சென்னை: சத்யேந்திராவின் இறுதி பயணமும் கொடுமையாகவே அமைந்துவிட்டது.. "வாழ்நாளில் ஆயிரக்கணக்கான ரசிகர்களும், நண்பர்களும் நம்மைச் சுற்றி இருந்தாலும், இறுதியில் மனிதன் தனியாகத்தான் போகிறான்" என்று சொல்வதற்கு மற்றொரு உதாரணமாக சத்யேந்திரா இன்று திகழ்கிறார்.. வாழும்போதும் நிம்மதியாக வாழாமல், சாகும்போதும் யாருமற்ற சடலமாக பிணவறையில் கிடக்கிறது சத்யேந்திராவின் உடல்.
சினிமா கனவுகளோடு 45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்தவர் சத்யேந்திரா. பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், கன்னட மொழியில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
நடிகர் சத்யேந்திரா
கல்லூரி காலத்திலேயே உலகத் திரைப்படங்களையும், புத்தகங்களையும் நேசித்தவர்... புகழ்பெற்ற கிரிஷ் கர்னாட் இயக்கிய நாடகத்தில் நடித்து பாராட்டும் பெற்றவர். 1978-ல் கன்னடத்தில் வெளியான கிரஹனா படத்தில் கிடைத்த வரவேற்பு, இவரைச் சென்னை நோக்கி இழுத்து வந்தது. 1982-ல் வெளியான ஏழாவது மனிதன் படத்தில் நடிகர் ரகுவரனின் ரூம் மேட்டாக நடித்து தமிழ் திரையுலகில் தடம் பதித்தார்.
கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட 8 மொழிகளில் சுமார் 175 திரைப்படங்கள், 6 மெகா சீரியல்கள், ஒரு ஹாலிவுட் படம் மற்றும் ஒரு ஜெர்மன் மொழிப் படம் எனத் தன் நடிப்புப் பசியைத் தீர்த்துக்கொண்டவர்.
எடிட்டர் லெனின் இயக்கிய 'Knock Out' குறும்படத்தில், சத்யேந்திரா ஒரு இறந்த மனிதனாகவே வாழ்ந்து காட்டிப் பல அங்கீகாரங்களை பெற்றார். ஆனால், நிஜ வாழ்க்கையிலும் அதே மரணம் இவரை இப்படி அநாதையாக அலைக்கழிக்கும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார்.
திறமைசாலி சத்யேந்திரா
கன்னடம், தமிழ், இந்தி, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழி எனப் பல மொழிகளில் புலமை பெற்றவர் சத்யேந்திரா. பகுதி நேரமாக ஜெர்மன் மொழி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சென்னையில் எங்கே உலகத் திரைப்பட விழா நடந்தாலும், அங்கே முதல் ஆளாக சத்யேந்திரா நிற்பார். சமீபகாலமாக யூடியூப், டிஜிட்டல் தளங்களில் லியோ உள்ளிட்ட கமர்ஷியல் படங்களுக்கு கொஞ்சமும் தயக்கமின்றி, நேர்மையாக இவர் வழங்கிய விமர்சனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஒரு நடிகராக இவர் பரவலாக அறியப்படாதபோது, இவரது துணிச்சலான விமர்சனங்கள் பட்டிதொட்டியெங்கும் சத்யேந்திரைவை வைரலாக்கியது. எந்த ஒரு பாரபட்சமுமில்லாமல் தன் பாணியை மாற்றாமல், விமர்சனத்தை கம்பீரமாக பேசி அசத்தினார் சத்யேந்திரா.
ஆனால் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று இறந்துவிட்டார்.. அவரது மறைவு செய்தி கேட்டு சினிமா உலகினரும், சோஷியல் மீடியா ரசிகர்கள் கடும அதிர்ச்சி அடைந்தனர். கடந்த சில வருடங்களாகவே திரையுலக நண்பர்களுடன் தொடர்பில் இருந்தாலும், குடும்பத்தினரை விட்டு முற்றிலும் தனிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வந்துள்ளார் சத்யேந்திரா. தற்போது அவரது உடலைப் பெற்றுக்கொள்ள ரத்த உறவினர்கள் யாரும் இல்லை. சட்ட நடைமுறைகளின்படி, ரத்த உறவினர்கள் நேரில் வராமல் உடலை ஒப்படைக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டதால், அந்தப் பன்மொழி அறிஞனின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையின் பிணவறையில் (Freezer Box) உறங்கிக் கிடக்கிறது. இப்போது கொடுமை என்ன வென்றால், அவரது உடலை பெற யாருமே வரவில்லையாம். பெங்களூருவில் உள்ள அவரது உறவினர்களைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் பல நடந்தாலும், அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளன. 45 வருடங்கள் தமிழ் சினிமாவைக் காதலித்த ஒரு கலைஞனுக்கு இந்த நிலையா என்று நெட்டிசன்கள் கதறி வருகின்றனர். எனவே தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட தொழிலாளர் அமைப்புகள் இந்த விவகாரத்தில் தலையிட ஆலோசித்து வருகின்றனவாம். உறவினர்கள் யாரும் வராத பட்சத்தில், சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் திரையுலக அமைப்புகளே சத்யேந்திராவின் இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 8 மொழிகளில் உலக சினிமா பேசிய அந்த மேதை, வாழ்நாளின் பெரும்பகுதியைத் திரையுலகிற்கே அர்ப்பணித்த ஒரு சிறந்த கலைஞனுக்கு, இறுதிப் பயணத்தில் துணையாக ஒரு சொந்தம் கூட இல்லை என்பது காலத்தின் கொடூர முரணாகவே உள்ளது.. கலைக்காகத் தன்னைத் தேய்த்துக் கொண்ட மனிதனை, ஒரு பிணம் என்ற அளவில்கூட மதிக்கத் தவறுகின்றதா இந்தச் சமூகம் என்ற தார்மீகக் கேள்வி நம் நெஞ்சை உலுக்குகிறது. கலையுலகில் ஒரு மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு, துணையுமின்றி, சொந்தங்களுமின்றித் தனியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார் சத்யேந்திரா.. அவரது சடலமும் பிணவறையில் தனித்து கிடக்கிறது...!!துணிச்சலான நேர்மையான விமர்சகர்
ஆதரவின்றி கிடக்கும் உடல்
கொடுமையான நிலைமை