கருப்புக்கு பின்னால் இந்த உண்மை சம்பவமா? சிலிர்க்க வைக்கும் சுடலைமாடன் கதை! ஐகோர்ட் மகாராஜா வரலாறு


  • சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடை போட்டு வரும் கருப்பு திரைப்படம், ரசிகர்களிடையே வெறும் மாஸ் ஆக்ஷன் படமாக மட்டுமல்லாமல், நாட்டார் தெய்வ நம்பிக்கையை மையமாகக் கொண்ட படமாகவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, படத்தில் கருப்பசாமி மனித உருவெடுத்து நீதிமன்றத்தில் இறங்கி அநீதிக்கு எதிராக போராடும் காட்சிகள் ரசிகர்களை மிரள வைத்துள்ளன.

    Advertisement

    ஆனால் இப்போது இந்தக் கதைக்கு பின்னால் ஒரு உண்மை நம்பிக்கை கதை இருக்கிறதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.

    Advertisement

    கருப்பு படத்தின் கதை என்ன?

    படத்தில் கேரளாவில் இருந்து ஒரு தந்தையும், அவரது மகளும் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அந்த இளம்பெண்ணுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுவதால், அதற்காக 60 பவுன் நகையை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்கள் வந்தவுடன் அந்த நகை திருடப்படுகிறது.

    பின்னர் போலீசார் திருடர்களை பிடித்தாலும், முழு நகையையும் ஒப்படைக்காமல் அதில் ஒரு பகுதியை அதிகாரிகள் மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். நீதிமன்றத்திற்கு சென்றாலும் அங்கேயும் அவர்களுக்கு நீதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

    வாழ்க்கையே சிதறிப்போன நிலையில் கோர்ட்டில் இருக்கும் கருப்பசாமி முன் கதறி அழுகிறார்கள். அப்போது கருப்பசாமியே மனித உருவெடுத்து வழக்கறிஞராக வந்து நீதிக்காக போராடுகிறார். இதுவே படத்தின் மையக்கரு. ஆனால் இதேபோல் ஒரு நம்பிக்கை கதை தென் தமிழகத்தில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுதான் இப்போது பேசுபொருளாகி இருக்கும் 'ஐகோர்ட் மகாராஜா' கதை.

    Advertisement

    குலதெய்வம் சுடலைமாட சுவாமி

    திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சுடலைமாடசாமி பல குடும்பங்களின் குலதெய்வமாக வழிபடப்படுகிறார்கள். அங்கு தலைமுறைகள் கடந்து சொல்லப்படும் ஒரு நம்பிக்கை கதை என்னவென்றால், வெள்ளைக்கார ஆட்சி காலத்தில் சுடலைமாடசாமிக்கு பூஜை செய்து வந்த ஒரு பூசாரி மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாம்.

    அவரை நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவருக்காக வாதாட யாரும் இல்லை. ஆதாரமும் இல்லை. நம்பிக்கையிழந்த அவர் சுடலைமாடனை நினைத்து கதறி அழுதாராம்.

    ஐகோர்ட் மகாராஜா வரலாறு

    அந்த நேரத்தில் மர்மமான ஒரு நபர் நீதிமன்றத்திற்கு வந்து, அந்த பூசாரி குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களை காட்டி சாட்சி சொன்னாராம். அதன்படி நீதிபதி பூசாரியை விடுதலை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தீர்ப்பு முடிந்ததும் அந்த நபர் அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டாராம்.

    Advertisement

    பின்னர்தான் அங்கிருந்தவர்கள் அது சாதாரண மனிதர் அல்ல... சுடலைமாடனே மனித உருவில் வந்து காப்பாற்றியதாக நம்பியதாக சொல்லப்படுகிறது. இதன் பிறகுதான் அவருக்கு 'ஐகோர்ட் மகாராஜா' என்ற பெயர் வந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயம் தூத்துக்குடி ஆறுமுகநேரி அமைந்திருக்கிறது.

    தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா ஆலயம்

    அதே ஐகோர்ட்டு மகாராஜாவை பற்றி இன்னொரு நாட்டுப்புறக் கதையும் இதேபோல் சொல்லப்படுகிறது. அதன்படி, ஆறுமுகநேரியில் சின்னான் என்ற ஒரு நபர் மாடு மேய்த்து கொண்டிருந்தாராம், அந்த நேரத்தில் ஒரு அப்பாவி நபரை சிலர் விரட்டிக்கொண்டு வந்து சுடலைமாடசாமி கோவில் அருகே கொலை செய்ய என்றார்களாம். "அப்போது அவர் நான் எந்த பாவமும் செய்யல என்னை நீங்கள் கொன்றால் சுடலைமாடன் உங்களை சும்மா விடமாட்டான்" என்று அந்த நபர் கதறியும் அவர்கள் கேட்காமல் கொலை செய்துவிட்டார்களாம்.

    Advertisement

    இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றபோது, சின்னான் சாட்சி சொல்ல வரவேண்டியிருந்தாராம். ஆனால் குற்றவாளிகள் அவரை அடித்து கட்டிப்போட்டு வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. சிக்கிய நிலையில் அவர் சுடலைமாடனை நினைத்து வேண்டியிருக்கிறார்.

    கருப்பு படத்தின் நிஜ கதை

    ஆனால் நீதிமன்றத்தில் அதே சின்னான் உருவத்தில் ஒருவர் வந்து, உண்மையை சொல்லி குற்றவாளிகளை சிக்கவைத்தாராம். பின்னர் தான் உண்மையான சின்னான் அங்கே வரவே இல்லை என்பது தெரியவந்ததாம். அதனால் சுடலைமாடனே மனித உருவில் வந்து நீதியை நிலைநாட்டினார் என்று மக்கள் நம்பியதாக கூறப்படுகிறது.

    அதேபோல இப்போதும் அந்த ஐகோர்ட்டு மகாராஜா ஆலயத்தில் பலர் முடிவுக்கு வராமல் இருக்கும் வழக்குகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள், அடுத்தவர்களின் தொந்தரவுகள் போன்ற பல விஷயங்களையும் பேப்பரில் எழுதி ஹை கோர்ட்டு மகாராஜா காலடியில் வைத்து வழிபடுகிறார்களாம். அப்படி வழிபடும் போது அந்த பிரச்சனைகள் தீர்வதாக கூறப்படுகிறது.

    Advertisement

    கருப்பு படத்துடன் ஒப்பீடு

    அப்படியானால் கருப்பு படத்தின் கரு இதிலிருந்துதானா? நேரடி உறுதிப்படுத்தல் எதுவும் இல்லாவிட்டாலும், நீதிக்காக கடவுள் மனித உருவெடுத்து வருவது, நீதிமன்றத்தில் சாட்சி சொல்லுவது, அநீதிக்கு எதிராக போராடுவது போன்ற அம்சங்கள் கருப்பு படத்துக்கும், ஐகோர்ட் மகாராஜா நாட்டுப்புறக் கதைகளுக்கும் இடையே பல ஒற்றுமைகளை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

    இதனால், "கருப்பு படத்தில் பார்த்த கதை வெறும் சினிமா கற்பனை இல்லை... மக்களின் நம்பிக்கையில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கதைகளின் பிரதிபலிப்பா?" என்ற கேள்வி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Suriya’s blockbuster film Karuppu is creating buzz not just for its box office success, but also for its story centered around divine justice. The film shows Karuppasamy taking human form as a lawyer to fight injustice in court. Following this, social media users have pointed out striking similarities with the popular Tamil folk legend of High Court Maharaja from Thoothukudi. According to local belief, Sudalai Madan appeared in human form during the British era to defend an innocent priest in court, earning the name “High Court Maharaja.” Another version of the story speaks of the deity appearing as a witness to expose murderers. While there is no official confirmation that Karuppu was inspired by this legend, the similarities have sparked major discussions among fans.