சென்னை: இயக்குனர் இமயம் பாரதிராஜா காலமானார் என்ற துயர செய்தி ஒட்டுமொத்த திரை உலகையும், ரசிகர்களையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி அமைத்த ஒரு மாபெரும் சகாப்தம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. புத்திர இழப்பு சோகத்திலேயே விழுந்து கிடந்தவர், இன்று தன்னுடைய மூச்சை நிறுத்தி கொண்டார்.
சமீபகாலமாகவே பாரதிராஜாவின் உடல்நிலை பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த புத்திர சோகம் பாரதிராஜாவை ஒட்டுமொத்தமாக உலுக்கியெடுத்துவிட்டது.
தன் கண் முன்னே வளர்த்த மகன், தங்களை தவிக்கவிட்டுச் சென்ற அதிர்ச்சியிலிருந்து அவரால் இறுதிவரை மீளவே முடியவில்லை. மனோஜ் இறந்தபோதே முற்றிலும் தளர்ந்துபோன பாரதிராஜா, பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். மனோஜின் மரணத்திற்குப் பிறகு பாரதிராஜாவின் சிந்தனை முழுவதும் மகன் நினைப்பிலேயே இருந்தது. சோக நினைவுகளில் மூழ்கிக்கிடந்த அவரை மீட்டெடுக்க இயக்குனர் கங்கை அமரன் நேரில் சென்று பாடல்கள் பாடி காட்டி முயன்றபோதிலும், பாரதிராஜாவால் அந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகனின் நினைவாலேயே மெல்ல மெல்ல தனது நினைவாற்றலையும் அவர் இழந்து வந்தார். இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் அளித்த பேட்டியில், தன் அண்ணனின் கடைசி கால துயரங்களை கண்ணீருடன் பகிர்ந்திருந்தார். 3 ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா, மகன் மறைவுக்குப் பிறகு கடும் மனவேதனையால் மேலும் சோர்ந்துபோனார். மனோஜின் நினைவுகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சினிமா துறையைச் சேர்ந்த யாரையும் அவரைப் பார்க்க குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. சென்னையில் உள்ள பங்களாவில் டாக்டர்கள், நர்ஸ்கள் தீவிர கண்காணிப்பில் பாரதிராஜா தனிமையில் வைக்கப்பட்டிருந்தார். யாராவது பார்க்க வந்தால், அவர்களைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது, அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிடும் என்பதால் இந்த கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த தனிமையிலும் கூட, தன் மகன் மனோஜின் போட்டோவை பார்த்துவிட்டு அப்படியே தலையை தொங்கப்போட்டுக்கொண்டு அவர் அழுத கணங்கள் பார்ப்போரைக் கலங்கச் செய்தன. மகன் இறந்த பிறகு, பாரதிராஜாவை அவரது மகள் ஜனனி மலேசியாவிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொண்டாராம்.. ஆனால் அங்கேயும் யாரோடும் பேசாமல் மவுனமாகவே இருந்த பாரதிராஜா, நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்கே திரும்பியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மகன் மனோஜை பிரிந்த துயரமும், ஏகப்பட்ட உடல்நல உபாதைகளும் அவரை இறுதிவரை வாட்டி வதைத்தன. "சித்தப்பா என்று என் மேல் வந்து விழும் மனோஜின் இழப்பிலிருந்து நானும் மீளவில்லை, என் அண்ணனும் மீளவில்லை" என்று அவரது தம்பி ஜெயராஜ் உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த அளவிற்கு மகனின் பிரிவால் உடைந்திருந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, இப்போது தன் மகனின் நினைவுகளுடனேயே இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார். புத்திர சோகம் எவ்வளவு கொடூரமானது???மனோஜ் நினைவால் உடைந்து அழுது
வாட்டி வதைத்த மகனின் நினைவுகள்
மகள் ஜனனி