சென்னை: பாக்யராஜ் என்றாலே சுவாரசியமான திரைக்கதை, எதிர்பாராத ட்விஸ்ட்கள், பாமர மக்களையும் ஈர்க்கும் காமெடி டயலாக்குகள் ஆகியவைதான் அவரது ஆல்டைம் அடையாளமாகும். ஆனால், கமர்ஷியல் சமரசங்களுக்கு நடுவிலும், பாக்யராஜ் கையாண்ட பெண் கேரக்டர்களின் ஆழமும் துணிச்சலும் தமிழ் சினிமாவில் எப்போதுமே தனித்துவமானவை. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
பெண்களின் மன உளைச்சல்களும், அவர்கள் சுமக்கும் குடும்ப சுமைகளும் பெரிய அளவில் பேசப்படாத அந்த காலகட்டத்திலேயே, அவர்களின் அக உலகத்தை சினிமாவில் தைரியமாக பிரதிபலித்தவர் கே.பாக்யராஜ்..
காட்சி அமைப்பில் சின்னதாக ஒரு பிசகு ஏற்பட்டாலும்கூட, ஒட்டுமொத்த சமூகமும் அந்த பெண்ணின் நடத்தையையே தவறாகச் சித்தரித்துவிடும் என்ற அளவிற்கான மெல்லிய கோட்டில் பயணிக்கும் கதைக் களங்களை தேர்ந்தெடுத்து, பெண்களின் மனநிலையை மிக எதார்த்தமாகவும் கண்ணியமாகவும் தன் திரைக்கதையில் பாக்யராஜ் கையாண்டார்.. அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, விடிஞ்சா கல்யாணம், பாமா ருக்மணி, இன்று போய் நாளை வா, சுந்தர காண்டம் இப்படி இன்னும் எத்தனையோ படங்களை உதாரணமாக சொல்லலாம். இதில், அந்த 7 நாட்கள் படத்தின் கிளைமாக்ஸில், ஹீரோயின் தான் விரும்பிய காதலனுடன் சேர வேண்டும் என்றுதான் ரசிகர்களின் மனம் ஏங்கும்.. ஒருவேளை ஹீரோயின் கணவரை தேர்ந்தெடுத்தாலும், மனதில் ஒருவரை வைத்துக் கொண்டு இன்னொருவருடன் வாழ்கிறாரே என்ற விமர்சனமும் நிச்சயம் எழும். ஆனால், இந்த சிக்கலான தருணத்தை மிக கண்ணியத்துடன் கையாண்டார் பாக்யராஜ். சமூக கட்டமைப்பில் திருமண அமைப்பின் முக்கியத்துவத்தைக் கொண்டு வந்து, தாலியைக் கட்டின கணவர்தான் முக்கியம் என்று ஹீரோயினை பேச வைத்து, ரசிகர்களின் மனதை கூல் செய்திருப்பார் பாக்யராஜ். இதே பாக்யராஜ்தான், வீட்ல விசேஷங்க படத்தில் இதற்கு நேர்மாறான ஒரு முடிவை அமைத்திருப்பார். அதாவது கதைப்படி ஹீரோயின் காதலனுடன்தான் சேர வேண்டும்.. ஆனால், அந்த ஹீரோயின் பாக்யராஜையும் அவரது குழந்தையையும் தான் தேர்ந்தெடுப்பார். அதற்கு ஒரு வலுவான உணர்வுப்பூர்வமான காரணத்தையும் அவர் திரைக்கதையில் வைத்திருப்பார். ரசிகர்களும் இதை முழுமையாக அன்று ஏற்றார்கள்.. அதாவது, ஒரு திரைக்கதையை எப்படி திறமையாக டிசைன் செய்தால், அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும், எப்படி சொன்னால் ஒரு பெண்ணின் முடிவை சமூகம் ஏற்கும் என்ற நுட்பத்தை அறிந்து வைத்திருந்தார் பாக்யராஜ். அதேபோல, மௌன கீதங்கள் படத்தில், கணவன் செய்த துரோகத்தை மன்னிக்க முடியாமலும், விவாகரத்து பெற்றும் தவிப்பார் கதாநாயகி.. அப்போது சமரசம் பேச வரும் கணவனிடம், "தப்பு செஞ்சது நீங்க... ஆனா தண்டனை எனக்குமா?" என்று கேட்பார். எப்போது பார்த்தாலும் பெண்களையே பழிதூற்றும் சமூகத்தை பார்த்து கேட்கும் கேள்வியாகவே இது ஒலித்தது. சின்ன வீடு படத்தில் அழகில்லை என்ற காரணத்தால் கணவனால் புறக்கணிக்கப்படும் மனைவி, கணவன் தவறான பாதையில் செல்லும்போது அழுது முடங்கிவிடவில்லை.. மாறாக, ஸ்மார்ட்டாக செயல்பட்டு தன் கணவனை மீட்டெடுப்பார். "ஒரு பொம்பள நினைச்சா குடும்பத்தை வாழ வைக்கவும் முடியும், தடம் மாறப்போற புருஷனைத் தடுத்து நிறுத்தவும் முடியும்" என்ற கூர்மையான விஷயத்தை வசனத்தால் உணர்த்தினார். சுந்தர காண்டம் படமும் பாக்யராஜின் முத்திரைப் படைப்புகளில் மிக முக்கியமானது. ஒரு பள்ளி மாணவியின் ஒருதலைக் காதல், அதனால் ஏற்படும் சமூக பிரச்சனைகள், ஒரு பெண்ணின் மன ஓட்டங்களை மிக யதார்த்தமாகப் பதிவு செய்த திரைப்படம் இது. இந்த படத்தில், ஆசிரியர் மீது ஒரு பள்ளி மாணவிக்கு ஏற்படும் ஈர்ப்பையும் காதலையும், சமூகம் அதை எப்படிப் பார்க்கிறது என்பதையும் மிகவும் நுணுக்கமாகப் பாக்யராஜ் கையாண்டிருப்பார். வயதுக்கே உரிய அந்த பருவத்து உணர்வுகளை கேலி செய்யாமலோ அல்லது கொச்சைப்படுத்தாமலோ, ஒரு பெண்ணின் மனப் போராட்டமாகவே அதை திரைக்கதையிலேயே கடத்தியிருப்பார். படத்தின் கிளைமேக்ஸிலும், அந்த மாணவியின் உணர்வுகளுக்கு கண்ணியம் சேர்க்கும் வகையிலும், அதே சமயம் சமூக விழுமியங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணமும் ஒரு முதிர்ச்சியான முடிவை அந்தப் பெண் கதாபாத்திரம் எடுப்பதாக காட்டியிருப்பார். மொத்தத்தில், பாக்யராஜின் படங்கள் பெண்களை வெறும் கவர்ச்சிப் பொருளாகவோ அல்லது எப்போதும் அழுதுகொண்டே இருக்கும் பலவீனமானவர்களாகவோ காட்டவில்லை. மாறாக, குடும்ப அமைப்பிற்குள் இருந்துகொண்டே பெண்கள் தங்களின் உரிமைகளையும், சுயமரியாதையையும் எப்படி நிலைநாட்டுவது என்பதைத் தன் கேரக்டர்கள், டயலாக்குகள் மூலம் மிக அழுத்தமாகப் பதிவு செய்தவர் பாக்யராஜ். வணிக ரீதியான படங்களில்கூட, பெண்களை வெறும் கவர்ச்சிப் பொருளாகவோ அல்லது அழுதுகொண்டே இருக்கும் பலவீனமானவர்களாகவோ காட்டவில்லை.. சுயமரியாதை மிக்கவர்களாக அந்த கேரக்டர்களை செதுக்கினார். அவரின் மறைவு நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட பேரிழப்புதான் என்றாலும், திரைக்கதை மன்னனின் இந்தப் படைப்புகள் என்றென்றும் பாக்யராஜின் நினைவை சொல்லிக்கொண்டே இருக்கும்...!!பாக்யராஜ் எதார்த்த வசனம்
அந்த 7 நாட்கள்
வீட்ல விசேஷங்க
மௌன கீதங்கள்
சுந்தர காண்டம் - கண்ணிய காட்சிகள்
பெண்களுக்கு கவுரவம், சுய மரியாதை