சென்னை: தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னனாக ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்திருந்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் மறைவு, ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கண்ணீரை அடக்க முடியாமல் கலா மாஸ்டர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.
வீடியோவின் தொடக்கத்திலேயே கலா மாஸ்டர் கண்ணீருடன் பேசுகிறார். "இப்போ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் எனக்கு ஒரு செய்தி வந்தது. இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் சார் இந்த உலகத்தை விட்டு பிரிந்துட்டார்னு சொன்னாங்க. என்னால அதை நம்பவே முடியல. அந்த செய்தியை கேட்டதுல இருந்து மனசே உடைஞ்சு போயிருக்கு." என்று கூறிய அவர், பேசிக்கொண்டே அழுதார். தற்போது டெல்லியில் இருப்பதால், பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட முடியாத சூழ்நிலையில் இருப்பதாக அவர் வேதனையுடன் கூறினார். "நான் இப்போ டெல்லியில் இருக்கேன். அவரோட முகத்தைக் கூட என்னால கடைசியாக பார்க்க முடியல. அதுதான் எனக்கு இன்னும் பெரிய வருத்தமா இருக்கு." என்று உருக்கமாக பேசினார். "நான் அவருடன் இரண்டு படங்களில் வேலை பார்த்திருக்கேன். அவருடன் பணியாற்றினேன்னு மட்டும் சொல்ல முடியாது. அதையும் தாண்டி அவர் எனக்கு ரொம்ப நெருக்கமான உறவினர்" என்று கூறினார். பாக்யராஜ் - பூர்ணிமா குடும்பத்துடன் இருந்த நெருக்கத்தைப் பற்றி பேசும்போது,"அவர் பூர்ணிமாவோட கணவர் என்பதாலேயே எங்களுக்கு இன்னும் நெருக்கமான உறவு. நாங்க நிறைய நேரம் ஒன்றாக இருந்திருக்கோம். நிறைய விஷயங்கள் பேசியிருக்கோம். அவ்வளவு சந்தோஷமான தருணங்களை பகிர்ந்திருக்கோம்." என்று நினைவுகளை பகிர்ந்தார். "இன்று அவருடைய கடைசி நேரத்தில் கூட என்னால அவர்கூட இருக்க முடியல. அதுதான் என்னை ரொம்ப கஷ்டப்படுத்துது."என்று கதறினார். மேலும் பாக்யராஜின் குடும்பத்தைப் பற்றி பேசும்போது, "பூர்ணிமாவும் சரி... மகன் சாந்தனுவும் சரி... மருமகள் கீகியும் சரி... எல்லாருமே அவரை நல்லபடியாக பார்த்துக்கிட்டாங்க. அவ்வளவு பாசமா, அன்பா கவனிச்சுக்கிட்டாங்க. ஆனா அவருக்கு இன்னைக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று யாருமே நினைக்கல." என்று கண்ணீருடன் பேசினார். திரையுலகில் தொடர்ந்து நிகழும் இழப்புகளை நினைத்து வேதனை அடைந்த கலா மாஸ்டர், "நாம ரொம்ப நல்லவங்களை அடுத்தடுத்து இழந்துட்டே இருக்கோம். சினிமா துறைக்கு இது ரொம்ப மோசமான காலம். இப்பதான் பாரதிராஜா சார் மறைவு எல்லாருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. அதிலிருந்து இன்னும் மீளவே இல்ல. அதுக்குள்ள பாக்யராஜ் சாரும் நம்மை விட்டுப் போயிட்டாரு. இதை ஏத்துக்கவே முடியல." என்று கூறினார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற குஷ்பு - சுந்தர்.சி மகள் அவந்திகாவின் திருமணத்தையும் நினைவுகூர்ந்த அவர், "குஷ்பு மகள் கல்யாணத்துல நான் இரண்டு நாள் இருந்தேன். அவர் கல்யாணத்துக்கு வர்றேன்னு சொல்லியிருந்தாரு. அப்போ நாங்க சந்திக்கவே இல்ல. ஒருவேளை அப்போ பார்த்திருந்தா பேசிருப்பேன். அந்த வாய்ப்பே இப்போ இல்லாம போயிடுச்சு." என்று வருத்தப்பட்டார். வீடியோவின் இறுதியில், "இப்போ பூர்ணிமாவுக்கும், சாந்தனுவுக்கும், கீகிக்கும் நான் என்ன ஆறுதல் சொல்றதுன்னே தெரியல. அவர்களுடைய வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. பாக்யராஜ் சார் இல்லாத இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தமிழ் சினிமாவுக்கு இது ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு." என்று கண்ணீருடன் தனது இரங்கலை தெரிவித்தார். கலா மாஸ்டரின் இந்த உருக்கமான வீடியோவை பார்த்த ரசிகர்கள், "உண்மையான பாசம் இருந்தால்தான் இப்படி அழ முடியும்", "பாக்யராஜ் சார் எத்தனை பேரின் வாழ்க்கையில் அன்பை விதைத்திருக்கிறார் என்பது இந்த வீடியோவிலேயே தெரிகிறது", "இன்னும் இந்த இழப்பை நம்ப முடியவில்லை" என்று சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.கதறி அழுத கலா மாஸ்டர்
முகத்தைக் கூட பார்க்க முடியல
பூர்ணிமாவின் கணவர்
வருத்தம்
அடுத்தடுத்து இழப்பு
குஷ்பு மகள் கல்யாணத்தில்
வதந்திகளை கடந்து ரீ என்ட்ரி கொடுத்த பாக்யராஜின் மகள் சரண்யா.. செமையா மாறிட்டாங்களே! குவியும் வாழ்த்து