Nooru Saami Review: நூறு சாமி படம் எப்படி இருக்கு? கதை இதுதான்... ஆனால்? ப்ளூ சட்டை மாறன் கடும் தாக்கு


  • சென்னை: விஜய் ஆண்டனி - சசி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் சேர்ந்திருப்பதால், படத்துக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும், சுவாசிகா, லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், முனிஷ்காந்த், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் இணைந்திருந்ததால், இது ஒரு தரமான எமோஷனல் குடும்பப் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

    Advertisement

    ரிலீஸுக்கு முன்பே நடந்த சிறப்பு காட்சிகளில் பலரும் படத்தை பாராட்டியிருந்தனர். சமூக வலைதளங்களிலும் "சசி திரும்பி வந்துட்டாரு", "விஜய் ஆண்டனி - சுவாசிகா கூட்டணி கலக்கியிருக்கிறது" என்ற பதிவுகள் குவிந்தன. குடும்ப ரசிகர்களுக்கும் படம் சேர்ந்துவிட்டதாக முதல் நாளே பேச்சு கிளம்பியது. பாக்ஸ் ஆபிஸிலும் படம் மெதுவாக நல்ல திசையில் நகர்கிறது என்ற தகவல்களும் வெளியானன. முதல் நாளில் இந்திய அளவில் சுமார் 75 லட்சம் ரூபாய் நெட் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    அதேசமயம், இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட, விதவை மறுமணம் மற்றும் ஒரு தாயின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சமூகக் கேள்வியை எழுப்பும் கதையாகவும் பேசப்பட்டது. சசி கூட, 'பிச்சைக்காரன்' படத்தில் தாயை சாமியாக பார்க்கச் சொன்னால், 'நூறு சாமி' தாயையும் ஒரு மனிதராக பார்க்கச் சொல்லும் படம் என்று முன்பே கூறியிருந்தார்.

    ஆனால், இப்படிப்பட்ட நல்ல நோக்கத்துடன் வந்த படத்தைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், தன்னுடைய வழக்கமான பாணியில் நேரடியாகவும், கடுமையாகவும் விமர்சித்திருக்கிறார். அவரது யூடியூப் விமர்சனம் இப்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    Advertisement

    ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ

    ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் முதலில் கதையின் அடிப்படை நோக்கத்தையே எடுத்துக்கொள்கிறார். அவர் சொல்வதாவது, "இந்தப் படத்தின் கதை ஒரு உண்மை கதை என்று சொல்கிறார்கள். சொல்லப்பட வேண்டிய கதையும்கூட. ஆனால் சொல்லிய விதத்தில் சொதப்பி வைத்துவிட்டார்கள். விதவை மறுமணம் என்பது தேவையான விஷயம்தான். இந்த தேவையான விஷயம் எப்படி கட்டாய விஷயம் என்பதற்கு சினிமாவில் கதை சொல்ல வேண்டியிருக்கிறது."

    அதாவது, படத்தின் கோர் ஐடியா தவறில்லை, மாறாக மிக முக்கியமான சமூக விவாதத்தை தொடும் கதையாம். ஆனால் அந்தக் கருத்தை திரைக்கதையாக மாற்றிய விதத்தில்தான் பெரிய பிரச்சனை இருக்கிறது என அவர் சொல்கிறார்.

    Advertisement

    படத்தின் குறை

    ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்தின் பெரிய குறையாக சொல்வது 'டீட்டெயில்' இல்லாததையே. அதைப் புரியவைக்க அவர் எடுத்துக்காட்டாக உலக சினிமாவையே கொண்டு வருகிறார்.

    "கதையில் டீட்டெயில் எதுவும் இல்லாததால் படத்தோடு ஒன்றி பார்க்க முடிவதில்லை. Children of Heaven படத்தில் தங்கைக்கு ஒரு ஷூ வேண்டும். அந்த ஷூ ஏன் முக்கியமானது என்பதை விளக்கிவிட்டு கதையை சொல்லியிருப்பார்கள். அதற்கு பிறகு அந்தப் படம் அவ்வளவு பரபரப்பாக போகும். அந்த ஷூ ஏன் தேவை என்பதை அவர்கள் அழுத்தமாக சொன்னதால்தான் அந்தப் படத்தை இன்னமும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல் இந்தப் படத்தில் அழுத்தி சொல்லவில்லை. அதனால் படம் மேம்போக்காக போய்விட்டது."

    Advertisement

    அதாவது, நூறு சாமி பேசும் பிரச்சனை முக்கியமானதுதான். ஆனால் அந்த பிரச்சனை அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏன் இவ்வளவு அவசியம், ஏன் அது உயிர் பிரச்சனையாக மாறுகிறது, ஏன் அந்தப் பெண் அந்த முடிவை எடுக்கிறாள் - இதை படத்தில் நம்முள் பதிய வைக்கும் அளவுக்கு திரைக்கதை வேலை செய்யவில்லை என்பதே அவரது கருத்து.

    விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்

    வில்லன் பிரச்சனை

    ப்ளூ சட்டை மாறன் அடுத்ததாக சுட்டிக்காட்டியது படத்தின் நெகட்டிவ் கேரக்டர் பற்றிதான். "வில்லனை காண்பிக்கிறார்கள். அந்த கேரக்டருக்குள் எந்த ஒரு மோட்டிவ்வும் இல்லை. ஊரார்கள் எல்லாம் அவரை ஏன் எதிர்க்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எதற்கும் சரியான காரணம் இல்லை."

    Advertisement

    ஒரு சமூகத் தடையை மையமாக வைத்து படம் நகரும்போது, அதற்கு எதிராக நிற்கும் மனிதர்களின் மனநிலையும் வலுவாக இருக்க வேண்டும். ஆனால் நூறு சாமியில் அந்த எதிர்ப்பு வெறும் திரைக்கதை வசதிக்காக வைக்கப்பட்டதுபோலவே தெரிகிறது; ஏன் இந்த எதிர்ப்பு? யாருக்காக இந்த எதிர்ப்பு? எதற்காக இவ்வளவு ஆவேசம்? - இவைகளுக்கான பதில் தெளிவாக இல்லையென்பதே மாறனின் விமர்சனம்.

    திரிஷ்யம் 3 எப்படி இருக்கு? கதை இதுதான்... ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது

    இசை பிரச்சனை

    ஒரு கட்டத்தில் ப்ளூ சட்டை மாறன், படத்தின் இசையையும் கடுமையாக விமர்சிக்கிறார். அவர் சொல்வது, "இசை இதில் நம்மை தவறாக வழிநடத்தியது. இந்த இடத்தில் அழுக வேண்டும் என்பதை இளையராஜா இசை சொல்லும். அது நம்மை வழிநடத்தும். ஆனால் இந்தப் படத்தில் சீரியஸான இடத்தில் காமெடி மியூசிக் இருக்கிறது. காமெடியான இடத்தில் சீரியஸ் மியூசிக் இருக்கிறது. படம் என்ன மூடில் இருக்கிறது என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை."

    இது சாதாரண குறைச்சொல்லாக இல்லாமல், படத்தின் எமோஷனல் மூவ்மெண்ட்டை முற்றிலுமாக கலைத்துவிட்ட அம்சமாகவே அவர் பேசுகிறார். ஒரு காட்சியில் பார்வையாளர் எப்படி உணர வேண்டும் என்பதை பின்னணி இசை தீர்மானிக்கும். ஆனால் நூறு சாமியில் அந்த டோன் பல இடங்களில் குழப்பமளிக்கிறது என்பதே அவரது நிலைப்பாடு.

    ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் மிகவும் வலியை கொடுத்தது இதுதானாம். "இது ஒரு ஃபீல் குட் படமாக போயிருக்க வேண்டியது. இடையிடையே க்ரைம் த்ரில்லர் படத்துக்கு போல் இசையமைத்திருக்கிறார்கள். இதில் ஒரு யூடியூப் ஃபேமிலி எல்லாம் வரும். அதெல்லாம் கதையையே வெளியே கொண்டு சென்றுவிட்டது. சசியின் படம் என்றாலே அது ஃபீல் குட்டாகவும், எமோஷனலாகவும் இருக்கும். இதுவும் அப்படி போயிருக்க வேண்டியதுதான். ஆனால் எங்கேயோ மிஸ் செய்துவிட்டார்கள்."

    இதில்தான் அவரது மொத்த விமர்சனத்தின் சுருக்கமே இருக்கிறது. ஒரு விதவைத் தாயின் தனிமை, சமூகத்தின் கட்டுப்பாடுகள், மறுமணத்தைச் சுற்றிய மனஅழுத்தம் - இவை அனைத்தும் மிக மென்மையான, உணர்ச்சிவசப்படுத்தும் திரைக்கதையில் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள். ஆனால் படத்தில் இடையிடையே வருகிற சில டிராக்கள், யூடியூப் குடும்பம் போன்ற டிராக், டோன் மாறல்கள், இசைத் தவறுகள் ஆகியவை அந்த உணர்வை சிதறடித்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

    இதே படத்தை சிலர் ஏன் பாராட்டுகிறார்கள்?

    ப்ளூ சட்டை மாறன் இவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும், நூறு சாமிக்கு கிடைக்கும் வரவேற்பு முற்றிலும் எதிர்மறையாக இல்லை. சமூக வலைதளங்களில் பலர் சுவாசிகாவின் நடிப்பை குறிப்பாக பாராட்டி வருகின்றனர். 'செல்வி' என்ற கதாபாத்திரத்தில் அவர் உடல் மொழி, பேசும் முறை, உள்ளே அடக்கிக்கொண்ட வலி, பிள்ளைகளுக்காக வாழும் தாய் என்ற பரிமாணம் ஆகியவை மிகவும் நம்பகமாக இருந்ததாக பலரும் எழுதியுள்ளனர். உண்மை சம்பவத்தில் வரும் பெண்ணை நேரில் சந்தித்து, அந்தக் கதாபாத்திரத்தின் உடல்மொழி மற்றும் மனநிலையைப் புரிந்துகொண்டே நடித்ததாக சுவாசிகா முன்பே கூறியிருந்தார்.

    அதேபோல், இந்தப் படம் ஒரு விதவைத் தாயின் மறுமணத்தை மட்டுமே பேசவில்லை; "தாய் என்றாலே தன் ஆசைகள் எல்லாம் முடிந்த மனிதரா? இல்லை அவரும் ஒரு மனிதர்தானே?" என்ற கேள்வியையும் முன்வைக்கிறது. அதனால்தான் சசி இதை 'மதர்ஹுட்' பற்றிய புதுப் பார்வை கொண்ட படம் என்று விளக்கியிருந்தார்.

    English Summary

    Director Sasi and actor Vijay Antony reunited for Nooru Saami nearly a decade after Pichaikkaran, and that alone created strong curiosity among Tamil cinema fans. The film, which also stars Swasika, Lijomol Jose, Karunas and Munishkanth, released in theatres on June 19 and opened to a mixed but largely emotional response from viewers. Early reports also said the film collected around ₹75 lakh India net on Day 1.