சென்னை: சின்னத்திரை ரசிகர்களின் மனதில் 'சுந்தரி' அனுவாக இடம்பிடித்த நடிகை ஸ்ரீ கோபிகா, திருமணத்திற்குப் பிறகு திடீரென நடிப்பை விட்டு விலகியபோது பலரும் அதிர்ச்சியடைந்தனர். "என்னாச்சு? ஏன் இப்படியொரு முடிவு?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இப்போது அவரது வாழ்க்கையில் அழகான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஸ்ரீ கோபிகா, மலையாள சீரியல்களில் தொடங்கி தமிழில் அன்பே வா, சுந்தரி போன்ற சீரியல்களில் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக சுந்தரி சீரியலில் அனு கதாபாத்திரம் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் தனி இடம் பிடித்தார். அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அதிகமான ட்ரோலிலும் சிக்கிக் கொண்டிருந்தார். அதாவது அனுவுக்கு மட்டும் இரண்டு வருடத்திற்கு மேலாக குழந்தை பிறக்காமல் அவர் கர்ப்பமாக இருப்பது போன்றே காட்சி வந்து கொண்டிருந்தது. அதனால் அப்போது அவர் தான் மீம்ஸ்களின் டெம்ப்ளேடாக மாறி இருந்தார். அதன்பிறகு மலையாள சீரியலிலும் பிஸியாக இருந்த அவர், கடந்த ஆண்டு தனது நீண்டநாள் காதலரான வருண் தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எட்டு ஆண்டுகள் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் நடந்த அந்த திருமணம் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளானது. திருமணத்திற்குப் பிறகும் நடிப்பை தொடர்ந்த ஸ்ரீ கோபிகா, திடீரென சமூக வலைதளத்தில், "நான் இனி சீரியலில் மட்டுமல்ல, நடிப்பு வாழ்க்கையிலிருந்தே விலகுகிறேன்" என்று அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது பல்வேறு யூகங்கள் கிளம்பின. குடும்ப வாழ்க்கையா காரணம்? கர்ப்பமா? தனிப்பட்ட முடிவா? என்று பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்கு ஸ்ரீ கோபிகா நேரடி விளக்கம் அளிக்கவில்லை. அந்த சஸ்பென்ஸ்க்கு இப்போது இனிய பதில் கிடைத்திருக்கிறது. ஸ்ரீ கோபிகா - வருண் தேவ் தம்பதியினர் சமீபத்தில் தங்கள் குழந்தையின் பெயர்சூட்டு விழாவை குடும்பத்தினருடன் மிகவும் எளிமையாகவும் அழகாகவும் கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்களை வருண் தேவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது மனைவிக்காக எழுதியிருந்த வார்த்தைகள் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. "பல மாதங்கள் எங்களின் உலகத்தை உன் கருவில் சுமந்து, எங்கள் கைகளில் பாதுகாப்பாக கொண்டு வந்தாய்... என்னை அப்பாவாக மாற்றியதற்கு நன்றி" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பகிரப்பட்ட புகைப்படங்களில் ஸ்ரீ கோபிகா, வருண் தேவ், அவர்களது குழந்தை மற்றும் குடும்பத்தினர் பாரம்பரிய உடையில் மிக அழகாக காணப்படுகிறார்கள். சின்னத்திரை ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரையில் கண்ணீர் சிந்த வைத்த நடிகை, இப்போது நிஜ வாழ்க்கையில் தாயாக புதிய பொறுப்பை ரசித்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீ கோபிகா முழுமையாக நடிப்பை விட்டு விலகியதாக அறிவித்திருந்தாலும், பல நடிகைகள் போல ஒரு கட்டத்தில் மீண்டும் கம்பேக் கொடுப்பாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் தற்போதைக்கு, அவர் தனது குடும்பம், கணவர், குழந்தை என வாழ்க்கையின் அழகான தருணங்களை முழுமையாக அனுபவித்து வருகிறார் என்பதே தெளிவாக தெரிகிறது. சின்னத்திரை ரசிகர்களோ, "அனு மேடம் மீண்டும் வரணும்... ஆனா இப்ப இந்த சந்தோஷத்தை முழுசா அனுபவிங்க" என்று அன்பு தெரிவித்து வருகின்றனர்.சீரியல் நடிகை ஸ்ரீ கோபிகா
ரசிகர்களை குழப்பிய முடிவு
வாழ்க்கையில் நான் செய்த பெரிய தப்பு.. இப்போ நினைத்தாலும் அசிங்கமா இருக்கு! உருக்கமாக பேசிய சுந்தரி சீரியல் கேப்ரியல்லா
இப்போது வந்திருக்கும் இனிய அப்டேட்
எளிமையில் அழகான குடும்ப தருணம்
மீண்டும் நடிப்புக்கு வருவாரா?