூறி அனைவரையும் காரில் ஏறச் சொன்னார். குழப்பமடைந்த உதவியாளர்களோ, "சார், நாம் மாற்று உடைகள் கூட எடுத்து வரவில்லையே' என்று கூறியதற்கு, "டிரஸ்களை அங்கேயே போய் வாங்கிக்கொள்ளலாம், புறப்படுங்கள்' என்று சொல்லி, நேராக நாகர்கோவில் பகுதியில் ஷூட்டிங் நடந்த முட்டம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நாகர்கோவி6ல கடற்கரையில் காரிலிருந்து இறங்கி, கடலை நோக்கி ஓடிச் சென்று அந்தச் மணலில் விழுந்து அழுது கதறியிருக்கிறார் பாரதிராஜா... உடனே உதவியாளர்கள் பதற்றமடைந்து, 'என்னாச்சு, என்னாச்சு சார்" என்று கேட்டனர்.. அதற்கு பாரதிராஜா, "இது இயற்கை எனக்கு அளித்த வரம். இந்த இடம் கிடைத்ததால்தான் என்னால் கற்பனை செய்து இப்படியொரு சிறந்த படத்தை மக்களுக்குக் கொடுக்க முடிந்தது. இந்த இடத்திற்கு நான் நன்றி செலுத்த வேண்டும், அதற்காகத்தான் உடனடியாக ஓடி வந்தேன்' என்று கண்ணீர் மல்கக் கூறினார். ஒரு சிறந்த கலைஞனால் மட்டும்தான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட முடியும். பாரதிராஜா முதல் திரைப்படம் '16 வயதினிலே'. அதன் தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு ஒரு தேங்காய் வியாபாரி. அவருக்குச் சினிமா குறித்து எந்தவொரு அனுபவமும் இல்லை. இருந்தாலும் கதையைக் கேட்ட மாத்திரத்தில், பாரதிராஜா அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையினால், அன்றைய தனது வியாபாரத்தில் கிடைத்த வசூல் தொகையான 35,000 ரூபாயை அப்படியே கையில் கொடுத்து, 'உங்களை நம்பிப் பணத்தைத் தருகிறேன், படத்தை எடுங்கள்' என்று கூறி, மைசூர் அருகில் உள்ள கொள்ளேகால் கிராமத்திற்கு ஷூட்டிங்குக்காக தயார் செய்தார். பாரதிராஜாவும், அந்த பணத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தார்.. அப்பொழுது மகன் மனோஜிற்கு ஒரு வயது இருக்கும். வறுமையின் காரணமாக, வீட்டில் குழந்தை குடிக்கப் பால் டின் இல்லாமல் அழுதுகொண்டிருந்தான். அவரது மனைவி, 'குழந்தை பால் இல்லாமல் அழுகிறான்' என்று கூறினார். பாரதிராஜா கையில் 35,000 ரூபாய் பணம் இருந்தாலும், அதிலிருந்து 10 அல்லது இருபது ரூபாய் எடுத்துப் பால் டின் வாங்கி கொடுத்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. மனைவியிடம், "எனது தொழிலையும் கதையையும் நம்பி, தயாரிப்பாளர் கொடுத்த பணம் இது. இதிலிருந்து ஒரு ரூபாய் கூட நமது சொந்தத் தேவைக்காக எடுக்கக் கூடாது. தொழிலுக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும். எப்படியாவது நிலைமையைச் சமாளி, எனது நண்பன் பணம் கொண்டு வந்து தருவான், நீ பால் டின் வாங்கிக்கொள்' என்று கூறிவிட்டு அந்தப் பணத்துடன் ஷூட்டிங்குக்கு கிளம்பினார். தன் பிள்ளை அழுதுகொண்டிருந்த போதும், தனது தொழிலில் அவ்வளவு நேர்மையாகத் திகழ்ந்தார் பாரதிராஜா" என்றெல்லாம் பெருமைபட பேசியிருக்கிறார் பாலாஜி பிரபு.பாரதிராஜா மருத்துவமனை
கடலோர கவிதைகள் படம் ஹிட்
நாகர்கோவில் முட்டம் பீச்
16 வயதினிலே - தேங்காய் வியாபாரி
நேர்மையான பாரதிராஜா