சென்னை: தமிழக யூடியூப் உலகில் கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்பட்ட விஷயம் ஒன்று என்றால் அது யூடியூபர் இர்ஃபானின் ரூ.3650 பிரீமியம் பிரியாணிதான். சாதாரணமாக உணவகங்களை விமர்சித்து வந்த இர்ஃபான், முதல் முறையாக தனது பெயரில் பிரீமியம் பிரியாணி அறிமுகப்படுத்தியதும், அது பாராட்டுகளை விட சர்ச்சைகளையே அதிகமாக சந்தித்தது.
"ஒரு பிரியாணிக்கு ரூ.3650-ஆ?", "இந்த விலைக்கு பிரியாணியா இல்ல பைக் EMI-யா?", "பிரியாணி வாங்கினா கூடுதலா தங்க நாணயம் தருவாங்களா?" என சமூக வலைதளங்கள் முழுவதும் மீம்ஸ்கள் வெடித்தன. அதிலும் குறிப்பாக யூடியூப் சேனல்கள், மீம் பேஜ்கள், எக்ஸ் தளம் என எல்லா இடங்களிலும் இர்ஃபானின் பிரியாணிதான் ட்ரெண்டாகியது.
இர்ஃபான் அறிமுகப்படுத்திய இந்த பிரீமியம் பிரியாணியில் சாதாரண பிரியாணியை விட அதிக அளவில் இறைச்சி, உயர்தர பொருட்கள், சிறப்பு பேக்கிங், பிரீமியம் சர்விங் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறியிருந்தார். ஆனால் இதுகுறித்து விமர்சித்த சில யூடியூபர்கள், "விலை ரூ.3650 என்றாலும், அதில் உள்ள உணவின் அளவு அந்த விலைக்கு ஏற்றதாக இல்லை" என்று குற்றம்சாட்டினர். இந்நிலையில், இந்த பிரியாணியை வாங்கி சுவைத்த பிரபல யூடியூப் சேனலான VB Fun Factory-யின் வினோத் வெளியிட்டுள்ள ரிவ்யூ வீடியோவில், "இந்த பிரியாணி மோசம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ரூ.3650 கொடுத்து வாங்கும் அளவுக்கு இதில் எந்த ஒரு விஷயமும் எனக்கு தெரியவில்லை. சுவை சராசரியாகத்தான் இருந்தது. இந்த விலைக்கு ஏற்ற தரமும் அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பிரியாணியில் ஒரு கிலோவுக்கு ஒன்றரை கிலோக்கு மேல் மட்டன் பீஸ் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தாங்கள் எடை பார்த்தபோது சுமார் 700 கிராம் மட்டுமே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அளவுக்கு ரூ.3650 என்பது சாதாரண மக்களுக்கு ஏற்ற விலை இல்லை" என்று கூறியிருந்தார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வைரலானது. இந்த நிலையில் தொடர்ந்து வந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இர்ஃபான் தற்போது விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், "இந்த விஷயம் என்னை ரொம்ப பாதிச்சது. எல்லோரும் என்னை பற்றி இப்படி பேசுறாங்கன்னு என் மனைவியிடமே சொல்லி புலம்பினேன். உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருந்தது" என்று தெரிவித்துள்ளார். மேலும், "இந்த பிரியாணியை வெறும் 124 பேர் மட்டும்தான் வாங்கினார்கள். மக்கள் ஏன் இவ்வளவு எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்தேன். அதில் வந்த பணத்திலிருந்து எனக்கு 20 சதவீதம் மட்டுமே லாபம் கிடைத்தது" என்றும் கூறியுள்ளார். மேலும் இத்தனை பேரு சொல்றாங்களே சரி என்ன சொல்ல வராங்கன்னு புரிஞ்சுக்க ட்ரை பண்ணி இருக்கிறேன். அடுத்த பிரியாணி விற்கும்போது எப்படி பண்ணலாம்னு திட்டமிட்டு இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இர்ஃபானின் இந்த விளக்கத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஷயம் வேறு. அனைவரும் விலை அதிகம் என்று விமர்சித்துக் கொண்டிருக்கும்போது, "அடுத்த முறை விலையை குறைப்பேன்" என்று அவர் எங்கும் சொல்லவில்லை. அதற்கு பதிலாக, "எனக்கு கிடைத்த லாபம் மிகவும் குறைவு" என்பதையே அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து சமூக வலைதளங்களில் புதிய மீம்ஸ்களும் குவிய தொடங்கியுள்ளன. "3650 பிரியாணி சர்ச்சைக்கு பிறகும் விலையை குறைக்குறேன்னு சொல்லவே இல்லையே!", "மக்கள் கேள்விக்கு பதில் சொல்லாம, கணக்கு மட்டும் சொல்றாரு!" என பலரும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். மறுபுறம் இர்ஃபானின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். "ஒரு பிரீமியம் தயாரிப்புக்கு பிரீமியம் விலை வைப்பது தவறில்லை. வாங்க விருப்பம் உள்ளவர்கள் வாங்கலாம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஒரு தொழிலதிபராக அவர் தனது தயாரிப்புக்கான விலையை நிர்ணயிக்க உரிமை இருக்கிறது" என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விளக்க வீடியோவில், "மக்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்தேன். அடுத்த முறை பிரியாணி விற்கும்போது வேறு மாதிரி எப்படி செய்யலாம் என்று திட்டமிட்டு வருகிறேன்" என்று இர்ஃபான் கூறியுள்ளார். ஆனால் அவர் உண்மையில் விலையை மாற்றப்போகிறாரா? அல்லது அதே பிரீமியம் மாடலை தொடரப்போகிறாரா? என்பது குறித்து எந்த தெளிவான பதிலும் அளிக்காததால், சர்ச்சை இன்னும் ஓயவில்லை.பிரியாணியில் என்ன இருந்தது?
முதல் முறையாக மனம் திறந்த இர்ஃபான்
விலை குறைப்பு பற்றி மவுனம்
மக்கள் கேட்டது விலை குறைப்பு
நான் அந்த மாதிரி ஆள் இல்லை.. வருத்தம் தெரிவித்து புதிய வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்ஃபான்
ரசிகர்கள் ஆதரவு
விமர்சனத்தை புரிந்துகொண்டாரா இர்ஃபான்?