Pa. Ranjith: கோவை கொடூரம் கிளப்பிய அரசியல் புயல்.. விஜய் அரசை நேரடியாக கேள்வி கேட்ட பா.ரஞ்சித்


  • சென்னை: கோவை சிறுமி கொலை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டிருக்கும் கடுமையான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    பா ரஞ்சித் கருத்து

    சமூக மற்றும் அரசியல் விஷயங்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக பதிவு செய்து வரும் பா.ரஞ்சித், இந்த முறை நேரடியாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    இயக்குனர் பா ரஞ்சித் பதிவு

    அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது. சம்பந்தப்பட்ட குடும்பத்தை எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் இது" என்று முதலில் தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.

    அதோடு நின்றுவிடாமல், இந்த சம்பவத்தை வெறும் 'குற்றவாளிகள் கைது' என்ற அறிவிப்போடு முடித்து விட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் அதிகம் கவனம் ஈர்த்த வரி, "தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகியிருந்தாலும், இத்தகைய குற்றங்களுக்கு அதை காரணமாக இனி ஒருபோதும் முன்வைக்க முடியாது" என்பதுதான்.

    Advertisement

    தேர்தல் பிரசாரத்தின் போது பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து கடுமையாக பேசிய விஜய், ஆட்சிக்கு வந்த பிறகு இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பதால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வந்துவிட்டது என்பதையே பா.ரஞ்சித் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உடனடி நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் வலியுறுத்தியுள்ளார்.

    கோவை சிறுமி வழக்கு

    இதற்கிடையில் இந்த கொடூர வழக்கின் விசாரணையும் அதிரடியாக நகர்ந்துள்ளது. கோவை சூலூர் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசார் ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

    Advertisement

    சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் மூலம், சிறுமியின் குடும்பத்துக்கு பழக்கமான பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி என்பவர்தான் சிறுமியை அழைத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சுற்றிவளைத்தபோது தப்பிக்க முயன்ற கார்த்தி மேல்மாடியில் இருந்து குதித்ததால் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

    விசாரணையில், ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் மோகன் என்பவரும் குற்றவாளிக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஒருபுறம் மக்கள் கொந்தளிப்பு, மறுபுறம் அரசியல் விமர்சனங்கள் என இந்த சம்பவம் தொடர்ந்து தமிழ்நாட்டின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு முதல்வர் விஜய்யின் ஆக்சன் என்னவாக இருக்கும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது

    English Summary

    Director Pa. Ranjith has sparked major political debate after strongly reacting to the horrific Coimbatore minor murder case. In a viral statement, he expressed deep grief over the tragedy and said merely arresting the accused is not enough. His most talked-about remark was that the new Vijay-led government can no longer use transition as an excuse for such crimes, despite being only weeks into office. The statement has triggered intense discussions online, especially as Vijay had strongly campaigned on women’s safety and law-and-order issues.