சென்னை: நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வந்தாலும், அவருடைய பழைய நட்புகளையும் திரையுலக உறவுகளையும் மறக்கவில்லை என்பதற்கு நடிகர் நாசர் சொன்ன ஒரு விஷயமே சாட்சி. நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக யாரும் கேட்காமலேயே நெப்போலியன் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக நாசர் மேடையில் பேசியிருக்கிறார்.
நெப்போலியன் மீண்டும் தமிழ்த் திரையுலகில் நடிக்க வந்திருக்கும் 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இந்த விஷயத்தை நாசர் பகிர்ந்துகொண்டார். நெப்போலியனுடன் தனக்கு 30 வருஷத்துக்கும் மேலாக நட்பு இருப்பதாகக் கூறிய அவர், தனது மகனுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில் தனக்கு ஆறுதலாக இருந்தவரும் நெப்போலியன்தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடந்தபோது, நெப்போலியனிடம் எந்த உதவியையும் தாங்கள் கேட்கவில்லை என்றும், அவராகவே முன்வந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும் நாசர் கூறினார். ஒருவருடைய கஷ்டமான நேரத்தில் துணையாக நிற்பதும், கேட்காமலேயே உதவ முன்வருவதும்தான் உண்மையான நட்புக்கு அடையாளம் என்பதுபோல நான் சொன்ன நிகழ்ச்சியுடன் பேசினார். அமெரிக்காவில் தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து வரும் நெப்போலியன், இப்போது அமெரிக்க ஆவி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கவனம் ஈர்த்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நாசர் மட்டுமல்லாமல் நடிகை ரோஜா, இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, பாண்டியராஜன் உள்ளிட்ட திரையுலக நண்பர்களும் விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். நெப்போலியனின் மகன்களான தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர். இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தின் சிறப்பே, முழுப் படப்பிடிப்பும் அமெரிக்காவிலேயே நடத்தப்பட்டிருப்பதுதான். மேலும், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் நடித்திருப்பதாக நெப்போலியன் விழாவில் தெரிவித்தார். இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் நடிப்பை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள் கிடையாது. மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள் என பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களும் நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய வேலை நேரத்துக்கு ஏற்ப படப்பிடிப்பை நடத்த வேண்டியிருந்ததாகவும் நெப்போலியன் கூறினார். விழாவில் பேசிய நடிகை ரோஜா, நெப்போலியனை நல்ல நடிகர், நல்ல அரசியல்வாதி, நல்ல தொழிலதிபர் என்பதைக் கடந்து நல்ல மனிதர் என்றும், நல்ல தந்தை என்றும் பாராட்டினார். அமெரிக்காவில் அவருடைய வீட்டுக்குச் சென்றபோது நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் தங்களை அன்பாகக் கவனித்துக்கொண்டதை மறக்க முடியாது என்றும் தெரிவித்தார். இயக்குநர் ஆர்.கே. செல்வமணியும் படக்குழுவினரின் உழைப்பைப் பாராட்டினார். மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் தங்களுடைய வேலைகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்ததையும், ஒளிப்பதிவாளர் பிரபு பல வேலைகளைத் தனியாகக் கவனித்தார் என்று கூறினார். ஒருபக்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு நெப்போலியன் மீண்டும் நடிக்க வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றால், இன்னொரு பக்கம் அவருடைய பழைய நட்பையும் உதவும் குணத்தையும் நாசர் மேடையில் பேசி இருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அமெரிக்க ஆவி' படத்தின் மூலம் நெப்போலியன் எப்படி திரையில் வரப்போகிறார் என்பதைப் பார்க்கவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.நாசர் பேச்சு
நெப்போலியன் கொடுத்த பணம்
மீண்டும் நடிக்க வந்த நெப்போலியன்
மீண்டும் இந்தியா வந்த நடிகர் நெப்போலியன்.. குழந்தைகளுக்காக செய்த செயல்! நெகிழ்ச்சி காரணம்
நடிகை ரோஜா பாராட்டு