சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ள 'கருப்பு' திரைப்படம் தற்போது வசூல் சாதனைகளை முறியடித்துக் கொண்டிருக்கிறது. சூர்யாவின் திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் படம் வெற்றிநடை போடும் இந்த நேரத்தில், படத்தின் வெற்றியைச் சுற்றி புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.
திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் மற்றும் தயாரிப்பாளரான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'கருப்பு' படத்தின் வெளியீட்டிற்கு முன்பு நடந்த சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "கருப்பு படம் வெளியாகும் கடைசி இரண்டு நாட்கள் நாங்கள் பட்ட கஷ்டம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும். ஏற்கனவே அந்த படம் கடந்த வருட தீபாவளியின் போது வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அப்போது எதிர்பார்த்தது போல வெளியிட முடியவில்லை. பிறகு வெளியிட்டு தேதி அறிவித்த பிறகும் சிக்கல்கள் வந்தது. அந்த நேரத்தில் சூர்யாவைத் தவிர வேறு யாரும் எங்களுக்காக வரவில்லை. சூர்யா மட்டும்தான் எங்களுடன் நின்றார். நாங்கள் சந்தித்த பிரச்சனைகளை நேரில் பார்த்தார். ஆனால் இயக்குநர் காருக்குள் உட்கார்ந்து அழுதாரே தவிர, பிரச்சனைகளை சமாளிக்க வெளியில் வரவில்லை. இப்போது படம் வெற்றி அடைந்த பிறகு காலரை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக சென்று பெருமை பேசுகிறார். படத்தின் வெற்றிக்கு முழு காரணம் அவர்தான் என்பதுபோல நடந்துகொள்கிறார்" என கடுமையாக விமர்சித்துள்ளார். திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்க, மற்றொரு தரப்பினர் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில்தான், நேரடியாக யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ஆர்.ஜே.பாலாஜி தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட பல நெருக்கமான புகைப்படங்களையும், இரவு நேரத்தில் இருவரும் காரில் பயணம் செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதனுடன் அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. "From day ONE, you believed in me. அந்த ஒரு நம்பிக்கைதான் என் கனவை நிஜமாக்கியது. அந்த ஒரு ஆதரவே என் வாழ்க்கையில் புதிய பயணத்தின் தொடக்கமாக மாறியது. Boom... Karuppu happened! உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியே இந்த மெகா பிளாக்பஸ்டர் வெற்றியாக மாறியது. நடிகர் சூர்யா சார் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமாகியிருக்காது. என் வாழ்க்கையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். இந்த நம்பிக்கைக்கும், மரியாதைக்கும், நம்முடைய அழகான உறவுக்கும் நன்றி" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வெளியாகிய சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதனை பகிர்ந்து வருகின்றனர். பலரும் இதை திருப்பூர் சுப்பிரமணியத்தின் கருத்துக்கு மறைமுக பதிலாகவே பார்க்கின்றனர். ஒருபுறம் படத்தின் வெற்றிக்கு யார் காரணம் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சூர்யா - ஆர்.ஜே.பாலாஜி இடையேயான நம்பிக்கையும் நட்பும் தான் 'கருப்பு' வெற்றியின் உண்மையான அடித்தளம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வசூல் சாதனைகளை குவித்து வரும் 'கருப்பு' திரைப்படம் தற்போது 340 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் வெற்றியை விட அதைச் சுற்றியுள்ள இந்த புதிய சர்ச்சை தான் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.தயாரிப்பாளர் பேட்டி
சூர்யா சப்போர்ட்
ஆர் ஜே பாலாஜி பதிவு