ரத்தம் சொட்ட சொட்ட போராடிய மீனாட்சி சுந்தரம்... காரணம் தெரிந்தால் கண்கலங்குவீர்கள்! நிஜ ஹீரோ இவர்தான்


  • சென்னை: சினிமா ஹீரோக்கள் திரையில் சண்டை போட்டு ரசிகர்களின் கைதட்டலை வாங்கலாம். கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிக்சர் அடித்து கோடிக்கணக்கான மக்களின் பாராட்டை பெறலாம். ஆனால் உண்மையான ஹீரோக்கள் யார் என்றால், நாட்டுக்காக உயிரையே பணயம் வைக்கும் ராணுவ வீரர்கள்தான் என்று நிரூபித்திருக்கிறார் தேனி மாவட்டத்தை சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம்.

    Advertisement

    கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் பெயர் மீனாட்சி சுந்தரம். இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான "கீர்த்தி சக்ரா" விருதை பெற்ற பிறகு, அவரது வாழ்க்கை கதையும், போர்க்களத்தில் அவர் காட்டிய துணிச்சலும் மக்களை கண்கலங்க வைத்திருக்கிறது.

    Advertisement

    ராணுவ வீரரின் நிஜ கதை

    ஒரு பக்கம் நாட்டின் எல்லையில் பணியாற்றும் பொறுப்பு. இன்னொரு பக்கம் குடும்ப வாழ்க்கை. மீனாட்சி சுந்தரத்தின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல் தெரிந்தது. அந்த சந்தோஷத்தை குடும்பத்துடன் பகிர்ந்து கொண்ட சில நாட்களிலேயே மீண்டும் பணிக்காக எல்லைப் பகுதிக்கு திரும்பியிருந்தார். தனது குழந்தையை நேரில் பார்க்கும் நாள் எப்போது என்று கனவு கண்டுகொண்டிருந்த அந்த இளம் தந்தைக்கு, 15 நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையே மாறும் ஒரு சம்பவம் காத்திருந்தது.

    குல்காமில் நடந்த அந்த துப்பாக்கி சண்டை

    2024 டிசம்பர் 19. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக ராணுவம் தேடுதல் வேட்டையில் இறங்கியது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த நேரத்தில் முன்னணியில் இருந்தவர்களில் ஒருவர்தான் மீனாட்சி சுந்தரம். எதிரிகளின் குண்டு நேராக அவரது முகத்தை தாக்கியது.

    Advertisement

    ஒரு கணத்தில் அவரது கீழ்தாடை சிதறியது. முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. தாடையின் எலும்பு உடைந்து தாடையில் இருக்கும் பற்கள் ஓட சேர்ந்து கீழே விழுந்து இருக்கிறது.

    ஐயோ என்று கூட கத்தவில்லை

    சாதாரணமாக நம்மில் பலருக்கு விரலில் சிறிய காயம் ஏற்பட்டால்கூட வலியால் துடித்துவிடுவோம். ஆனால் மீனாட்சி சுந்தரம் அவ்வளவு பெரிய அடிபட்டும் கூட அப்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    ஏன் தெரியுமா?

    அவர் பதுங்கியிருந்த இடம் எதிரிகளுக்கு தெரியக்கூடாது என்பதற்காக. ஒருவேளை வலியால் கத்தினால், அந்த சத்தத்தை வைத்து தீவிரவாதிகள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடலாம். அதனால் அவருடன் இருந்த மற்ற ராணுவ வீரர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். இந்த ஒரே காரணத்திற்காக தாங்க முடியாத வேதனையையும், முகத்தில் இருந்து கொட்டிய ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் அமைதியாக இருந்திருக்கிறார்.

    Advertisement

    மூன்று மணி நேரம் மரண வலியுடன் போராடிய வீரன்

    குண்டு தாக்கிய பிறகும் அவர் அங்கிருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து எதிரிகளுக்கு பதிலடி கொடுத்தார். தனது உயிரை விட தனது கடமையே முக்கியம் என்ற மனநிலையுடன் செயல்பட்டார்.

    மூன்று மணி நேரத்துக்கும் மேலாக அந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இறுதியில் தீவிரவாதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிறகுதான் சக வீரர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    ஆபரேஷன் அறைக்குள் சென்ற பிறகும்

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும் அவரது மன உறுதி குறையவில்லை. அறுவை சிகிச்சை நடைபெறும் வரை முழு உணர்வுடனே இருந்ததாக கூறப்படுகிறது. முகம் முழுவதும் ரத்தம். உடைந்த தாடை. தாங்க முடியாத வலி. ஆனால் ஒரு முறையாவது "என்னால் முடியவில்லை" என்று அவர் சொல்லவில்லை. அதனால்தான் இன்று நாடே அவரை வணங்குகிறது.

    Advertisement

    கீர்த்தி சக்ரா விருது

    அவரது இந்த வீரத்தை பாராட்டி இந்திய அரசு "கீர்த்தி சக்ரா" விருதை அறிவித்தது. கடந்த ஜூன் 8ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு அந்த விருதை வழங்கி கவுரவித்தார். தமிழகத்திற்கும், குறிப்பாக தேனி மாவட்ட மக்களுக்கும் அது பெருமையான தருணமாக அமைந்தது.

    முதல்வர் விஜய்யின் நெகிழ்ச்சி சந்திப்பு

    விருது பெற்ற பிறகு சென்னை தலைமைச் செயலகத்திற்கு அழைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் ரூ.48 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கி கவுரவித்தார். இந்த சந்திப்பில் நடந்த ஒரு காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    Advertisement

    மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை தனது மடியில் அமர வைத்து கொஞ்சி மகிழ்ந்தார் முதல்வர் விஜய். ஒரு பக்கம் நாட்டுக்காக உயிரை பணயம் வைத்த தந்தை. மறுபக்கம் அந்த வீரனின் குழந்தையை அன்போடு அரவணைக்கும் முதல்வர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான மக்களால் பகிரப்பட்டு வருகின்றன.

    உண்மையான ஹீரோக்களை மறந்து வருகிறோமா?

    இன்று சமூக வலைதளங்களில் ஒரு ரீல் போட்டாலே லட்சக்கணக்கான பார்வைகள் கிடைக்கின்றன. ஒரு டான்ஸ் வீடியோ, ஒரு திரைப்பட டிரெய்லர், ஒரு பிரபலத்தின் பதிவு ஆகியவற்றை கொண்டாடுவதில் நாம் அதிக நேரம் செலவிடுகிறோம்.

    ஆனால் எல்லையில் நிற்கும் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையைப் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறோம்? மாதம் சில ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக அல்ல... நாட்டு மக்கள் அமைதியாக தூங்க வேண்டும் என்பதற்காக... தனது மனைவி, குழந்தை, பெற்றோர் என சொந்த வாழ்க்கையை விட்டு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் நிற்கும் மனிதர்கள்தான் ராணுவ வீரர்கள். அவர்களின் தியாகத்தை எந்த விருதாலும் முழுமையாக அளவிட முடியாது.

    மீனாட்சி சுந்தரம் சொல்லும் பாடம்

    மீனாட்சி சுந்தரத்தின் கதை ஒரு ராணுவ வீரரின் கதையாக மட்டும் இல்லை. கடமை, துணிச்சல், தியாகம் என்ற மூன்று வார்த்தைகளின் உயிருள்ள உதாரணம். தனது முகம் சிதைந்தபோதும் நாட்டை நினைத்த மனிதர்... தனது வலியை விட சக வீரர்களின் உயிரை நினைத்த மனிதர்... தனது குடும்ப சந்தோஷத்தை விட நாட்டின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய மனிதர்... அவரைப் போன்றவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள் என்று இன்று சமூக வலைதளங்களில் பலரும் பெருமையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

    கீர்த்தி சக்ரா விருது பெற்றிருப்பது மீனாட்சி சுந்தரத்திற்கு கிடைத்த மரியாதை மட்டுமல்ல... இந்திய ராணுவத்தின் தியாகத்திற்கும், தமிழ் மண்ணின் வீரத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Meenatchi Sundaram: While cinema heroes entertain on screen, real heroes often work in silence, risking their lives for the nation. One such hero is Lance Naik Meenatchi Sundaram from Theni district, whose remarkable courage during a counter-terror operation in Jammu and Kashmir has earned him the prestigious Kirti Chakra, India's second-highest peacetime gallantry award.In December 2024, during an anti-terror operation in Kulgam, Meenatchi Sundaram was stationed at the frontline when militants opened heavy fire. A bullet struck his face, shattering his lower jaw and causing severe injuries. Despite unbearable pain and heavy bleeding, he refused to cry out because revealing his position could have endangered fellow soldiers.For more than three hours, he continued to participate in the operation while battling excruciating pain. His focus remained on the mission and the safety of his team rather than his own condition. Only after the operation concluded was he evacuated for emergency medical treatment.What makes his story even more emotional is that he had recently learned he was going to become a father. Just days after sharing the joyful news with his family, he returned to duty at the border. His dedication to the nation above personal comfort has deeply moved people across the country.Recognizing his extraordinary bravery, the Government of India honoured him with the Kirti Chakra. The award was presented by Droupadi Murmu at a ceremony in New Delhi, bringing pride not only to his family but also to Tamil Nadu and the entire nation.