சென்னை: ஜூனியர் என்டிஆர் - த்ரிவிக்ரம் கூட்டணியில் உருவாகும் புது படத்தின் ஷூட்டிங் கூட இன்னும் தொடங்கவில்லை. ஆனால், படம் தொடர்பாக வெளியான ஒரே ஒரு வரி சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை கிளப்பி இருக்கிறது. அதிலும் குறிப்பாக முருக பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது பேசுபொருளாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் நாக வம்சி, ஜூனியர் என்டிஆர் - த்ரிவிக்ரம் இணையும் புது படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். அந்த போஸ்டரில், "சிவனின் மகன்... பார்வதியின் பெருமை... என்றென்றும் தேவசேனையின் தளபதி" என்ற வரிகளுடன் முருகப் பெருமானை மையமாகக் கொண்ட கதை என்பதற்கான க்ளூ கொடுக்கப்பட்டது.
ஆனால் அதைவிட அதிகமாக கவனம் ஈர்த்தது இன்னொரு டேக்லைன். "Born in the North... Forged in the Heartland... Worshipped in the South..." என்று நாகவம்சி போஸ்ட் தான் தற்போது சர்ச்சையின் மையமாக மாறியுள்ளது.
இந்த ஒரு வரியை பார்த்த பல தமிழ் ரசிகர்களும் முருக பக்தர்களும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். "முருகன் தமிழர்களின் கடவுள். அவரை வட இந்தியாவோடு இணைத்து காட்டுவது சரியல்ல", சினிமாவுக்காக வரலாற்றை மாற்றாதீர்கள், கதைக்காக கலாச்சாரத்தை திரிக்க வேண்டாம் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இன்னும் கடுமையாக, முருகனை வட இந்தியர் போல காட்டி படம் எடுத்தால் தமிழ்நாட்டில் அந்த படம் வெளியாகவே முடியாது என்றும் எச்சரிக்கை கொடுக்கிறார்கள். இந்த விவாதத்தில் பலர் சங்க இலக்கியங்களையும் எடுத்துக் கூறி வருகின்றனர். தொல்காப்பியத்திலேயே சேயோன் என்ற பெயரில் முருகன் குறிஞ்சி நிலத்தின் கடவுளாக குறிப்பிடப்பட்டிருக்கிறார். ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. அப்படியிருக்க வடக்கில் பிறந்தவர் என்று ஏன் எழுத வேண்டும்? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். அதோடு, முருகனை ஒரு சினிமா கேரக்டராக மட்டும் பார்க்க முடியாது. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக அவர் இருக்கிறார். அதனால் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் தேவை என்றும் கருத்துகள் பதிவாகி வருகின்றன. அதே நேரத்தில் படக்குழுவுக்கு ஆதரவாகவும் ஒரு தரப்பு குரல் கொடுத்து வருகிறது. அவர்கள், "முருகன் தமிழர்களின் தமிழ் கடவுள் என்பது உண்மை. ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களில் கார்த்திகேயன், சுப்பிரமணிய சுவாமி என்ற பெயர்களில் வழிப்படுகிறார்கள். நாகவம்சியின் போஸ்டடில் இருந்த வரி படத்தின் கதையோடு தொடர்புடையதாக இருக்கலாம். முழு கதையையும் தெரியாமல் முடிவு சொல்ல வேண்டாம்" என்று கூறி வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு இதுவரை ஜூனியர் என்டிஆரோ, இயக்குநர் த்ரிவிக்ரமோ, தயாரிப்பாளர் நாக வம்சியோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பலவிதமான யூகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சிலர், "அந்த 'Born in the North' என்பது முருகப் பெருமானைப் பற்றிய வரி இல்லை. கதையின் ஹீரோவின் பயணத்தை குறிக்கலாம்" என்றும் கூறுகிறார்கள். ஆனால் அதிகாரப்பூர்வ விளக்கம் வராததால் விவாதம் இன்னும் அடங்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக புராணக் கதைகளை மையமாக வைத்து பல மொழிகளில் பெரிய படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் மதம், வரலாறு, கலாச்சாரம் போன்ற விஷயங்களில் சின்ன வார்த்தை கூட பெரிய சர்ச்சையாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. இப்போது ஜூனியர் என்டிஆர் - த்ரிவிக்ரம் படத்துக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு டேக்லைனில் வந்த சில வார்த்தைகள் மட்டுமே வெளியான நிலையில் இவ்வளவு பெரிய விவாதம் வெடித்திருப்பதால், படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகும் போது இன்னும் என்ன மாதிரியான ரியாக்ஷன் வரும் என்ற எதிர்பார்ப்பும் திரையுலகில் அதிகரித்துள்ளது. இந்த சர்ச்சையை பார்த்த பலரும் இது நாக வம்சிக்கு புதுசு இல்லை என்று சோசியல் மீடியாவில் கருத்து சொல்லி வருகின்றனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பாளர் நாக வம்சி தன்னோட படங்களை விளம்பரப்படுத்தும் விதத்திலும் பேட்டிகளிலும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் என்று பெயர் வாங்கி இருக்கிறார். ஏற்கனவே டாக்கு மகாராஜ் படம் வெளியான போதும் லக்கி பாஸ்கர் படம் ப்ரோமோஷன் போதும் அவர் பேசிய சில கருத்துக்கள் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது.பக்தர்களின் கேள்வி
சங்க இலக்கிய ஆதாரம்
ரசிகர்கள் கருத்து
படக்குழு அமைதி
முருகன் தமிழ் கடவுள் இல்லைங்க.. வடநாட்டில் பிறந்தவர்?.. என்டிஆர் படத்தின் போஸ்ட்டால் சர்ச்சை!
சினிமாவா? நம்பிக்கையா?