சென்னை: இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவுக்கு பிறகு அவருடைய இறுதி சடங்கில் நடந்த சம்பவங்கள் இன்னும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக அந்த இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் போல முன்நின்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தவர் இயக்குநர் பார்த்திபன். அந்த நாட்களில் அவர் காட்டிய பாசமும் அர்ப்பணிப்பும் பலரையும் நெகிழ வைத்தது. ஆனால் அதே நேரத்தில் அவருக்கு வந்த ஒரு மெசேஜ் பெரிய சர்ச்சையையும் கிளப்பியது.
பார்த்திபன் பேட்டி
சமீபத்தில் அளித்த பேட்டியில் பார்த்திபன், "பாக்யராஜ் சாரின் உதவி இயக்குநராக இருந்த ஒருவரிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. 'நீதான் பாக்யராஜை பெத்து வளர்த்த மாதிரி எல்லா வேலையையும் முன்நின்று செய்கிறாய். உன்னோட கூட இருந்தவர்களை அனுசரிக்கவே இல்லை.
அதனால்தான் உன் குடும்ப வாழ்க்கையும் இப்படியாகிப் போச்சு. சீக்கிரமே நீயும் செத்துப் போயிடுவ. உன் சாவுக்கு கூட யாரும் வர மாட்டாங்க' என்று சாபம் விடுவது போல அந்த மெசேஜ் இருந்தது. அதை படிச்சதும் ரொம்ப வருத்தமா இருந்தது. அந்த மெசேஜை சாந்தனுவிடமும் காட்டினேன். ஆனா அந்த நபருக்கு நான் ஒரு வார்த்தை கூட பதில் அனுப்பலை" என்று உருக்கமாக கூறியிருந்தார்.
அந்த ஒரு பேட்டிக்கு பிறகே சமூக வலைதளங்களில் யூகங்கள் வெடித்தன. பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர்கள் யார் யார் என்று பட்டியல் போட்டு, "அது பாண்டியராஜனா?", "ஆர். சுந்தரராஜனா?" அல்லது லிவிங்ஸ்டனா? என்று ரசிகர்கள் பெயர்களை இழுத்து பேச ஆரம்பித்தனர். சிலர் வேறு சில இயக்குநர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு பதிவுகள் வெளியிட்டனர்.
இந்த விவகாரம் பெரிதாகும் நிலையில், தற்போது பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார். அந்த பதிவில், "பாக்யராஜ் சார் பற்றிய என்னுடைய பேட்டிகளில், மனிதாபிமானமற்ற ஒரு மனிதன் கக்கிய விஷத்தைப் பற்றித்தான் பேசினேன். ஆனால் அந்த நபரின் பெயரை நான் எங்கும் சொல்லவில்லை. அந்த யூகத்தின் அடிப்படையில் என் மரியாதைக்குரிய இயக்குநர்கள் பாண்டியராஜன் மற்றும் ஆர். சுந்தரராஜன் மீது சிலர் கோபமாக கருத்துகள் பதிவு செய்திருப்பதாக அறிந்தேன். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அந்த நாகரீகமற்ற நண்பரின் பெயர் யாருக்கும் தெரியாமலே போகட்டும். என் நினைவிலிருந்தும் அந்த விஷம் கரைந்து போகட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, நல்ல செய்தியையும் பகிர்ந்துள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தனது விருப்பத்தை விண்ணப்பமாக அளித்ததாகவும், அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட அந்த தீர்மானத்தின் படி, கே. பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் "நிரந்தர கௌரவத் தலைவர்" ஆக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, அந்த சங்கத்திற்கு புதிதாக கட்டப்படும் கட்டிடத்திற்கும் பாக்யராஜின் பெயர் சூட்டப்பட இருப்பதாக கூறி, "இது என் குருவுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பார்த்திபனின் இந்த பதிவு வந்த பிறகு, "பாண்டியராஜனும் இல்லை... ஆர். சுந்தரராஜனும் இல்லை என்று தெளிவாகிவிட்டது. இனிமேல் யாருடைய பெயரையும் இழுத்து பேச வேண்டாம்" என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் இன்னொரு விவாதமும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ரசிகர்கள் சில பெயர்களை மட்டுமே யூகித்த நிலையில், "இப்போது அந்த இருவரும் இல்லை என்று பார்த்திபனே சொல்லிவிட்டார். அப்படியானால் வேறு யாராக இருக்கும்?" என்று சிலர் புதிய யூகங்களை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக சில பதிவுகளில் நடிகர் லிவிங்ஸ்டனின் பெயரையும் சிலர் குறிப்பிட்டு பேசி வருகின்றனர். ஆனால், இதுவரை பார்த்திபனோ, பாக்யராஜ் குடும்பத்தினரோ, அந்த மெசேஜை அனுப்பிய நபர் யார் என்று எந்த பெயரையும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. எனவே சமூக வலைதளங்களில் வெளியாகும் யூகங்களுக்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை. இதனால், "இறந்த ஒரு கலைஞரின் நினைவுகளை வைத்து தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம். பார்த்திபனே அந்த பெயர் வெளியில் வரக்கூடாது என்று கேட்டிருக்கிறார். அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும்" என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.பார்த்திபன் விளக்கம்
பாக்யராஜ்க்கு கிடைத்த பதவி
பாக்யராஜ் இறுதி சடங்கில் கடைசி வரை நின்ற பார்த்திபன்.. கண்கலங்க வெளியிட்ட பதிவு! நெகிழ வைத்த வார்த்தை
பாக்யராஜ் தகனத்திற்கு முன் பூர்ணிமா கேட்ட ஒரு கேள்வி..