சென்னை: இசைஞானி இளையராஜா தனது 83வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க திரையுலக பிரபலங்கள் பலரும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் சென்று இளையராஜாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இளையராஜா மீதான தனது அன்பையும், அவருடன் இணைந்து பணியாற்றும் கனவு எப்படி நனவானது என்பதையும் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துகொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய மாரி செல்வராஜ், "நான் தற்போது என்னுடைய ஆறாவது படத்தை இயக்குகிறேன். 'வாழை' படத்தின் இன்னொரு பகுதியாக 'மஞ்சனத்தி' இருக்கும். அந்த கதையை எழுதும்போதே ராஜா சாரை நினைத்துதான் எழுதினேன். அவர்மீது எனக்கு தீராத காதல் இருக்கிறது. அந்த காதல்தான் என்னை இந்த இடம் வரை கொண்டு வந்திருக்கிறது" என்று கூறினார். அவரது இந்த வார்த்தைகள், இளையராஜாவை ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், ஒரு பெரிய கலைஞராகவும், தன்னை ஊக்கப்படுத்திய சக்தியாகவும் அவர் பார்க்கிறார் என்பதே தெரிகிறது. தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ், "நான் சிறுவயதிலிருந்தே ராஜா சாரின் இசையை கேட்டு வளர்ந்திருக்கிறேன். அவருடைய பாடல்களும் பின்னணி இசைகளும் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் அவருடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டும் என்பது என்னைப் போன்ற பலருக்கும் இருக்கும் கனவு. அந்த ஆசை எனக்கும் இருந்தது" என்றார். மேலும், "ஆனால் அந்த கனவு நிறைவேற வேண்டும் என்றால் அதற்கு முன்பு நாமும் ஒரு அளவிற்கு தகுதி பெற வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக உழைத்தேன். இன்று ஓரளவிற்கு அந்த நிலைக்கு வந்த பிறகு அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும், பெருமையும்" என்று கூறினார். இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குள் பொதுவாக இயக்குநர்கள் உள்ளிட்ட பலருக்கும் எளிதில் அனுமதி கிடைப்பதில்லை என்ற பேச்சு நீண்ட காலமாக திரையுலகில் இருந்து வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள், "பொதுவாக ராஜா சார் ஸ்டூடியோவுக்குள் யாரையும் அவ்வளவு எளிதாக அனுமதிக்க மாட்டார் என்று சொல்வார்கள். உங்களுக்கு எப்படி அந்த வாய்ப்பு கிடைத்தது?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்தபடியே பதிலளித்த மாரி செல்வராஜ், "எனக்கு நடந்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை" என்று கூறி அந்த கேள்வியை மிக எளிமையாக கடந்து சென்றார். இதே சந்திப்பில், அரசியல் தொடர்பான கேள்வியும் எழுந்தது. "விஜய் ஆட்சி அமைத்து ஒரு மாதம் ஆகிறது. அந்த ஆட்சி எப்படி இருக்கிறது?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு மாரி செல்வராஜ், "நான் இப்போது இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்திருக்கிறேன். இந்த இடத்தில் அந்த விஷயம் தேவையில்லை. அது குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் பேசிக்கொள்ளலாம்" என்று மிகவும் நிதானமாக பதிலளித்து அரசியல் விவாதத்திற்குள் செல்லாமல் தவிர்த்தார். மாரி செல்வராஜ் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, "ராஜா சாரை நினைத்துதான் அந்த கதையை எழுதினேன்", "அவர்மீது எனக்கு தீராத காதல் இருக்கிறது" போன்ற அவரது வார்த்தைகள் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன. ஒரு காலத்தில் இளையராஜாவின் பாடல்களை கேட்டு வளர்ந்த ஒரு ரசிகராக இருந்த மாரி செல்வராஜ், இன்று அதே இசைஞானியுடன் இணைந்து திரைப்படம் உருவாக்கும் நிலைக்கு வந்திருப்பது பல இளம் இயக்குநர்களுக்கும் ஒரு உத்வேகமாக பார்க்கப்படுகிறது. இளையராஜாவின் 83வது பிறந்தநாளில் வெளியான இந்த சந்திப்பு, ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.மாரி செல்வராஜ் பேட்டி
சின்ன வயதிலிருந்தே கனவு
இளையராஜா ஸ்டூடியோவில் அனுமதி
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா!
விஜய் ஆட்சி குறித்து கேள்வி
“விஜய் ஆட்சிக்கு வந்ததும் அதிரடி மாற்றங்கள்..
கனவு நனவான தருணம்