சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கண்ணியாக வளம் வந்த நடிகை நமீதா தனது வாழ்க்கையில் சந்தித்த மிக கடினமான காலத்தை பற்றி மனம் திறந்து பேசி இருப்பது சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது. எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் நமீதா ஒரு காலத்தில் வாழவே பிடிக்கவில்லை தற்கொலை செய்து கொள்ளலாமா? என்ற அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார் என்று சொன்னது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த நமீதா தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மச்சான்ஸ் என்று ரசிகர்களை அழைத்து தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். பிறகு தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மாவாக மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால் இந்த சந்தோஷமான வாழ்க்கைக்கு முன்பு மிகப்பெரிய மன அழுத்தத்துடன் போராடி இருக்கிறார்.
அது பற்றி சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது, சில வருடங்களுக்கு முன்பு என்னடா வாழ்க்கை இது.. உயிரோட இருக்கணுமா? வேண்டாம் என்று நினைக்கிற அளவுக்கு போயிட்டேன். மனசுல என்ன பிரச்சனை என்று கூட எனக்கு புரியல. எதுவுமே பிடிக்கல. வாழவே விருப்பம் இல்லாத மாதிரி இருந்தது என்று உருக்கமாக பேசியிருக்கிறார். மேலும் தான் சோகமாக இஸ்கான் கோவிலுக்கு சென்று தனியாக அமர்ந்து அழுது கொண்டு இருந்த சமயத்தில் தனது வாழ்க்கையை மாற்றிய ஒரு சம்பவம் நடந்ததாக கூறியிருக்கிறார். அதாவது அந்த கோவிலில் தான் நடிகை பிரியா ராமனை முதல் முறையாக நமீதா சந்தித்தாராம். அவரை பார்த்த உடனே கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டேன். நான் ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கிறேன், வாழவே பிடிக்கலைன்னு சொன்னேன். அதைக் கேட்ட பிரியா ராமன், உங்களுக்கு நான் இருக்கிறேன்.. கிருஷ்ணர் இருக்கிறார்.. எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்கு தைரியம் கொடுத்தார். அதோடு ஒரு துளசி மாலையை வாங்கி கொடுத்து இதுதான் உங்களுக்கும் மருந்து. தினமும் தியானம் செய்யுங்க, மனதை அமைதிப்படுத்துங்கள் என்று அட்வைஸ் சொன்னாங்க. அன்னைக்கு முழுக்க கோவிலிலேயே இருந்து தியானம் செய்தேன்.. அதற்குப் பிறகு அந்த பழக்கத்தை தொடர்ந்து வந்ததால் தான் மெதுவா மெதுவாக மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வந்ததாக நமீதா பேசியிருக்கிறார். மன அழுத்தத்தில் இருந்து மீண்ட பிறகு தான் தனது வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நடந்ததாக நமீதா கூறி இருக்கிறார். பிறகு வீரேந்திர சவுத்ரி உடன் காதல் மலர்ந்து திருமணம் நடந்து, இரண்டு குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன் என்று சந்தோஷமாக பேசியிருக்கிறார். ஒரு காலத்தில் தற்கொலை வரை யோசித்த ஒருவர் இன்று அதைப் பற்றி வெளிப்படையாக பேசி மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க முயற்சித்து இருப்பது பலரது பாராட்டை பெற்றுள்ளது. தற்போதைய அவசரமான உலகத்தில் வாழ்ந்து வரும் சூழலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனக்கஷ்டம் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு பணம் இருந்தாலும் மனக்கஷ்டம் வருகிறது. ஒரு சிலருக்கு அந்த பணம் இல்லாமல் கஷ்டம் வருகிறது. எது எப்படி இருந்தாலும் மனதில் அழுத்தம் வந்தால் அதை மறைத்து வைக்காமல் குடும்பத்தினரிடமோ, நண்பர்களிடமோ அல்லது மனநல நிபுணர்களிடமோ பேச வேண்டும். அதுதான் இது போன்ற மன கஷ்டத்திற்கு தீர்வு. மன கஷ்டத்தில் இருந்து கொண்டே இருந்தால் அது சொரிய சொரிய சுகமாக இருக்கும் சிரங்கு போல தான். அப்போதைக்கு வேண்டுமென்றால் அது சுகம் கொடுக்கும். ஆனால் மெல்ல மெல்ல உங்களை கொன்றுவிடும். அதனால் ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை அல்லது கஷ்டத்தை கொடுக்கிறது என்றால் அதை மீண்டும் மீண்டும் நினைத்து உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளாமல் உங்களுக்கு பிடித்த மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.நடிகை நமீதா பேட்டி
பிரியா ராமன் கொடுத்த அட்வைஸ்
தற்கொலை எண்ணம்
மன அழுத்தத்திற்கான தீர்வு