சென்னை: வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ சாதிக்க வேண்டிய வயது. எதிர்காலத்தை பற்றிய கனவுகளோடும், புதுப்புது அனுபவங்களை தேடியும் பயணிக்க வேண்டிய நேரம். ஆனால், தந்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பிரிய வதனாவின் மரண செய்தி பலரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. வெறும் 24 வயதே ஆன அவர் உயிரிழந்த செய்தி பலரையும் கலங்க வைத்துள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த மகிழ்ச்சியான வீடியோக்களும் புகைப்படங்களும் இப்போது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன.
சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'கருப்பு' படத்திலும் பிரிய வதனா சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறாராம். செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடர்ந்து வந்த அவர், சினிமாவிலும் அடியெடுத்து வைத்திருந்த நிலையில், இப்படி ஒரு சோகமான செய்தி வெளியாகியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.
பிரிய வதனாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால், அவர் கடந்த சில நாட்களாக பகிர்ந்திருந்த பதிவுகள் பலருடைய மனதையும் கனக்க செய்கின்றன. கடைசியாக 2 நாட்களுக்கு முன்புகூட மணப்பெண் அலங்காரத்தில் போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அதற்கு முந்தைய நாள், சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் நவராத்திரி கொலு அலங்காரங்களை சுற்றிப் பார்த்து ரசித்த வீடியோவையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். அந்த பதிவுகளை பார்க்கும்போது, சமூக வலைதளங்களில் ஒருவர் பகிரும் சிரிப்பான தருணங்களை வைத்து அவருடைய மனநிலையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பது தெரிகிறது. வெளியில் மகிழ்ச்சியாக தெரியும் ஒருவர், தனிப்பட்ட வாழ்க்கையில் என்னென்ன உணர்வுகளை கடந்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்குக்கூட எல்லா நேரங்களிலும் தெரியாமல் போகலாம். பிரிய வதனாவுக்கு என்ன மனவேதனை இருந்தது, அவர் என்ன மாதிரியான சூழலை எதிர்கொண்டார் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. எனவே, அவருடைய மரணத்துக்கான காரணம் இதுதான் என்று யாரும் ஊகித்துச் சொல்ல முடியாது. ஆனால், அவருடைய மறைவு செய்தியும் அதற்கு முன்பு அவர் பகிர்ந்திருந்த பதிவுகளும் பலரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இப்படிப்பட்ட செய்திகள் வெளியாகும்போதெல்லாம், வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தாலும் அதை தனியாக சுமந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். சில நேரங்களில் மனதில் இருக்கும் வலியை யாரிடமாவது சொல்லிவிடுவது கூட ஒரு பெரிய ஆறுதலாக இருக்கும். நம்மை புரிந்துகொள்ளும் நண்பர், குடும்பத்தினர் அல்லது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் மனம் விட்டு பேசலாம். பிரச்சினை தீராதது போல தோன்றினாலும், அதிலிருந்து வெளியே வர உதவி கிடைக்கக்கூடும். குறிப்பாக, இளம் வயதில் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கும் அளவுக்கு மனவேதனை ஏற்படும்போது, அந்த நேரத்தில் தனியாக இருக்காமல் ஒருவருடைய துணையை நாடுவது முக்கியம். உடனடியாக உதவி தேவைப்பட்டால் மனநல நிபுணரையோ, நெருக்கமானவர்களையோ அணுகலாம். தற்கொலை எண்ணங்கள் தோன்றும் ஒருவர் அதை ரகசியமாக வைத்துக்கொண்டு தனியாக போராட வேண்டியதில்லை. பிரிய வதனாவின் மறைவு குறித்து வருத்தம் தெரிவிக்கும் பலரும், இளம் வயதிலேயே இப்படியொரு இழப்பு ஏற்பட்டுவிட்டதே என்று வேதனைப்படுகிறார்கள். அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. ஆனால், அவரை போன்ற இளம் வயதினரின் மரண செய்திகள் நமக்கு சொல்லும் முக்கியமான விஷயம் ஒன்றுதான், ஒருவர் சிரித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்காக அவருக்கு எந்த கவலையும் இல்லை என்று முடிவு செய்துவிட முடியாது. அதேபோல், ஒருவர் துயரத்தில் இருக்கிறார் என்றால் அவர் இப்படித்தான் என்று நாமே ஜட்ஜ் பண்ணாமல், அவருடைய பேச்சை கேட்பதும் துணையாக நிற்பதும் அவசியம். வாழ்க்கையில் இப்போது இருக்கும் ஒரு பிரச்சினைதான் எல்லாமே என்று நினைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசுவதற்கும், உதவி கேட்பதற்கும் தயங்காதீர்கள். ஒரு கடினமான காலம் வந்துவிட்டதற்காக ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்துவிட வேண்டியதில்லை. பிரிய வதனாவின் மறைவால் துயரத்தில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.கடைசி பதிவு
மன வலியை சொல்லிவிடுங்கள்
Finance with ஹரிஷ் தற்கொலை! சைபர் புல்லியிங் காரணமா? செபியின் 'சுதர்ஷன் AI' கெடுபிடியா? உண்மை என்ன?