ஜெயிலர் 2 வசூல் 2-வது நாளில் எப்படி இருக்கு? ரூ.1000 கோடி வரிசையில் இணையுமா ரஜினி படம்..முழு நிலவரம்!

  • சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியிருக்கும் ஜெயிலர் 2 படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.125 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகத் தகவல் வெளியான நிலையில், 2வது நாள் வசூல் நிலவரமும் இப்போது வெளியாகியிருக்கிறது. இதன்படி, படம் வெளியான 2 நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    முதல் நாளில் இருந்த அதே வேகத்தில் 2வது நாளிலும் வசூல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால், இந்தியாவில் 2வது நாள் வசூல் முதல் நாளைவிடக் குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் வெளிநாடுகளிலும் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதால், மொத்த வசூல் ரூ.200 கோடியைத் தாண்டியிருக்கிறது.

    Advertisement

    இரண்டாவது நாள் வசூல்

    பாக்ஸ் ஆபீஸ் கணக்குகளை வெளியிட்டு வரும் சாக்னிக் தகவலின்படி, ஜெயிலர் 2 படம் இரண்டாவது நாளான அக்டோபர் 16-ம் தேதி இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.35.60 கோடி நெட் வசூல் செய்திருக்கிறது. வரியையும் சேர்த்த இந்திய மொத்த வசூல் ரூ.41.85 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் நாளில் இந்திய நிகர வசூல் ரூ.59.70 கோடியாக இருந்தது. இதனால் 2வது நாள் வசூல் குறைந்திருப்பது தெரிகிறது. நேற்று பல இடங்களில் மழை அதிகமாக இருந்ததால் வசூல் குறைந்து இருக்கிறதா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

    Advertisement

    மொழிவாரியாக பார்த்தால், தமிழ் ரிலீஸ் தான் அதிக வசூலைக் கொடுத்திருக்கிறது. தமிழ் படத்தின் 2வது நாள் வசூல் சுமார் ரூ.25.25 கோடி. தெலுங்கில் ரூ.7.25 கோடியும், இந்தியில் ரூ.2.75 கோடியும், கன்னடத்தில் ரூ.35 லட்சமும் வசூலாகியிருப்பதாக அந்தக் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழ் ரசிகர்களிடம்தான் படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாளுமே தமிழுக்கு தான் அதிக வசூல் கிடைத்திருந்தது.

    உலகளவில் ரூ.200 கோடி

    இந்த படத்தின் வசூலில் வெளிநாட்டு வருமானமும் அதிகமாகவே இருக்கிறது 2வது நாளில் வெளிநாடுகளில் சுமார் ரூ.40 கோடி வசூலானதாகவும், 2 நாட்களையும் சேர்த்து வெளிநாட்டு மொத்த வசூல் ரூ.97 கோடியை எட்டியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் ரூ.112.10 கோடி மொத்த வசூலும், வெளிநாடுகளில் ரூ.97 கோடி வசூலும் சேர்ந்து, உலகளாவிய மொத்த வசூல் ரூ.209.10 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வசூல் கணக்குகளை வெளியிடும் ஒவ்வொரு நிறுவனமும் ஒரே மாதிரியான எண்ணிக்கையைச் சொல்வதில்லை. அதனால் முதல் நாள் வசூல் மற்றும் 2 நாள் மொத்த வசூலில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. இப்போது வெளியாகியிருக்கும் கணக்குகளின்படி, ஜெயிலர் 2 இரண்டு நாட்களில் ரூ.200 கோடியைக் கடந்திருக்கிறது என்பதுதான் முக்கியமான தகவல்.

    அடுத்தடுத்த நாட்களில் வசூல்

    முதல் நாளில் இருந்த வசூலுடன் ஒப்பிடும்போது 2வது நாள் இந்திய வசூல் குறைந்திருந்தாலும், அதனால் படத்தின் மொத்த வசூல் வேகம் முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. வார இறுதி நாட்களில் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை எப்படி இருக்கிறது என்பதுதான் அடுத்த முக்கியமான விஷயம். குறிப்பாக இன்று முதல் சனி, ஞாயிறு உட்பட திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் மொத்தமாக விடுமுறை வருவதால் வசூல் அதிகரிக்கிறதா? என்பதைப் பொறுத்துதான் படத்தின் அடுத்த கட்ட வசூல் நிலவரம் தெரியும்.

    Advertisement

    ரஜினிகாந்தின் நடிப்பு, நெல்சனின் இயக்கம், அனிருத்தின் இசை என்று படத்தைப் பற்றிய பேச்சுகள் ஒருபுறம் இருக்க, மோகன்லால் காட்சிகள் தொடர்பான சர்ச்சையும் இப்போது பேசப்படுகிறது. இத்தனைக்கும் நடுவில் படம் இரண்டு நாட்களில் ரூ.200 கோடியைக் கடந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்திருக்கிறது.

    English Summary

    Jailer 2 box office: Jailer 2, starring Rajinikanth and directed by Nelson, has been released in theaters and is capturing the attention of fans. Following reports that the film grossed over ₹125 crore worldwide on its opening day, details regarding its second-day performance have now emerged. According to box office data, the film has surpassed ₹200 crore in global earnings within just two days of its release.