அப்பாவுக்கு புற்றுநோய்.. பாக்யராஜிடம் உதவியாளராக சேர்ந்த சமயம் நடந்த சம்பவம்.. கண்கலங்க பேசிய பார்த்திபன்


  • சென்னை: திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் மறைந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டாலும், அவரை பற்றிய நினைவுகள் மட்டும் இன்னும் குறையவில்லை. தினமும் யாராவது ஒருவர் அவருடன் வாழ்ந்த தருணங்களை பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அந்த பட்டியலில் அதிகம் பேசுபவர் இயக்குநர் பார்த்திபன். காரணம், அவர் பாக்யராஜின் உதவி இயக்குநர் மட்டுமல்ல, குருவை குடும்ப உறுப்பினர் போல நேசித்த சீடர்.

    Advertisement

    பாக்யராஜ் மறைந்த நாளில் இருந்து இறுதி சடங்கு முடியும் வரை, குடும்பத்தினருடன் நின்று ஒவ்வொரு பொறுப்பையும் பார்த்துக்கொண்டவர் பார்த்திபன்தான். பாக்யராஜ் உடலின் மீது அவர் எப்போதும் பயன்படுத்திய பேட், பேப்பர், பேனாவை வைத்து வழியனுப்பியது முதல், "அன்புடன் உங்கள் பாக்யராஜ்" என்று எழுதப்பட்ட அட்டையை அவருடன் சேர்த்து அனுப்பியது வரை, ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை நெகிழ வைத்தது.

    Advertisement

    பாக்யராஜ் பதிவு

    நேற்றுகூட அவர் வெளியிட்ட பதிவில், பாக்யராஜ் பெயரில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் "நிரந்தர கௌரவத் தலைவர்" என்ற மரியாதை வழங்கப்பட இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். அதோடு, சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கும் பாக்யராஜின் பெயர் சூட்டப்பட இருப்பதாக கூறி, "என் குருவுக்கு நான் செய்ய முடிந்த சிறிய காணிக்கை இது" என்ற உணர்வோடு எழுதியிருந்தார்.

    பார்த்திபன் பேட்டி

    இந்த நிலையில், அவர் அளித்த மற்றொரு பேட்டி தற்போது ரசிகர்களை மீண்டும் கண்கலங்க வைத்திருக்கிறது. அதில் பேசிய பார்த்திபன், "பாக்யராஜ் சார் கிட்ட உதவி இயக்குநராக சேருவதற்கு முன்பு, டப்பிங், நாடகம் என்று மாதம் ஆறாயிரம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தேன். அந்த காலத்துல அது பெரிய தொகை. ஆனா என் அப்பாவுக்கு கேன்சர். அவருடைய மாத்திரைக்கு மட்டும் மாதம் 270 ரூபாய் செலவாகும்" என்று சொல்லி சிறிது நேரம் அமைதியாகிறார்.

    Advertisement

    பிறகு தொடர்ந்த அவர், "பாக்யராஜ் சார் கிட்ட உதவியாளராக சேர்ந்தா மாதம் 300 ரூபாய் தான் சம்பளம் என்று சொன்னாங்க. அதைக் கேட்டதும் என் மனசுல ஓடிய முதல் கணக்கு... அப்பா மாத்திரைக்கு 270 ரூபாய் போயிடும். மீதமுள்ள 30 ரூபாயை வைத்து வீட்டை எப்படி நடத்தப் போறேன் என்பதுதான். ஆனாலும் அந்த வாய்ப்பை நான் விடல. பணத்தை விட, பாக்யராஜ் சார் கிட்ட கத்துக்கிறதுதான் பெரிய விஷயம் என்று நினைச்சு சேர்ந்துட்டேன்" என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

    வாழ்க்கை உணர்த்திய பாடம்

    அந்த 300 ரூபாய் சம்பளம் தான், பின்னாளில் தமிழ் சினிமாவுக்கு ஒரு பார்த்திபனை கொடுத்தது என்பதுதான் இன்று பலரும் பேசும் விஷயம். புதிய பாதை படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான பார்த்திபன், முதல் படத்திலேயே தேசிய விருது வென்றார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கினார். ஆனால் அந்த வெற்றியின் பின்னால் இருந்த அடித்தளம் பாக்யராஜ் கற்றுக்கொடுத்த பாடங்கள்தான் என்று அவர் பலமுறை சொல்லியிருக்கிறார்.

    Advertisement
    பாக்யராஜ் தகனத்திற்கு முன் பூர்ணிமா கேட்ட ஒரு கேள்வி..

    குறையாத பாசம்

    அதனால்தான் பாக்யராஜ் மறைந்த பிறகும், ஒவ்வொரு பேட்டியிலும் அவரைப் பற்றிய புதிய நினைவுகளை பகிர்ந்து வருகிறார். ஒரு பேட்டியில் பேசும்போது பாக்கியராஜ் இறந்த பிறகு அவர் கண்ணாடியை கழற்றலாமா என்று பூர்ணிமா கேட்ட தருணத்தை நினைத்து உருகுகிறார். இன்னொரு நாள், அவருடன் கடைசியாக பேசியதை நினைத்து அழுகிறார். மறுநாள், அவருக்காக எழுத்தாளர் சங்கத்தில் நிரந்தர மரியாதை வாங்கிக் கொடுக்கிறார்.

    பாக்யராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்ட அடுத்த நொடி... நடந்த சம்பவம்..! கண்கலங்க பேசிய நட்டி
    Advertisement

    இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், "குரு - சீடன் உறவு என்றால் இதுதான். பாக்யராஜ் உயிரோடு இருந்தபோதும் இவ்வளவு பாசம் காட்டினார். அவர் மறைந்த பிறகும் அதே மரியாதையோடு நினைத்து பேசிக்கொண்டே இருக்கிறார் பார்த்திபன்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

    சில உறவுகள் ரத்த உறவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனதால் உருவாகும் பந்தங்கள், காலம் கடந்த பிறகும் உடையாது என்பதற்கு பாக்யராஜ் - பார்த்திபன் உறவும் உதாரணமாக மாறியுள்ளது.

    English Summary

    Parthiban: Director Parthiban has shared a deeply emotional memory about the early days of his career with his mentor K. Bhagyaraj. He revealed that before joining Bhagyaraj as an assistant director, he was earning ₹6,000 a month through dubbing and theatre work. However, despite his father undergoing cancer treatment and spending ₹270 every month on medicines, Parthiban accepted an assistant director's job that paid only ₹300 per month.