தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

  • சென்னை: தமிழ்நாடு - கேரளா உறவு என்றாலே அது மொழி, கலாச்சாரம், வியாபாரம், சினிமா என பல்வேறு தளங்களில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த உறவாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த உறவுக்குள் அவ்வப்போது சர்ச்சைகளையும் உருவாக்குவது சில திரைப்படங்கள்தான்.

    Advertisement

    தற்போது அந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது 'Dridam' திரைப்படம்.

    Advertisement

    திரையரங்குகளில் பெரிதாக கவனம் பெறாத இந்த படம், தற்போது ஓடிடியில் வெளியாகிய பிறகு தமிழ்நாட்டில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. காரணம், படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பேர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் போல காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுதான். இதைப் பார்த்த பல தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

    பொதுவாக ஒரு படம் சர்ச்சையாகிறது என்றால் பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று கதைக்காக. இரண்டாவது அரசியலுக்காக. ஆனால் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள 'Dridam' படம் குறித்து எழுந்திருக்கும் விவாதம் இந்த இரண்டையும் தாண்டி செல்கிறது.

    Advertisement

    ஏனென்றால் பல தமிழ் ரசிகர்கள் கேட்கும் கேள்வி ஒன்று தான்..."மலையாள சினிமாவில் தமிழன் என்றாலே இன்னும் கொள்ளையனா... ரவுடியா... ஏமாற்றுக்காரனா?" இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இந்த கோபம் Dridam படத்தின் மீது மட்டும் அல்ல. பல வருடங்களாக சேர்ந்து கிடந்த ஆதங்கத்தின் வெடிப்பு.

    பல வருடங்களாக தொடரும் ஒரு பிம்பம்

    Dridam என்ற மலையாள படத்தில் 4 தமிழர்கள் தமிழ்நாட்டில் லால்குடி வங்கியை கொள்ளையடித்து விட்டு கேரளா வங்கியை கொள்ளையடிப்பது போல காட்சியமைப்பு இருக்கிறது.

    இதை தனியாக பார்த்தால், "அது ஒரு கற்பனை கதாபாத்திரம் தானே" என்று சொல்லிவிடலாம். ஆனால் அதற்கு முன்பு வந்த படங்களையும் சேர்த்து பார்த்தால் தான் பிரச்சனை புரியும். ஏனென்றால் மலையாள சினிமால தமிழர்களை திருடர்களா காட்சியமைக்கப்படுவது தொடர்கதையாக இருக்கு. சேட்டன்கள் ஏன் தமிழர்கள் மேல இவ்வளவு வன்மம், வெறுப்பை காட்டுகிறார்கள் ?! என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.

    Advertisement

    தமிழர்களை மோசமாக சித்தரித்த படம்

    மலையாள சினிமாவில் தமிழர்கள் எப்படி சித்தரிக்கப்பட்டார்கள் என்று பட்டியல் போட்டால் முதல் வரிசையில் வரும் படம் Pandippada. அந்த படத்தில் வரும் பாண்டித்துரை கதாபாத்திரம் ஒரு சாதாரண வில்லன் இல்லை. தமிழர்களைப் பற்றிய ஒரு முழு பிம்பமாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். கேரளாவை சேர்ந்தவர்கள் புத்திசாலிகள். தமிழர்களோ அதிகாரம் காட்டுபவர்கள், ஏமாற்றுபவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்ற எண்ணம் முழு படத்திலும் ஓடிக்கொண்டே இருக்கும்.

    அதிலும், "கேரளாக்காரர்களை ஏமாற்ற முடியாது" என்ற வசனம் வரும்போது சிரிப்புக்காக வைத்த வசனமாக மட்டும் தோன்றாது. ஒரு மனநிலையின் வெளிப்பாடாகவே தெரியும்.

    Advertisement

    பாண்டி என்ற வார்த்தை

    தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை குறிக்க பயன்படுத்தப்பட்ட "பாண்டி" என்ற சொல் பல மலையாள படங்களில் இழிவான அடையாளமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு படம், இரண்டு படம் அல்ல. பல தலைமுறைகள் பார்த்த திரைப்படங்களில் இந்த வார்த்தை மீண்டும் மீண்டும் வந்திருக்கிறது.

    சில இடங்களில் காமெடிக்காக, சில இடங்களில் அவமதிப்பாக, சில இடங்களில் நேரடியாக வெறுப்பாக, அதனால் தான் இன்று கூட அந்த வார்த்தை வந்தாலே பல தமிழ் ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.

    Ayyappanum Koshiyum-லும் அதே பிம்பம்

    பிரித்விராஜ் நடித்த Ayyappanum Koshiyum நல்ல படம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த படத்திலும், "13 பாண்டிகளை கொன்ற முண்டூர் மாடன்" என்ற வசனம் வருகிறது.

    Advertisement

    அந்த வசனம் வந்தபோது பலர் அதை சாதாரணமாக கடந்து போயிருக்கலாம். ஆனால் தொடர்ந்து பல படங்களில் அதே அடையாளம் பயன்படுத்தப்படும்போது அது வெறும் வசனமாக மட்டும் தெரியவில்லை.

    பழைய டெம்ப்ளேட்

    மம்மூட்டி நடித்த Karutha Pakshikal படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வரும் தமிழ் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கிறார்கள்? அந்த படத்தில் மம்மூட்டி முருகன் என்ற தமிழராக நடித்திருப்பார். அவரை மட்டும் அல்ல. பல தமிழ் கதாபாத்திரங்களையும் மிகவும் ஏழைகளாக, பிச்சை எடுப்பவர்களாக காட்டினார்கள்.

    அதோடு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கருப்புத் தோல் மேக்கப் பற்றியும் அப்போது விமர்சனங்கள் வந்தன. தமிழன் என்றால் கட்டாயம் ஏழை. தமிழன் என்றால் படிப்பறிவு இல்லாதவன். தமிழன் என்றால் சமூகத்தின் விளிம்பில் இருப்பவர்கள்.... என்பது போல ஏன் இந்த ஒரே மாதிரியான கற்பனை? என்பது பலருடைய ஆதங்கமாக இருந்து வருகிறது.

    தமிழர்கள் என்றாலே காமெடியா?

    Thenkasipattanam திரைப்படத்தில் தமிழ்நாடு பின்னணியாக இருந்தாலும், பல தமிழ் அடையாளங்கள் காமெடிக்காக பயன்படுத்தப்பட்டன. தமிழர்களின் உச்சரிப்பு, உடை, கிராமத்து பாணி போன்றவை சிரிப்புக்கான அம்சங்களாக மாற்றப்பட்டன. இது அந்த காலத்தின் பொதுவான சினிமா நடைமுறை. ஆனால் தொடர்ந்து அதே மாதிரி வந்தால் அது ஒரு ஸ்டீரியோடைப்பாக மாறிவிடுகிறது.

    Malayali Mamanu Vanakkam

    அரசியல் கலந்த காமெடியான இந்த படம் முழுக்க கேரளா - தமிழ்நாடு கலாச்சார வேறுபாடுகளை வைத்து உருவாக்கப்பட்டது. பல காட்சிகளில் தமிழர்கள் மற்றும் மலையாளிகள் பற்றிய அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டன.

    சில இடங்களில் அது சிரிப்பை கொடுத்தாலும், சில இடங்களில் தமிழர்கள் என்றால் இப்படித்தான் என்று சில பழைய டெம்ப்ளேட்களை காட்டியது.

    Annakutty Kodambakkam Vilikkunnu

    'கோடம்பாக்கம்' பற்றிய கற்பனைகள் தமிழ் சினிமா உலகத்தையும், தமிழர்களையும் ஒரு குறிப்பிட்ட பார்வையில் காட்டிய படங்களில் இதுவும் ஒன்று. இதிலும் தமிழ் அடையாளம் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்ட காமெடி வடிவத்தில் பயன்படுத்தப்பட்டது.

    Oru Yathra Mozhi

    அதே நேரத்தில் தமிழர்கள் பற்றி கண்ணியமாகவும் பெருமையாகவும் சில படத்தில் காட்டப்பட்டது அப்படி ஒரு படம் தான் சிவாஜி கணேசன் நடித்த ஒரு யாத்திரா மொழி. அந்த படத்தில் அனந்த சுப்பிரமணியம் கதாபாத்திரம் மிகுந்த மரியாதையுடன் கையாளப்பட்டது.
    தமிழர் என்ற அடையாளம் இங்கே மரியாதையாக இருந்தது.

    Narendran Makan Jayakanthan Vaka

    பார்த்திபன் நடித்த தமிழர் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. ஒரு கட்டத்தில் மலையாளி ஒருவர் "மலையாளிகள் புத்திசாலிகள்" என்று பேசும்போது, பார்த்திபன் நேரடியாக, "ஏன் தமிழன், மலையாளி என்று பிரிக்கிறீர்கள்?" என்று கேட்கிறார். அந்த காட்சி இன்றும் நினைவில் நிற்கிறது. இப்படி ஒரு சில படங்களில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சில இயக்குனர்கள் தமிழர்கள் மீது இருக்கும் வெறுப்பை தான் காட்டுகிறார்கள்.

    இப்போது காலம் மாறிவிட்டது

    ஒரு காலத்தில் கேரளா - தமிழ்நாடு ரசிகர்கள் தனித்தனியாக இருந்தார்கள். இன்று அப்படி இல்லை. தமிழ்நாட்டில் மம்மூட்டிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். மோகன்லாலுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். பகத் பாசில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் படங்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகின்றன. அதேபோல் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி படங்கள் கேரளாவில் பார்க்கப்படுகின்றன.

    இரு மாநில ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கொண்டாடும் காலத்தில் இன்னும் பழைய "பாண்டி" அரசியலை சினிமாவில் தூக்கி வருவது தேவையா?

    Dridam மீது வந்த கோபம்

    இந்த படம் வசூலில் வென்றதா, தோற்றதா என்பது முக்கியமல்ல. ஆனால் ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. இன்றைய பார்வையாளர்கள் முன்பு போல இல்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அல்லது மொழியை தொடர்ந்து எதிர்மறையாக காட்டினால் அதை கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இனிமேலாவது அந்த பழைய டெம்ப்ளேட்டை உடையுங்கள்!

    தமிழர்களை ஹீரோவாக காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் வில்லனாக காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. தமிழனை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவனை எப்போதும் தாழ்த்திக் காட்ட வேண்டிய அவசியமும் இல்லை.

    "2026-லும் தமிழன் என்றால் கொள்ளையனா?... ரவுடியா?... ஏமாற்றுக்காரனா?" இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது ரசிகர்கள் அல்ல. இனிமேல் இப்படியான கதாபாத்திரங்களை எழுதப் போகும் படைப்பாளிகள்தான்.

    English Summary

    The Malayalam film Dridam has become the center of a heated debate after its OTT release, with Tamil audiences criticizing the movie for portraying bank robbers as people from Tamil Nadu. The controversy has revived long-standing discussions about how Tamils are often depicted as rowdies, criminals, or negative characters in certain Malayalam films. Many social media users have pointed to earlier films such as Pandippada and questioned why outdated stereotypes continue to appear despite the growing cultural and cinematic exchange between Tamil and Malayalam industries. While viewers acknowledge that villains can belong to any community, many argue that repeatedly portraying a specific linguistic group negatively reinforces unfair stereotypes. The debate has once again highlighted the responsibility of filmmakers in shaping social perceptions through cinema.