விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி


  • சென்னை: இசைஞானி இளையராஜா தனது 83-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். வழக்கமான பிறந்தநாள் வாழ்த்துகளை தாண்டி, பலரும் இளையராஜாவுடன் தங்களுக்குள்ள உணர்வுபூர்வமான தொடர்பை வெளிப்படுத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    முதல்வர் விஜய் பதிவு

    தமிழக முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்து பதிவில், "தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, 'அன்னக்கிளி' திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார்.

    Advertisement

    உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார். விஜயின் இந்த பதிவு ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    கமல் வாழ்த்து பதிவு

    நடிகர் கமல்ஹாசன் தனது வாழ்த்தில், "உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழவேண்டும், இசையோடு. உங்கள் கமல்.." என்று மிகவும் சுருக்கமாகவும், அதே நேரத்தில் நெகிழ்ச்சியாகவும் பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    இளையராஜா - கமல் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு ஏராளமான இசை பொக்கிஷங்களை கொடுத்துள்ள நிலையில், இந்த பதிவு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

    மு.க. ஸ்டாலின் பதிவு

    முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், "இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். 'இசைஞானி' என்று தலைவர் கலைஞர் பட்டம் சூட்டினார்.

    அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும். ராஜா என்றும் ராஜாதான்!" என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கலைஞர் கருணாநிதியுடனான இளையராஜாவின் உறவை நினைவுபடுத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

    Advertisement
    ஏ.ஆர் ரஹ்மான் தலைகனம் இல்லாதவர்.. ஆனால் இளையராஜா! வெங்கடேஷ் பட் பேசிய வார்த்தை! வந்தாச்சு பஞ்சாயத்து

    அண்ணாமலை பதிவு

    பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது வாழ்த்து பதிவில், "இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஐம்பது ஆண்டுகளாக வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் திரு இளையராஜா அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    Advertisement
    அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா!

    ரசிகர்களின் கொண்டாட்டம்

    பிரபலங்களின் வாழ்த்துகளை விட ரசிகர்களின் பதிவுகள்தான் சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் ஈர்த்து வருகின்றன. "எங்கள் வாழ்க்கையின் பின்னணி இசை", "காதலுக்கு ராஜா, பிரிவுக்கு ராஜா, சந்தோஷத்துக்கு ராஜா", "ஒரு இசையமைப்பாளர் அல்ல... ஒரு உணர்வு" என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    பல இடங்களில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியதோடு, இளையராஜா பாடல்களை ஒலிபரப்பி சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இசையால் மக்களை ஆட்கொண்டிருக்கும் இளையராஜாவுக்கு இன்று அரசியல், சினிமா, ரசிகர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் ஒரே மாதிரியான அன்பு குவிந்து வருகிறது. அதனால்தான் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தாண்டி, இன்று முழு சமூக வலைதளங்களும் ஒரே குரலில் சொல்கின்றன...

    Advertisement

    "ராஜா என்றும் ராஜாதான்!"

    English Summary

    Legendary composer Ilaiyaraaja celebrated his 83rd birthday on Monday, receiving warm wishes from political leaders, film personalities, and millions of fans across the world. Chief Minister Vijay paid tribute to the music maestro by recalling his journey from Pannaipuram in Theni district to becoming one of India’s most celebrated composers. He praised Ilaiyaraaja’s achievements, from his debut in Annakili to his globally recognized symphony works, and wished that his music would continue to inspire future generations.Actor Kamal Haasan shared a brief but emotional message, writing that Ilaiyaraaja’s music would live for hundreds of years beyond his lifetime and wished him a long and healthy life. The message resonated strongly with fans, given the iconic musical partnership between the two legends.Former Chief Minister M.K. Stalin also extended his wishes, recalling Ilaiyaraaja’s admiration for Kalaignar Karunanidhi and highlighting how the legendary leader had conferred the title “Isaignani” on the composer. Stalin praised Ilaiyaraaja’s extraordinary musical journey from Annakili to symphonic achievements, declaring that “Raja will always remain Raja.”