சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் அறிமுகமான ஜூலி, அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ஆனால் அந்த புகழுடன் சர்ச்சைகளும் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து வருகின்றன. சமூக பிரச்சினைகள், அரசியல் கருத்துகள், யூடியூப் விமர்சனங்கள், அவதூறு புகார்கள் என அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் ஜூலி, தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவால் மீண்டும் பரபரப்பின் மையமாகியுள்ளார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜூலி, "இன்று காலையில் எழுந்ததும் எனக்கு ஒரு சுவாரசியமான தகவல் வந்தது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து என்னை விசாரணைக்கு வரச் சொல்லி அழைப்பு வந்துள்ளது. நீங்கள் நினைப்பது போல கிட்னி திருட்டு ரூமர் விஷயம் இல்லை. நான் கொடுத்த புகார்களை விசாரிக்காமல் வைத்துவிட்டு, இப்போது என் மீதே வழக்கு போட்டு விசாரணைக்கு அழைக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டியுள்ளார். வீடியோவில் தொடர்ந்து பேசிய ஜூலி, "முன்பு என்னை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இரண்டு முறை புகார் கொடுத்தேன். முதல் முறையாக டிஃபமேஷன் புகார் கொடுத்தபோது, இது சிவில் வழக்கு, கோர்ட்டில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மீண்டும் புகார் கொடுத்தேன். ஆனால் அதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நான் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தவர்கள், தற்போது என்னை விசாரணைக்கு அழைத்துள்ளனர். பெண்களுக்கு எதிரான ஆன்லைன் தொல்லைகள் குறித்து தேர்தலுக்கு முன்பு நான் கடற்கரையில் போஸ்டர் ஏந்தி போராட்டம் நடத்தியதற்காகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்" என தெரிவித்துள்ளார். இதில் மேலும் அதிர்ச்சி குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார் ஜூலி. "வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் நீதிமன்ற விடுமுறை. அதனால் என்னை கைது செய்தாலும் உடனடியாக ஜாமீன் எடுக்க முடியாத சூழல் இருக்கும். அதற்காகவே திட்டமிட்டு இந்த நாளை தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது" என கூறியுள்ளார். இந்த கருத்துதான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அலிஷா என்பவர், திருச்சி சூர்யா மற்றும் முக்தார் மீது புகார் அளித்தபோது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஆனால் தன்னுடைய புகார்கள் மீது எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் ஜூலி குற்றம்சாட்டியுள்ளார். "பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நான் புகார் கொடுத்த பிறகு, என்மீதே வழக்கு வருகிறது. இது எந்த மாதிரியான நீதி?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில மாதங்களாக முதல்வர் விஜயின் அரசியல் வருகை குறித்தும், அவரது கட்சி தொடர்பான பல விவகாரங்கள் குறித்தும் ஜூலி வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். சில நேரங்களில் விஜயின் அரசியல் நிலைப்பாடுகளை கேள்வி எழுப்பியும், சில நேரங்களில் கட்சி நிர்வாக செயல்பாடுகள் குறித்து விமர்சித்தும் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் ஜூலி ஆதரவாளர்கள் இடையே சமூக வலைதளங்களில் பலமுறை கடுமையான விவாதங்களும் நடந்துள்ளன. ஜூலியின் ஒவ்வொரு பதிவும் சில மணி நேரங்களிலேயே வைரலாகி எதிர்ப்பும் ஆதரவும் பெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த ஜூலி, பின்னர் பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று தமிழ் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகமாக மாறினார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் மீது ஆதரவு மற்றும் எதிர்ப்பு இரண்டுமே உருவானது. அதன்பிறகு நடிகை, தொகுப்பாளர், சமூக ஆர்வலர், யூடியூப் பேச்சாளர் என பல முகங்களில் தன்னை வெளிப்படுத்தி வரும் ஜூலி, சர்ச்சைகள் வந்தாலும் அதற்கு நேரடியாக பதிலளிப்பதையே தனது பாணியாக வைத்திருக்கிறார். "பெண்களே கவனமாக இருங்கள். நீங்கள் புகார் கொடுக்கச் சென்றால், உங்கள்மீதே வழக்கு வரக்கூடும்" என்ற ஜூலியின் கடைசி வார்த்தைகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. உண்மையில் ஜூலி கூறுவது போல அவர்மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? விசாரணையில் என்ன நடக்கப் போகிறது? போலீஸ் தரப்பு இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. இதனால் ஜூலியின் புதிய வீடியோ, அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. "புகார் கொடுத்தவரே இன்று விசாரணைக்கு அழைக்கப்படுகிறாரா?" என்ற கேள்வியுடன் இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக மாறியுள்ளது.ஜூலி வெளியிட்ட வீடியோ
ஜூலியின் குற்றச்சாட்டு
வெள்ளிக்கிழமை விசாரணை
திருச்சி சூர்யா விவகாரத்தையும் குறிப்பிட்ட ஜூலி
விஜயை விமர்சித்து வரும் ஜூலி
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்!
ஜல்லிக்கட்டில் இருந்து பிக் பாஸ் வரை
விஜய் ஜெயித்தது ஓகே.. ஆனால் இனிதான் திமுக எவ்வளவு டேஞ்சர்னு தெரியும்.. ஜூலி வீடியோ
மீண்டும் பரபரப்பை கிளப்பிய வீடியோ