இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்


  • சென்னை: தமிழகத்தில் சாப்பாடு ரிவ்யூ என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வரக்கூடிய பெயர்களில் ஒன்று இர்ஃபான். சிறிய தெருக்கடை முதல் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபல உணவகங்கள் வரை சென்று உணவுகளை சுவைத்து தனது கருத்துகளை பகிர்ந்து வருபவர். Irfan's View என்ற யூடியூப் சேனல் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள அவர், சமீபத்தில் தனது பெயரிலேயே பிரியாணி பிராண்டை அறிமுகப்படுத்தியிருந்தார்.

    Advertisement

    இர்ஃபான் பிரியாணி

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு "Irfans View Biryani" என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த பிரியாணி சமூக வலைதளங்களில் வெளியான முதல் நாளிலிருந்தே கவனத்தை ஈர்த்தது. அதற்கு முக்கிய காரணம் அதன் விலை. ஒரு பிரியாணி பார்சலுக்கு ரூ.3650 முதல் ரூ.4000 வரை விலை நிர்ணயிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதும், இணையத்தில் இது பெரிய விவாதமாக மாறியது.

    Advertisement

    பிரீமியம் தரமான பாஸ்மதி அரிசி, உயர்தர மட்டன், ஸ்பெஷல் ரெசிபி என பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு இந்த பிரியாணி விற்பனை செய்யப்பட்டாலும், அதன் விலைதான் அதிகமாக பேசப்பட்டது. அதே நேரத்தில், முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆர்டர்களும் குறுகிய நேரத்தில் விற்றுத் தீர்ந்ததாகவும் கூறப்பட்டது.

    இர்ஃபான் பிரியாணி ரிவ்யூ

    இந்நிலையில், இந்த பிரியாணியை வாங்கி சுவைத்த பிரபல யூடியூப் சேனலான VB Fun Factory-யின் வினோத் வெளியிட்டுள்ள ரிவ்யூ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    வீடியோவில் பேசிய வினோத், "இந்த பிரியாணி மோசம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ரூ.3650 கொடுத்து வாங்கும் அளவுக்கு இதில் எந்த ஒரு விஷயமும் எனக்கு தெரியவில்லை. சுவை சராசரியாகத்தான் இருந்தது. இந்த விலைக்கு ஏற்ற தரமும் அனுபவமும் எனக்கு கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல், பிரியாணியில் ஒரு கிலோவுக்கு மேல் மட்டன் பீஸ் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தாங்கள் எடை பார்த்தபோது சுமார் 700 கிராம் மட்டுமே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் விலை மற்றும் அளவு இரண்டிலும் ஏமாற்றம் ஏற்பட்டதாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

    மேலும், "உங்களுக்கு சாப்பாடு பற்றி சொல்ல வேண்டியது கிடையாது. உலகம் முழுக்க எத்தனையோ உணவுகளை சுவைத்திருக்கிறீர்கள். ஆனால் இந்த விலை மக்களுக்கு ஏற்றதாக இல்லை. அடுத்த முறை விலையை கொஞ்சம் குறைத்தால் இன்னும் நிறைய பேர் வாங்க முடியும்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Advertisement

    இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் பல லட்சம் பார்வைகளை பெற்றது. அதன்பிறகு இர்ஃபானின் பிரியாணி குறித்து பல்வேறு விவாதங்கள் வெடிக்கத் தொடங்கின.

    குறிப்பாக, "பல வருடங்களாக மற்றவர்களின் உணவுகளை ரிவ்யூ செய்து வந்த இர்ஃபான், இப்போது தானே ஒரு உணவு பொருளை அறிமுகப்படுத்திய நிலையில் அதற்கே இப்படி எதிர்மறை விமர்சனங்கள் வருவது ஆச்சரியம்" என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பீடு

    இன்னும் சிலர் இதை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ப்ளூ சட்டை மாறன் பல திரைப்படங்களை விமர்சனம் செய்து வந்த நிலையில், அவர் இயக்கிய படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதையும் குறிப்பிட்டு, "மற்றவர்களை விமர்சிப்பது எளிது. ஆனால் நாமே ஒரு பொருளை உருவாக்கும்போது தான் அதன் சவால்கள் புரியும்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    Advertisement

    அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர், "ஒரு ரிவ்யூ வந்ததற்காக ஒரு பொருளை முழுவதுமாக தோல்வி என்று சொல்ல முடியாது. சிலருக்கு பிடித்திருக்கலாம், சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதுதான் விமர்சனங்களின் இயல்பு" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு ஒரு சிலர் இதுபோல தானே மற்ற ஹோட்டல்காரர்களும் சமைத்து இருப்பார்கள். அதை இவர் சாப்பிட்டு பார்த்துவிட்டு இவருக்கு பிடிக்கவில்லை என்று இவர் சொன்னதை கேட்டு பலரும் அந்த ஹோட்டலையே வெறுத்து இருப்பார்களே என்று கூட சிலர் வாதிடுகிறார்கள்.

    இருப்பினும், இந்த பிரியாணி விவகாரம் இர்ஃபானை மீண்டும் சர்ச்சையின் மையப்புள்ளியாக மாற்றியுள்ளது. ஏற்கனவே அவர் பல்வேறு காரணங்களால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

    Advertisement

    கடந்த காலத்தில் அவர் பாராட்டிய ஒரு உணவகம், பின்னர் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டதாக கூறி நடவடிக்கைக்கு உள்ளான சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதேபோல் தனது குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே வெளிப்படுத்திய சம்பவமும் நீண்ட நாட்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

    அதுமட்டுமல்லாமல் தன்னுடைய மனைவியுடன் சென்று சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவளித்த போது அவர் நடந்து கொண்ட விதமும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.இந்த நிலையில் தற்போது பிரியாணி விவகாரமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

    குறிப்பாக ரூ.3650 பிரியாணி என்ற ஒரு விஷயத்தை மையமாக வைத்து ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் பரவி வருகின்றன. "இந்த விலைக்கு பிரியாணியா? இல்லை பைக் EMI-யா?", "பிரியாணி வாங்கினா கூடுதல் பரிசா தங்கம் தருவாங்களா?" போன்ற காமெடி மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன.

    ரசிகர்கள் கருத்து

    சிலர் இர்ஃபானை கடுமையாக விமர்சித்து வந்தாலும், அவரது ரசிகர்கள் இந்த விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். "பிரீமியம் தயாரிப்புக்கு பிரீமியம் விலை வைப்பதில் தவறு இல்லை. வாங்க விருப்பம் இருப்பவர்கள் வாங்கலாம்" என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

    எதுவாக இருந்தாலும், தமிழக யூடியூப் உலகில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயமாக இர்ஃபானின் பிரியாணி மாறியுள்ளது. ஒரு பக்கம் விலை குறித்த விமர்சனங்கள், மறுபக்கம் ரசிகர்களின் ஆதரவு, அதோடு மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள் என சமூக வலைதளங்கள் முழுவதும் இர்ஃபான் பெயர்தான் ட்ரெண்டாகி வருகிறது.

    சாப்பாடு ரிவ்யூ மூலம் பிரபலமான இர்ஃபான், தனது முதல் பிரியாணி முயற்சியிலேயே பாராட்டுகளை விட சர்ச்சைகளையே அதிகம் சந்தித்து வருவது தற்போது இணையத்தில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

    English Summary

    Irfan: Popular food vlogger Irfan, known for his YouTube channel Irfan’s View, recently launched his premium biryani brand, Irfans View Biryani, during the Bakrid season. While the product attracted attention for its premium ingredients and limited availability, it also became a major talking point because of its high price, reportedly ranging between ₹3,650 and ₹4,000 per package.The controversy intensified after YouTuber Vinoth from the channel VB Fun Factory shared a review of the biryani. In his video, he clarified that the food was not bad but questioned whether it justified its premium price. According to him, the taste was average and did not provide the experience expected at that price point.Vinoth also claimed that while the biryani was advertised as containing more than one kilogram of mutton, the quantity measured by his team was closer to 700 grams. He suggested that Irfan consider reducing the price to make the product more accessible to a wider audience.The review quickly went viral, generating significant discussion across social media platforms. Some users pointed out the irony of a food reviewer now facing criticism for his own product. Others compared the situation to film critic Blue Sattai Maran, arguing that creating a product is far more challenging than reviewing one.At the same time, many users defended Irfan, stating that premium products can command premium pricing and that individual reviews should not determine the overall success or failure of a product. Supporters argued that consumer preferences vary and that one review cannot represent every customer's experience.The debate has also revived discussions about some of Irfan’s previous controversies, including criticism related to food reviews, public appearances, and social media activities. Meanwhile, memes about the expensive biryani continue to spread widely online.Regardless of differing opinions, Irfan’s biryani has become one of the most talked-about topics in the Tamil YouTube community, generating both criticism and support in equal measure.