ஹனி ரோஸ் விவகாரத்தில் அதிரடி திருப்பம்! திடீர்னு பணிந்த 800 கோடி தொழிலதிபர்.. என்ன நடந்தது?


  • சென்னை: பிரபல தொழிலதிபர் பாபி செம்மணூர், மலையாள முன்னணி நடிகை ஹனி ரோஸிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.. அத்துடன் தன் மீதான வழக்கை வாபஸ் கோரியிருக்கிறாராம்.. இந்த விவகாரம்தான் இப்போது சோசியல் மீடியாவின் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.. இந்த வழக்கின் பின்னணி என்ன? இதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

    Advertisement

    கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம், கண்ணூர் அலக்கோடு பகுதியில் உள்ள பாபி செம்மணூர் ஜுவல்லரி கிளைத் திறப்பு விழாவுக்கு நடிகை ஹனி ரோஸ் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார்.

    Advertisement

    பாபி செம்மணூர்

    அந்த மேடையில் பாபி செம்மணூர், ஹனி ரோஸின் அனுமதியின்றி அவரது கையை பிடித்து சுற்றியதாகவும், வலுக்கட்டாயமாக நெக்லஸ் அணிய முயன்றதாகவும் புகார்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல், ஹனி ரோஸை "குந்தி தேவி"யுடன் ஒப்பிட்டு பேசியதுடன், அடுத்தடுத்து பல்வேறு சோஷியல் மீடியாக்களிலும் அவரை பற்றி பாலியல் ரீதியான கருத்துக்களையும், அநாகரிகமான விமர்சனங்களையும் பாபி செம்மணூர் தொடர்ந்து முன்வைத்து வந்ததாக கூறப்படுகிறது.

    உடனே இதைக்கண்டு கொதித்தெழுந்தார் ஹனி ரோஸ்.. பண பலமும் செல்வாக்கும் இருக்கிறது என்பதற்காக எந்த பெண்ணையும் இழிவுபடுத்தும் உரிமை யாருக்குமே கிடையாது என்று சீறினார்.. அதுமட்டுமல்லாமல் அப்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் வரை இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார். மேலும், கொச்சி போலீசிலும் புகார் தந்தார்.. இதையடுத்து சிறப்புத் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். வழக்கையும் பதிவு செய்தனர்.

    Advertisement

    ஹனி ரோஸ் நடத்திய சட்டப்போராட்டம்

    அப்போதுதான், வயநாடு மேப்பாடியில் உள்ள தனது எஸ்டேட் ரிசார்ட்டில் பாபி செம்மணூர் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.. உடனே தனிப்படை போலீஸார் ரிசார்ட்டுக்கே சென்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கொச்சி கோர்ட்டில் ஜாமுன் கோரினார் தொழிலதிபர்.. ஆனால் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதுமே அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதனால் எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு காக்கநாடு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதனிடையே சோசியல் மீடியாவில் ஹனி ரோஸை அவதூறாக விமர்சித்த 20-க்கும் மேற்பட்ட யூடியூபர்களும் இந்த வழக்கில் கைதாகினர்.

    Advertisement

    ஜாமீன் பெற்ற தொழிலதிபர்

    ஆனால், மனித நேயமிக்க செயல்கள் என்றாலே பாபி செம்மணூரைதான் கேரளாவில் சொல்வார்களாம்.. அப்படிப்பட்ட ஒரு சர்வதேச தொழிலதிபர் அன்று கைதான சம்பவம், கேரளா மட்டுமின்றி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருநதது.

    இதற்கு பிறகு கேரள ஹைகோர்ட் அவருக்கு ஜாமீன் தந்தது.. ஆனால், "பொதுவெளியில் மற்றவர்களை அவதூறாகப் பேசுவதையும், சோசியல் மீடியாவில் சர்ச்சையைக் கிளப்புவதையும் தவிர்க்க வேண்டும்" என்று கண்டனத்தை பதிவு செய்தது.

    இப்போது என்ன நடந்தது?

    இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பாபி செம்மணூர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

    Advertisement

    அதில், "நான் எப்போதும் எல்லாரிடமும் மரியாதையாகவும், அன்புடனும் நடக்கக் கூடியவன். யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. என் வார்த்தைகளால் ஹனி ரோஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட வேதனைகளுக்கு நான் முழுப் பொறுப்பேற்று, மனம் திறந்து பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனது இந்த உண்மையான மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவர் வழக்கை வாபஸ் பெறுவார் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    யார் இந்த பாபி செம்மணூர்?

    திருச்சூரில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து, தன் உழைப்பால் உயர்ந்து பல நூறு கோடி சொத்துக்களுக்கு அதிபதியானவர் தான் பாபி செம்மணூர். லைஃப் விஷன் என்ற அறக்கட்டளை மூலம் ரத்ததான விழிப்புணர்வு மாரத்தான் ஓடியது, பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு உதவியது எனத் தொண்டுகளையும் செய்துள்ளார்.

    Advertisement

    அதிலும் 2012-ம் ஆண்டு உலகக் கால்பந்து ஜாம்பவான் மரடோனாவை தனது நகைக்கடையின் பிராண்ட் அம்பாசிடராக கேரளாவுக்கு அழைத்து வந்து ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர்.

    அப்படிப்பட்ட தொழிலதிபர் பாபி செம்மணூர்தான், இன்று இப்படி இறங்கி வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.. ஆனால் நடிகை ஹனி ரோஸ் தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. இந்த விவகாரம் சட்ட ரீதியாக எப்படி முடியப் போகிறது என்றும் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Honey Rose Case Takes a Dramatic Turn! What Did the ₹800 Crore Businessman Do?