சென்னை: இந்திய இசை உலகின் அடையாளமாக திகழும் இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமான ரசிகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், அவரது பிறந்தநாளையொட்டி ஸ்டூடியோ முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற ஆசையில் காலையிலிருந்தே ரசிகர்கள் பலர் அவரது ஸ்டூடியோ முன்பு குவிந்திருந்தனர். ரசிகர்களின் கூட்டம் அதிகரித்ததால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
அப்போது வெளியே வந்த இளையராஜா ரசிகர்களை பார்த்து, "இன்று பெங்களூரில் எனக்கு சிம்போனி நிகழ்ச்சி இருக்கிறது. அதற்காக செல்ல வேண்டும். ஆனாலும், பிறந்தநாளன்று உங்களை சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் இவ்வளவு ஆர்வமாக என்னை பார்க்க வந்திருக்கிறீர்கள். கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். நீங்கள் அமைதியாக இருந்தால் நான் உங்களை சந்திப்பேன். இல்லையென்றால் நான் கிளம்பி விடுவேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது" என்று கூறியுள்ளார். இளையராஜா பேசி முடித்த பின்னரும் ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் சத்தம் போட்டு ஆர்ப்பரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சற்று கோபத்துடன் பேசும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இளையராஜா மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். எந்த சூழ்நிலையிலும் தன் எண்ணத்தை நேரடியாக வெளிப்படுத்தும் அவரது குணம் காரணமாகவே இந்த சம்பவத்தையும் பலர் இயல்பாகவே எடுத்துக் கொண்டு வருகின்றனர். 1976ஆம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய இசை உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் தனது இசை முத்திரையை பதித்துள்ளார். மேற்கத்திய சிம்போனி இசையையும், தமிழர் நாட்டுப்புற இசையையும் இணைத்து புதிய இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியவர் என்ற பெருமையும் அவருக்கே சொந்தம். அதனால் தான் இன்று வரை அவரது பாடல்கள் தலைமுறைகளை கடந்து ரசிகர்களின் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. 83வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் அவரது பாடல்கள், பின்னணி இசைகள் மற்றும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். "எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜா ஒரு சகாப்தம்", "அவரது இசை எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி", "இளையராஜா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பக்கம் வைரலாகும் அந்த வீடியோ, மற்றொரு பக்கம் ரசிகர்களின் அன்பு மழை என தனது 83வது பிறந்தநாளிலும் இளையராஜா மீண்டும் ஒருமுறை இணையத்தின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்துள்ளார். அவரது இசை போலவே, அவரைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சம்பவமும் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறி வருகிறது.ரசிகர்களிடம் பேசிய இளையராஜா
கடுப்பான இசைஞானி
ஒரு இசை வரலாறு
ஏ.ஆர் ரஹ்மான் தலைகனம் இல்லாதவர்.. ஆனால் இளையராஜா! வெங்கடேஷ் பட் பேசிய வார்த்தை! வந்தாச்சு பஞ்சாயத்து
ரசிகர்கள் கருத்து