Ravi Mohan: ரவி மோகன் உண்மையில் இப்படிப்பட்டவர்! வெளியே தெரியாது.. பிரபல இயக்குனர் வருத்தம்


  • சென்னை: நடிகர் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கண்கலங்கியபடி உணர்ச்சிவசப்பட்டு பேசிய வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எப்போதும் அமைதியாகவும், சிரித்த முகத்துடனும் காணப்பட்ட ரவி மோகன் இவ்வளவு உடைந்து பேசுவதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இயக்குனர் மீரா மகதி வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    இயக்குனர் பதிவு

    Double Tuckerr படத்தின் இயக்குனரான மீரா மகதி, ரவி மோகன் பற்றி தன்னுடைய சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "நான் பார்த்த ஜெயம் ரவி யார் என்பதை என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் சொல்லிவிடும்" என்று தொடங்கி உருக்கமாக பல விஷயங்களை கூறியுள்ளார்.

    Advertisement

    அவரது பதிவின்படி, 2024-ல் வெளியான Double Tuckerr படம் உருவாகிய காலத்தில் தாங்கள் புதுமுக குழுவாக இருந்ததால் பல அவமானங்களை சந்தித்ததாக கூறியுள்ளார். புதுமுக ஹீரோ, புதிய இயக்குனர் என்பதால் சினிமா உலகிலிருந்தே பெரிதாக ஆதரவு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    கதாநாயகி தேடுவது முதல் இசையமைப்பாளர் தேர்வு வரை பல சிரமங்களை சந்தித்தாராம்.. கதை பிடித்திருந்தும் பல கதாநாயகிகள் நடிக்க மறுத்ததாகவும், பெரிய இசையமைப்பாளர்கள் கூட தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருகட்டத்தில், பெரிய இசையமைப்பாளர் ஒருவரை சந்தித்த அனுபவமும் மனவேதனையை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    படம் முடிந்த பிறகும் டீசர் வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு, ஆடியோ வெளியீடு என ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டிய நிலை இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். படத்தின் ஹீரோ தீரஜ் மருத்துவராக இருப்பதால் அவருக்கு சினிமா உலகில் தொடர்புகள் இருந்தும், பலர் அழைப்பை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    ரவி மோகன் செய்த உதவி

    சில பிரபல இயக்குனர்களை நேரடியாக அழைத்தும், இது என்ன படம் என்று கூட தெரிந்து கொள்ள விருப்பம் காட்டவில்லை என்று அவர் வேதனையுடன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஏற்கனவே பிரபலமான முகங்கள், established குழுக்கள் என்ற அரசியல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    ஆனால் இந்த சூழ்நிலையில் ஒரே ஒருவர் மட்டும் எந்த இமேஜ் கணக்கும் பார்க்காமல் உதவிக்கு வந்தார் என்றும், அவர் ரவி மோகன் தான் என்றும் மீரா மகதி கூறியுள்ளார். ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி சென்னை நகரத்திலிருந்து தொலைவில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடந்ததாகவும், அத்தனை தூரத்துக்கும் ரவி மோகன் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். "அவர் வந்த விதமே வேற மாதிரி. ஒரு பெரிய ஹீரோ என்ற எண்ணமே அவரிடம் இல்லை. நம்மோடு இருந்த நண்பர் போல சாதாரணமாக பேசினார்" என்று அவர் கூறியுள்ளார்.

    அதோடு மேடையில் ஏறி உற்சாகமாக டான்ஸ் ஆடி நிகழ்ச்சியை சிறப்பித்ததாகவும், அதன் பிறகுதான் பலரின் கவனம் தங்கள் படத்தின் மீது திரும்பியது என்றும் குறிப்பிட்டுள்ளார். விநியோகஸ்தர்கள் முதல் மீடியா வரை அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் படத்தை கவனிக்க ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஜெயம் ரவியின் பெருந்தன்மை

    மிகவும் நெகிழ்ச்சியான ஒரு சம்பவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் மாணவர்கள் ரவி மோகனை சூழ்ந்தபோது, அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி உதவிய ஒரு சாதாரண நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் எண்ணை வாங்கி, காரில் சென்றபடியே அவருக்கு கால் செய்து நன்றி கூறியதாக தெரிவித்துள்ளார். "அந்த சின்ன விஷயத்துக்கும் நன்றி சொல்லும் மனசு அவருக்கு இருக்கு" என்று அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

    "எல்லோரும் அரசியல் கணக்குப் பார்த்த நேரத்தில், எந்த லாப நஷ்டமும் யோசிக்காமல் வந்தவர் ரவி மோகன். என் பார்வையில் அவர் வெள்ளை மனசு கொண்ட நல்ல மனிதர்" என்றும் மீரா மகதி கூறியுள்ளார்.

    Advertisement

    இறுதியாக, "நல்லவனாக இருப்பவர்களை இந்த சமூகம் தான் அதிகமாக சோதிக்கும் போல. இன்று அந்த நல்ல மனிதர் ஒரு கடினமான சூழ்நிலையில் சிக்கியிருக்கிறார். ரவி மோகன் சார், நீங்கள் இதையெல்லாம் கடந்து வருவீர்கள். எங்களுடைய பிரார்த்தனை எப்போதும் உங்களோடு இருக்கும்" என்று தனது பதிவை முடித்துள்ளார்.

    இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ரவி மோகனை விமர்சித்தவர்களும், இந்த பதிவை பார்த்த பிறகு அவரைப் பற்றிய வேறொரு கோணத்தை புரிந்து கொள்ளலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Jayam Ravi, now known as Ravi Mohan, has built a reputation not only as a successful actor but also as someone admired for his humility and generosity. Over the years, fans and industry colleagues have often spoken about his kind-hearted nature, calm personality, and willingness to support others. Despite personal controversies making headlines recently, many continue to remember and appreciate the actor’s positive qualities and contributions to Tamil cinema.