சென்னை: சிவகார்த்திகேயன் என்றாலே சினிமா பின்னணி இல்லாமல் வந்து, தொலைக்காட்சியில் இருந்து படிப்படியாக முன்னேறி இன்று முன்னணி கதாநாயகனாக நிற்பவர் என்ற பிம்பம் இருக்கிறது. அவரே அதை இப்போது தனது ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார். ஆனால், இந்த முறை அவர் பேசிய விதம்தான் சமூக வலைதளங்களில் வேறு ஒரு கேள்வியையும் கிளப்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் சிவகார்த்திகேயன் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்தச் சந்திப்பு, வழக்கமான ரசிகர்கள் சந்திப்பு போல இல்லாமல் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. ஒரே மாதிரியான வெள்ளைச் சட்டையில் ரசிகர்கள் திரண்டதும், மேடை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளும் அரசியல் கூட்டத்தை நினைவுபடுத்துவதாக பலரும் பேசினர். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோக்கள் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதில் தனது சினிமா பயணம் பற்றியும், ரசிகர்களுக்கும் தனக்கும் இருக்கும் உறவு பற்றியும் அவர் நீண்ட நேரம் பேசியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் பேசியதாவது, "எந்த பின்புலமும் இல்லாமதான் நான் சினிமாவுக்கு வந்தேன். நான் செல்ஃப் மேட் கிடையாது. மக்களால் உருவாக்கப்பட்டவன். எனக்கு முன்னாடி வந்தவங்க எல்லாருமே சினிமா பின்னணியில் இருந்து வந்தவங்க. நான் அப்படி வரல. நான் சினிமாவுல காலடி எடுத்து வைக்கிற நேரத்துல நானும் விஜய் சேதுபதியும் தனியா வந்தோம். அந்த நேரத்துல 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் சினிமா பின்னணியில் இருந்து வந்தவங்க. நாங்க 2 பேரும் எந்த பின்புலமும் இல்லாம வந்தோம். நான் என்னை செல்ஃப் மேட் என்று சொல்லிக்கொள்ள விரும்பல. மக்களால் உருவாக்கப்பட்டவன். அந்த மக்களுக்காக ஏதாவது திருப்பி செய்யணும்னு நினைக்கிறேன். தினந்தோறும் நற்பணி செய்வோம். மாதந்தோறும், மாவட்டம் தோறும் நற்பணி செய்வோம். இவ்வளவு செய்வதால் என்ன பலன் என்றால் நமக்கு நிச்சயமாக பலம் உண்டு. எம்ஜிஆர், விஜயகாந்த் மாதிரி உதவ வேண்டும். யாருக்காகவும் யாரையும் எதிர்க்கவும் இதை செய்யவில்லை. நான் பெரியவன் என்ற போட்டிக்காகவும் இதை செய்யவில்லை." இப்படித்தான் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார். இதில் அவர் தன்னுடைய சினிமா பின்னணி இல்லாத பயணத்தை மட்டும் சொல்லவில்லை. "மக்களால் உருவாக்கப்பட்டவன்" என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறார். அதோடு, அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றும், நற்பணி என்பது தினசரி அளவில் இருந்து மாவட்ட அளவு வரை செல்ல வேண்டும் என்றும் தனது ரசிகர் நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறார். சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலத்தைப் பார்த்தால் இந்தப் பேச்சுக்கு ஒரு பின்னணி இருக்கிறது. சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், காமெடி நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியவராகவும் இருந்த சிவகார்த்திகேயன், அதன் பிறகு சினிமாவுக்குள் வந்தார். மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், அதன்பிறகு மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என்று ஒவ்வொரு படியாக தனது இடத்தைப் பிடித்தார். அதே காலகட்டத்தில் சினிமா பின்னணி இல்லாமல் வந்த மற்றொரு முக்கியமான நடிகர் விஜய் சேதுபதி. 'பீட்சா' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற விஜய் சேதுபதியும் தனது சொந்த முயற்சியால் முன்னணி நடிகராக வளர்ந்தார். அதனால்தான் தன்னையும் விஜய் சேதுபதியையும் குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் பேசியிருப்பது கவனிக்கப்படுகிறது. ஆனால், இங்கேதான் தற்போதைய சூழல் முக்கியமாகிறது. இதனால் இப்போது சமூக வலைதளங்களில் எழும் கேள்வி ஒன்றுதான். சிவகார்த்திகேயன் தனது ரசிகர் பலத்தை சினிமாவுக்காக மட்டும்தான் கட்டமைக்கிறாரா? அல்லது எதிர்காலத்தில் இந்த அமைப்பு இன்னொரு களத்துக்கும் பயன்படுமா? இந்தக் கேள்வி எழுவதற்கு காரணம் சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டார் என்பதல்ல. அப்படி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. ஆனால், ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றுவது, மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது, அவர்களிடம் தொடர்ந்து சமூகப் பணிகளை செய்யச் சொல்வது, இப்போது "நமக்கு பலம் உண்டு" என்று வெளிப்படையாக பேசுவது என ஒவ்வொரு விஷயமும் சேர்ந்து பார்க்கப்படுவதால்தான் இந்த விவாதம் வருகிறது. அதிலும் எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோரை உதாரணமாகச் சொல்லியிருப்பது இன்னும் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தில் ரசிகர் மன்றங்களுக்கும் அரசியலுக்கும் இருக்கும் தொடர்பு புதிதான விஷயம் கிடையாது.சிவகார்த்திகேயன் பேச்சு
மக்களுக்காக நற்பணி
சிவகார்த்திகேயனின் ஆரம்பகாலம்
விஜய் சேதுபதியுடன் ஒப்பீடு
ரசிகர்கள் கேள்வி