ரவி மோகனை தனியாக விடாதீங்க! இது பலருக்கு பாடம்.. கண்கலங்க பேசிய சீரியல் நடிகை ரிஹானா


  • சென்னை: நடிகர் ரவிமோகன் சமீபத்தில் தனது குடும்ப வாழ்க்கை குறித்து மனம் உடைந்து செய்தியாளர்களிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கண்கலங்கியபடி அவர் பேசிய காட்சிகள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்ததோடு, சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சீரியல் நடிகை ரிஹானா வெளியிட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

    ரவி மோகன் பேட்டி

    ரவிமோகனின் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோவை பார்த்தபோது, தனது குடும்பத்தில் நடந்த துயர சம்பவம் நினைவுக்கு வந்ததாக ரிஹானா கூறியுள்ளார். குறிப்பாக தனது தம்பியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்த அவர், "அந்த வீடியோவை பார்த்தவுடன் எனக்கு என் தம்பிதான் நினைவுக்கு வந்தான். இன்று அவன் எங்களுடன் உயிரோடு இல்லை. வெறும் 24 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டான்.

    ஜெயம் ரவிக்கு ஏற்பட்டது போலவே, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கடுமையான பிரச்சனைகள்தான் அதற்குக் காரணம்" என்று கண்கலங்கியபடி கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தம்பி பற்றி அவர் பேசும் போது, அது ஒரு அரேஞ்ச்ட் மேரேஜ். குடும்பத்தினர் பார்த்து முடித்த திருமணம். ஆனால் திருமணம் நிச்சயமான பிறகு, திருமணத்திற்கு முன் இருந்த காலகட்டத்தில் அந்த பெண்ணின் நடத்தை, பேசும் விதம், மரியாதையின்மை ஆகியவை குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

    சீரியல் நடிகர் ரிஹானா வீடியோ

    "என் தம்பி அமைதியானவன். சண்டை பிடிக்காதவன். ஆனால் அந்த பெண் மிகவும் ஆக்ரோஷமானவர். இந்த திருமணம் சரியாக இருக்காது என்று நாங்கள் உணர்ந்தோம். திருமணத்தை நிறுத்த முயற்சித்தோம். ஆனால் அவன் அந்த பெண்ணை ஆழமாக காதலிக்க ஆரம்பித்திருந்தான். நாங்கள் சம்மதிக்கவில்லை என்று தெரிந்ததும் விஷம் குடித்தான். அதன்பிறகு வேறு வழியின்றி திருமணம் நடந்தது" என கூறியுள்ளார்.

    திருமண வாழ்க்கைக்குப் பிறகு தனது தம்பி சந்தித்த துயரங்களைப் பற்றி ரிஹானா பகிர்ந்த விஷயங்கள் பலரையும் உலுக்கியுள்ளது. "ஒருநாள் அவன் என் வீட்டுக்கு வந்தான். கையில் இருந்தது அழுக்கான ஒரு உடை மட்டுமே. மிகவும் உடைந்து அழுதான். மனைவி தன்னை அடித்ததாக சொன்னான். அவள் பேசிய வார்த்தைகள் அவனை உள்ளுக்குள் நசுக்கியிருந்தது. நான் கூட கேட்க முடியாத அளவுக்கு அசிங்கமாக குடும்பத்தை பற்றி பேசுவாள் என்று சொன்னான்" என தெரிவித்துள்ளார்.

    மேலும், குழந்தை பிறந்த பிறகும் பிரச்சனைகள் தீரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். குழந்தையை பார்க்கும் ஆசையால் தனது தம்பி மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வாழ முயன்றதாகவும், அதற்காக மனைவி வைத்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் சொல்கிறார். "என்னுடன் பேசக்கூடாது என்ற நிபந்தனையும் இருந்தது. ஆனாலும் அவன் என்னை தொடர்பு கொண்டான். அது தெரிந்ததும் மீண்டும் பிரச்சனை.

    குழந்தையையும் கூட்டிக்கொண்டு மனைவி வெளியேறிவிட்டாள். அந்த வேதனையை தாங்க முடியாமல் அதே நாளில் என் தம்பி தற்கொலை செய்து கொண்டான்" என்று அவர் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

    நடிகையின் வேண்டுகோள்

    ரவிமோகன் குறித்து சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறை கருத்துகளையும் ரிஹானா கடுமையாக விமர்சித்துள்ளார். "குழந்தைகளை நினைத்து வாழ்ந்திருக்க வேண்டும் என்று பலர் எழுதுகிறார்கள். என் தம்பியும் குழந்தைக்காகத்தான் மீண்டும் அந்த வாழ்க்கைக்குள் சென்றான். ஆனால் முடிவில் அவன் உயிரையே இழந்தான். வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு எல்லாம் தெரியாது. யாரோ ஒருவரின் உயிர் போன பிறகுதான் உண்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும், "ரவிமோகன் எந்த மனநிலையில் அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார் என்பதை நான் உணர முடிகிறது. என் குடும்பத்தில் இதே மாதிரியான சம்பவம் நடந்திருக்கிறது. மற்றவர்களின் வேதனையை புரிந்துகொள்ளாமல் வார்த்தைகளால் காயப்படுத்தாதீர்கள். தயவுசெய்து அவருடைய நண்பர்கள் யாரும் அவரை தனியாக விடாதீர்கள் அவர் இப்போது மிகவும் உடைந்த நிலையில் இருக்கிறார்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை ரிஹானா, பல சீரியல்களில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். சமூக பிரச்சனைகள் குறித்தும், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக பேசக்கூடியவர். தற்போது அவர் பகிர்ந்த இந்த வீடியோ, ரவிமோகன் விவகாரத்தை இன்னொரு கோணத்தில் பார்க்க வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    Actress Rihana: TV actress Rihana has shared an emotional video reacting to actor Ravi Mohan’s recent heartbreaking press interaction about his personal life. Recalling a tragic incident from her own family, she revealed that her younger brother died by suicide at the age of 24 following severe marital issues. Drawing parallels with Ravi Mohan’s emotional state, Rihana said she could understand his pain and urged people not to judge without knowing the full story. She also made a heartfelt appeal to Ravi Mohan’s friends and well-wishers, asking them not to leave him alone during this difficult period. Her emotional testimony has sparked widespread reactions online, with many expressing sympathy and calling for compassion.