சென்னை: கேம் சேஞ்சர் படத்திற்காக சுமார் 15 கோடி ரூபாய் செலவு செய்து நியூசிலாந்தில் ஒரு பாடலைப் படமாக்கினார் டைரக்டர் ஷங்கர், ஆனால் கடைசியில் அந்த பாட்டையே படத்தில் வைக்கவில்லை. அந்த தயாரிப்பாளரின் 15 கோடி ரூபாயை அப்படியே கடலில் போட்டது மாதிரி ஆகிவிட்டது.. இயக்குநரின் திட்டமிடல் இன்மையே இதற்கு காரணம் என்று திரைப்பட விமர்சகரும் தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் அடையும் நஷ்டம், அவர்கள் படும் வேதனைகள் குறித்து பாலாஜி பிரபு சமீபத்தில் சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்திருந்தார்.. அதில் அவர் பேசும்போது, "சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம் என்பதை நம்மால் பட்ஜெட்டை வைத்து மட்டும் எளிதாக வரையறுத்துவிட முடியாது. தியேட்டருக்கு வந்து, ஓடி, எந்த படம் மாபெரும் வெற்றியைப் பெறுகிறதோ அதுவே உண்மையான பெரிய திரைப்படமாகும்.
உதாரணத்திற்கு, அஜித் நடிப்பில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 'விடாமுயற்சி' படத்தின் ஒட்டுமொத்தத் தமிழகத் தியேட்டர் வசூல் வெறும் 60 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 38 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட "டிராகன்" திரைப்படம் 150 கோடி ரூபாயைக் கடந்து வசூல் சாதனை புரிந்துள்ளது. பட்ஜெட் பெரியதாக இருப்பதால் ஒரு படம் பெரிய படம் ஆகிவிடாது. மக்கள் ரசித்துத் தியேட்டரில் கொண்டாடும் படமே பெரிய படம். தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் வெறும் 7 சதவீத படங்கள் மட்டுமே வெற்றியைப் பெற்றுள்ளன; மீதமுள்ள 93 சதவீத படங்கள் கடுமையான தோல்வியையே தழுவியுள்ளன. சினிமா பற்றிய எந்தவிதமான அடிப்படை அறிவோ, வர்த்தகப் புரிதலோ இல்லாத அரிசி வியாபாரிகள், கரும்பு வியாபாரிகள் போன்ற பிற தொழில் செய்பவர்கள், சினிமா மோகத்தினாலும் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையினாலும் கோடி கணக்கில் பணத்தைக் கொண்டு வந்து உள்ளே கொட்டுகிறார்கள். அப்படி வரும் புதிய தயாரிப்பாளர்களைச் சுற்றி உதவி இயக்குநர்களும், தயாரிப்பு மேலாளர்களும் ஒரு மாய உலகை உருவாக்குகிறார்கள். இத்தகைய பொய் வார்த்தைகளை நம்பிப் படம் எடுக்கும் புதிய தயாரிப்பாளர்கள், இறுதியில் தங்களது முதலீட்டை முழுமையாக இழந்து விடுகிறார்கள். சினிமாவில் தொடர்ந்து இயங்கி வரும் பாரம்பரியமிக்க தயாரிப்பாளர்களே தங்களது வீடு, வாசல்களை இழந்து தவிக்கும் சூழலில், எதார்த்தம் தெரியாமல் வரும் புதிய தயாரிப்பாளர்கள் தங்களது பணத்தை இழந்த பின்பு அவர்களை இந்த உலகம் மதிப்பதும் இல்லை, தயாரிப்பாளர் என்று அடையாளப்படுத்துவதும் இல்லை. ஒரு படம் தியேட்டரில் ஓட வேண்டும் என்றால், கன்டென்ட் ரொம்ப முக்கியம். சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், கதையில் நேர்த்தி இருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள். அதற்குச் சமீபத்திய உதாரணங்கள் பல உள்ளன. ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ரப்பர் பந்து படம் தியேட்டரில் பெரிய வசூல் சாதனை புரிந்தது. அதேபோல், பார்க்கிங் படம், மேல் வீடு-கீழ் வீடு பார்க்கிங் பிரச்சனை என்ற ஒரு எளிய, அருமையான கதையை மையமாகக் கொண்டு பெரிய அளவில் வெற்றி பெற்றது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா கடம், குப்பைத்தொட்டியைக் காணோம் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும் ஒரு சாதாரணக் கதையை, மாற்றுத் திரைக்கதை மூலம் உலக அளவில் மாபெரும் ஹிட்டாக்கியது. எனவே புதுமையான மற்றும் நல்ல கதைகளைக் கொடுத்தால் சிறிய பட்ஜெட் படங்கள் நிச்சயம் தியேட்டர்களில் நீண்ட நாட்கள் ஓடும்." டைரக்டர்களுக்கு படத்தின் பட்ஜெட் பற்றிய தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும். படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டுமே எடுக்க வேண்டும்; தேவையின்றி 20 பேர் டான்ஸ் ஆட இடத்தில் 200 பேரை ஆட வைக்கக் கூடாது. இதற்கு உதாரணமாக டைரக்டர் ஷங்கரை கூறலாம். அவர் கேம் சேஞ்சர் படத்திற்காகச் சுமார் 15 கோடி ரூபாய் செலவு செய்து நியூசிலாந்தில் ஒரு பாடலைப் படமாக்கினார், ஆனால் இறுதியில் அந்தப் பாடலையே படத்தில் வைக்கவில்லை. அந்த தயாரிப்பாளரின் 15 கோடி ரூபாயைக் கடலில் போட்டதற்குச் சமமான இந்த விரயத்திற்கு இயக்குநரின் திட்டமிடல் இன்மையே காரணம். படத்தின் பட்ஜெட் எகிறுவதற்கு நடிகர்களின் கட்டுக்கடங்காத சம்பள உயர்வும் ஒரு முக்கியக் காரணமாகும். நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் என்ற ஒரே ஒரு படம் ஓடியதற்காக அடுத்த படத்திற்கு 75 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். அடுத்த படம் ஒருவேளை ஓடாமல் தப்பானால், அவரை நம்பிப் பணம் போடும் தயாரிப்பாளர், டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களின் நிலைமை என்னவாகும்? நடிகர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்து, இயக்குநர்கள் திட்டமிடலுடன் கதையம்சம் கொண்ட நல்ல படங்களை எடுத்தால் மட்டுமே சினிமா தப்பிப் பிழைக்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட்
சினிமா மோகம்
பார்க்கிங், ரப்பர் பந்து
ஷங்கர் பாட்டு நஷ்டம்
சிவகார்த்திகேயன் கேட்ட 75 கோடி ரூபாய்