இன்ஸ்டா ரீல்ஸ் ஒரு கனவு உலகம்.. ஒண்ணுமே கத்துக்க முடியாது! சூர்யா சொன்ன சூப்பர் பாயிண்ட்

  • சென்னை: இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல் முடிந்ததும் அடுத்த ரீல், அதற்கடுத்து இன்னொன்று என நேரம் போவதே தெரியாமல் பலரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இதனால் நமக்கு என்ன கிடைக்கிறது? இதைத்தான் நடிகர் சூர்யா மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.

    Advertisement

    ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, சிவகுமார் இருவரும் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ.13.78 லட்சம் நிதியுதவி வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, அகரம் அறக்கட்டளையின் கல்விப் பணிகள் குறித்தும், தான் சினிமாவில் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

    Advertisement

    சினிமாவில் ஒரு காட்சியைச் சரியாக எடுக்கப் பலமுறை முயற்சி செய்ய வேண்டியிருக்கும் என்று கூறிய சூர்யா, ஒவ்வொரு வாட்டியும் தப்பாகும்போது டைரக்டர் வந்து நீ ஃபெயில்னு சொல்ல மாட்டாரு. 'ஒன் மோர்'னுதான் சொல்வாரு. வாழ்க்கையிலும் அதேபோலத்தான். தேர்வில் மதிப்பெண் குறைந்தாலோ, கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றாலோ, வேலை கிடைக்கவில்லை என்றாலோ அதுவே முடிவல்ல. இன்னொரு வாட்டி முயற்சி பண்ணலாம். எதுவுமே முடிவு கிடையாது என்பதை மறந்துடாதீங்க என்று மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

    இன்ஸ்டா ரீல்ஸ் உலகம்

    இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது சூர்யா சொன்ன ரீல்ஸ் பற்றிய கருத்துதான். நீங்க இன்ஸ்டாகிராம், அதாவது ரீல்ஸ் பார்த்துட்டே இருந்தீங்கன்னா, அதனால நம்ம ஒண்ணுமே கத்துக்கப் போறது கிடையாது. யாரை ஃபாலோ பண்றோம் அப்படிங்கிறது ரொம்ப முக்கியம். ஒருவர் பெரிய சாதனை செய்துவிட்டார் என்பதை மட்டும் ரீல்ஸில் பார்ப்பதைவிட, அவர் எங்கிருந்து ஆரம்பித்தார், எப்படி முன்னேறினார் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். அதற்காக நேர்காணல்கள், பாட்காஸ்ட்கள் போன்றவற்றைப் பார்க்கலாம் என்றும் அட்வைஸ் சொன்னார்.

    Advertisement

    உண்மையிலேயே, பொழுதுபோக்குக்காக ரீல்ஸ் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், சில நிமிடங்கள் என்று ஆரம்பித்து மணிக்கணக்கில் அதிலேயே நேரத்தைச் செலவிட்டால் படிப்பு, வேலை, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது எனப் பல விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். மற்றவர்களின் வெற்றியை மட்டும் பார்த்துவிட்டு, நம்முடைய வாழ்க்கையை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் தேவையில்லாத ஏமாற்றத்தைத் தரலாம்.

    உதவியை மறக்கக்கூடாது

    சினிமாவில் ஒரு ஹீரோ மட்டும் தனியாகப் படத்தை உருவாக்கிவிட முடியாது என்றும், உதவி இயக்குநர்கள் முதல் லைட்மேன்கள் வரை பலருடைய உழைப்பு அதற்குப் பின்னால் இருக்கிறது. அதேபோல வாழ்க்கையில் நாம் முன்னேறும்போது நமக்கு உதவியவர்களை மறந்துவிடக் கூடாது என்றும், நம்மால் முடிந்தால் இன்னொருவரையும் முன்னேற்ற வேண்டும் என்றும் சூர்யா கூறினார்.

    Advertisement

    அகரம் அறக்கட்டளை 20 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முதல் தலைமுறை மாணவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7,000 பேரைச் சென்றடைந்துள்ளதாகவும், மலைக் கிராமங்கள், கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கல்வி வாய்ப்புகள் தேவைப்படும் மாணவர்களுக்கு உதவிகள் செய்து வருவதையும் சூர்யா கூறினார்

    மொத்தத்தில், சூர்யாவின் பேச்சில் மாணவர்களுக்கு அவர் சொல்லியிருக்கும் விஷயம் ரொம்ப எளிமையானது. தோல்வி வந்தால் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும். எதையும் கற்றுக்கொள்ளத் தொடர்ந்து பயிற்சி எடுக்க வேண்டும். ரீல்ஸ் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் சாதனையாளர்களின் பயணத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நம்மை வளர்த்தவர்களை மறக்கக் கூடாது என்பதுதான் அவர் சொல்லியிருக்கும் அட்வைஸ்.

    English Summary

    Suriya:On Instagram, many of us find ourselves watching one reel after another—losing track of time completely. But what do we actually gain from this? This is precisely what actor Suriya addressed while speaking to students.