சென்னை: தமிழ் சினிமாவில் சில படங்கள் வெறும் வெற்றிப்படங்களாக மட்டும் இல்லாமல், தலைமுறைகள் நினைவில் வைத்திருக்கும் உணர்வுகளாக மாறிவிடும். அப்படிப்பட்ட பட்டியலில் நிச்சயம் இடம் பெறும் படம் 'காக்கா முட்டை'. இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 2015-ல் வெளியான இந்த படம், சாதாரண ஏழைச் சிறுவர்களின் ஆசை, பசி, வாழ்க்கை போராட்டம், சமூக வேறுபாடு ஆகியவற்றை மிக எளிமையாகவும் மனதை உருக்கும் விதமாகவும் சொல்லி ரசிகர்களின் இதயத்தை வென்றது.
'பீட்சா சாப்பிட வேண்டும்' என்ற ஒரு சாதாரண ஆசையை மையமாக வைத்து உருவான இந்த படம், இந்திய அளவில் பெரிய வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதையும் வென்றது. குறிப்பாக பெரிய காக்கா முட்டை, சின்ன காக்கா முட்டை கதாபாத்திரங்களில் நடித்த சிறுவர்கள் ரசிகர்களின் மனதில் இன்னும் அதே முகத்தில்தான் இருக்கிறார்கள். அந்த சின்ன காக்கா முட்டை ரமேஷ் பற்றிய ஒரு வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், 'காக்கா முட்டை' படத்தில் அவருடைய அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுடன் ரமேஷ் கலந்து கொண்டார். அந்த தருணமே பலருக்கு செம்ம nostalgia moment ஆக மாறிவிட்டது. காரணம், அந்த படத்தில் சின்ன பையனாக இருந்த ரமேஷ் இப்போது ஆளே மாறி பெரிய இளைஞனாக இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசும்போது ரமேஷ் மிகவும் ஜாலியாக, "நானும் குழந்தையாகவே இருந்திருக்கலாம்னு தோணுது. இப்போ வெளியே போனா எல்லாரும் 'இவ்வளவு வளர்ந்துட்டியான்னு' கேக்குறாங்க. அதுக்காக நான் என்ன பண்ண முடியும்? எனக்கும் வயசு ஆகுது, மாற்றங்கள் நடக்குது. எல்லாரும் அப்பதான் க்யூட்டா இருந்தேன்னு சொல்லும்போது, ஏன்டா பெரிய பையனா வளர்ந்தோம்... அப்படியே சின்ன பையனாவே இருந்திருக்கலாமேன்னு தோணும்" என்று கூறினார். அதை கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் உடனே பாசமாக அவரது முதுகை தட்டி, "நீ இப்பவும் குழந்தை தான்டா" என்று சொன்னார். அதற்கு ரமேஷ் சிரித்தபடி, "வளர்ந்த குழந்தை... அவ்வளவுதான்" என்று பதிலளித்தார். இந்த cute interaction தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரமேஷின் சினிமா பயணமும் சுலபமானதாக இருக்கவில்லை. 'காக்கா முட்டை' மூலம் தேசிய விருது பெற்ற பிறகு பெரிய வாய்ப்புகள் குவியும் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி நடக்கவில்லை. மொட்ட சிவா கெட்ட சிவா, அறம், பிழை, தமிழ் ராக்கர்ஸ் போன்ற சில படங்களில் நடித்தாலும், ஹீரோ லெவலுக்கு முன்னேற முடியவில்லை. சமீபத்திய ஒரு பேட்டியில், வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை அவர் உருக்கமாக பகிர்ந்திருந்தார். "நான் நடித்த படங்கள் ஹிட். ஆனாலும் அடுத்த கட்டத்துக்கு போக முடியல. ஒரு நேரத்தில் வீட்டுக்கு திரும்ப போக கூட காசு இல்லாத நிலை வந்தது. எனக்கு ஆதரவா இருந்தது என் அம்மாதான்" என்று கூறியிருந்தார். இப்போது இந்த வைரல் வீடியோவை பார்த்த 90s, 2K கிட்ஸ் பலரும், "நாங்க காக்கா முட்டை பார்த்தப்போ ஸ்கூல் படிச்சுட்டு இருந்தோம்... இந்த பையன் இப்போ இவ்வளவு வளர்ந்துட்டானே!" என்று ஆச்சரியப்படுகிறார்கள். ஒரு காலத்தில் பீட்சாவுக்காக ஓடிய அந்த சின்ன பையன், இன்று வாழ்க்கைக்காக போராடும் இளைஞனாக மாறியிருப்பது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது.காக்கா முட்டை படம் பின்னணி
சின்ன காக்கா முட்டை
குழந்தையாகவே இருந்திருக்கலாம்
ரசிகர்கள் கருத்து