எஸ்.ஜானகி வந்து நின்றதுமே... முணுமுணுத்த உதடுகள்! சிம்மாசனத்தில் உட்கார வைத்த 'சிங்கார வேலன்'

  • சென்னை: எஸ்.ஜானகி நம்மை விட்டு பிரிந்து சென்றார்.. 60 வருடங்கள், 17 மொழிகள் 48 ஆயிரம் பாடல்கள், 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகள் என நீளும் பட்டியலை நம் முன்வைத்து விட்டு எங்கோ பறந்து சென்றுவிட்டது இந்த கானக்குயில்.. கண்களை அகல அகல விரிய செய்யும் அவரது சாதனைகளை சிலவற்றை நினைவுகூர்வதில் "ஒன் இந்தியா தமிழ்" பெருமை கொள்கிறது!!

    Advertisement

    1962-ம் ஆண்டு "கொஞ்சும் சலங்கை" படத்தில் 'சிங்கார வேலனே தேவா' என்ற பாடல் தயாராகிறது.. இசை எஸ்.எம்.சுப்பையாநாயுடு.. அது மிகவும் கடினமான பாடலும்கூட. தொழில்நுட்பம் அவ்வளவாக இல்லாத காலகட்டமும்கூட.

    Advertisement

    எந்த பாடலானாலும் அநாயாசமாக பாடிசெல்லும் பி.சுசிலா, லீலா போன்றோராலேயே அந்த பாட்டை பாடமுடியவில்லையாம்.. யாரை அழைத்து அதை பாடவைப்பது என்ற குழப்பம் வந்தது.. பிரபலமடையாத ஒன்றிரண்டு பாடல்களை அப்போது பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகியை அழைத்து வந்து, இந்த பாட்டை பாடமுடியுமா என்று கேட்டார்கள். முடியும் என்றார் நம்பிக்கையோடு...

    அன்னக்கிளி தந்த சிம்மாசனம்

    "கத்துக்குட்டி என்னத்த பாடபோகிறது" என்று சுற்றியிருந்தோர் மனதில் ஒரு அசட்டு எண்ணம் ஓடியது.. ஆனால், அத்தனை சந்தேகங்கள், கணிப்புகளையும் பொசுக்கிவிட்டு, அந்த இளம் வயதிலேயே ஒரே டேக்கில் பாடி அசத்தினாராம் எஸ்.ஜானகி.. இந்த பாடலுக்கு பிறகுதான், ஜானகியின் பெயர் தென்னிந்தியாவில் வெகு வேகமாக பரவ தொடங்கியது!!

    Advertisement

    சினிமா வரலாற்றின் அதிசய நிகழ்வான இளையராஜாவின் வரவுக்குபிறகு, இசையின் தடம் புதிய பாதையில் பயணிக்க தொடங்கியது. அன்னக்கிளி படத்தில் "மச்சான பாத்தீங்களா" என்ற ஜானகியின் குரல் திரையின் சிம்மாசனத்தில் தூக்கி உட்கார வைத்தது. தன்னுடைய பாடல்களில் ஜானகியின் முழு திறமையையும் பயன்படுத்தியதில் பெரும்பங்கு இசைஞானி இளையராஜாவுக்குதான் போய் சேரும்.

    மாடுலேஷன், வாய்ஸ் ரேஞ்ச்

    ஜானகிக்கு பாடல்களில் வெரைட்டி பலவிதம்.. மாடுலெஷன் பலவிதம்.. வாய்ஸ் ரேஞ்ச் பலவிதம்.. பாட்டி, அம்மா, மங்கை, குழந்தை... என ஒரு உறவையும் விட்டுவைக்கவில்லை ஜானியம்மா.. அவ்வளவு ஏன், ஆண் குரலைகூட விட்டுவைக்கவில்லை...

    Advertisement

    இளையராஜா தன்னுடைய பாடல்களில் என்ன உணர்வினை எதிர்பார்க்கிறாரோ அதைவிட கொஞ்சம் அதிகமாகவே அள்ளி தெளித்துவிடுவார் ஜானகி. இன்னும் சொல்லப்போனால் இளையராஜாவின் அனைத்து இசைமுயற்சிகளுக்கும் எஸ்.ஜானகி பக்க பலமாக இருந்தார் என்றே சொல்லலாம். அதனால்தான் பின்னணி பாடகிகளில் முன்னணி பாடகி என்ற இடத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்.

    கமலஹாசன் சொன்ன வார்த்தை

    தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், வீரம், ஏக்கம், ஊடல், குத்து என ஒவ்வொன்றிலும் ராகத்தின் ஆழமும், அழகும் ஜானகி அம்மா பாடல்களில் தென்பட்டது. அந்தந்த ஹீரோயின்களே பாடல்களை பாடுவதுபோல சிணுங்கலும், விசும்பலும், காதலும், தாய்மையும் என ஜானகியம்மாவின் குரலில் வந்து போயின. சில்க் ஸ்மிதாவை நினைத்தாலும் நமக்கு மனதில் தோன்றுவது ஜானகி அம்மா பாடிய "நேத்து ராத்திரி யம்மா"தான்!!

    Advertisement

    கமலஹாசன் ஒருமுறை நகைச்சுவையாக கூறினாராம், "இவர் என்னமோ பின்னணிப் பாடகிதான். ஆனால் இவர் பாடும்போது பார்த்தால் இவருக்கே யாரோ பின்னணி பாடுவது போல தோன்றும். அந்த அளவிற்கு உதடு அசைகிறதா இல்லையா என்பது கூட தெரியாது" என்றாராம்.

    எஸ்.எம்.எஸ் தொடங்கி, ரகுமான், அனிருத் வரை நெடிய பயணத்தை இனிமையாக முடித்து கொடுத்துள்ளார் ஜானகி... காலங்கள் கடந்தாலும் நம்மைவிட்டு அந்த காந்த குரல் என்றென்றும் நீங்காது.. கரையாது.. குறையாது...!!!

    English Summary

    Journey through the illustrious six-decade career of S. Janaki, the legendary South Indian playback singer. From her record-breaking 48,000 songs in 17 languages to her courageous stand on awards, delve into the musical milestones and the versatile vocal artistry that defined an iconic era of Indian cinema.