சென்னை: தமிழ் சினிமாவில் சில நடிகர்களை நாம் பார்த்ததுமே நம்முடைய வீட்டில் இருக்கும் பாட்டி, அம்மா, அத்தை என ஏதோ ஒரு உறவு ஞாபகத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு முகம்தான் நடிகை வத்சலா ராஜகோபால். 'ரோஜா' படத்தில் தொடங்கி சதி லீலாவதி, ரிதம், அந்நியன், மொழி என பல படங்களில் பாட்டியாகவும், அம்மாவாகவும், குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்ணாகவும் வந்து இயல்பான நடிப்பால் நம்மை ரசிக்க வைத்தவர். இப்போது 93 வயதில் அவர் உயிரிழந்திருக்கும் செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஆனால் வத்சலா ராஜகோபால் வாழ்க்கையை பற்றித் தெரிந்துகொண்டால், அவர் நடித்த படங்களைத் தாண்டி அவருடைய விடாமுயற்சிதான் நமக்கு அதிகமாக நினைவுக்கு வரும். ஏனென்றால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், இளம் வயதிலேயே அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. கிட்டத்தட்ட 60 வயதில்தான் முதல் திரைப்பட வாய்ப்பு அவரைத் தேடி வந்திருக்கிறது. அதுவரை நாடக மேடையில் நடித்த அனுபவம், குடும்ப வாழ்க்கை, ஆபீஸ் வேலை என வேறு பாதையில் பயணித்திருக்கிறார்.
வத்சலா ராஜகோபால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வளர்ந்தவர். பள்ளியில் படிக்கும்போதே நடனம், நாடகம் ஆகியவற்றில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது. திருமணத்துக்கு பிறகு 1953-ல் சென்னையில் குடியேறியவர், தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில் கிளார்க்காகப் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. அந்த அலுவலகத்தில்தான் இயக்குநர் கே.பாலசந்தர் அவருக்கு உயர் அதிகாரியாக இருந்திருக்கிறார். பின்னாளில் தமிழ் சினிமாவையே மாற்றியமைத்த இயக்குநராக புகழ்பெற்ற பாலசந்தருடன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றியிருக்கிறார் வத்சலா ராஜகோபால். அப்போது அவருடைய வாழ்க்கை சினிமாவை நோக்கிப் போகும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. அதே காலகட்டத்தில் கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதரன் நடத்தி வந்த 'ரசிக ரங்கா' நாடகக் குழுவில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அலுவலக வேலை ஒருபக்கம் இருந்தாலும், நாடகத்தின் மீதான ஆர்வத்தை அவர் விட்டுவிடவில்லை. மேடையில் தொடர்ந்து நடித்து வந்திருக்கிறார். சுமார் 25 வருஷத்தில் 450-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார் நாடகங்களில் வத்சலா ராஜகோபாலின் நடிப்பை பார்த்த இயக்குநர் மணிரத்னம், தனது 'ரோஜா' படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார். அதுதான் அவருடைய முதல் திரைப்பட வாய்ப்பு. அப்போது அவருக்கு சுமார் 60 வயது. இன்றைக்கு பல நடிகர்கள் இளம் வயதிலேயே சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து கிடைத்த வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். 'ரோஜா' படத்தில் மதுபாலாவின் பாட்டியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிறகு, அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர தொடங்கின. வயதான காலத்தில் சினிமாவுக்கு வந்தாலும், நடிப்பில் இருந்த அனுபவமும் இயல்பான வெளிப்பாடும் அவருக்குத் தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தன. அதன்பிறகு சதி லீலாவதி படத்தில் அம்புஜம் மாமியாக வந்து ரசிகர்களை ரசிக்க வைத்தார். குறிப்பாக அந்நியன் படத்தில் அம்பியின் பாட்டியாகவும், மொழி படத்தில் அர்ச்சனாவின் பாட்டியாகவும் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு நினைவில் நிற்கக்கூடியவை. படத்தின் கதையில் பெரிய அளவில் நேரம் கிடைக்காவிட்டாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட காட்சிகளில் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்ப்பது அவருடைய தனிச்சிறப்பு. வத்சலா வாழ்க்கையில் மறக்க முடியாத இன்னொரு அனுபவமும் இருக்கிறது. தான் வியந்து பார்த்த கலைஞரான நாகேஷுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அதை இன்ப அதிர்ச்சியாகவே உணர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் தயக்கத்துடன் நடித்த தன்னை நாகேஷ் ஊக்கப்படுத்தி நடிக்க வைத்ததாக அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதேபோல இயக்குநர் பாலுமகேந்திராவும் அவருடைய நடிப்பை ரசித்திருக்கிறார். தன்னைப் பார்க்கும்போதெல்லாம் 'நான் உங்கள் ரசிகன்' என்று பாலுமகேந்திரா கூறுவார் என்றும், அவர் இயக்கிய 'கதை நேரம்' தொடரில் நடிக்க வைத்ததாகவும் வத்சலா ராஜகோபால் சொல்லி இருக்கிறார். இத்தனை பெரிய கலைஞர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுகள் அவருடைய நடிப்புப் பயணத்தில் எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வத்சலா ராஜகோபால் வாழ்க்கையில் மிகவும் வேதனையான ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது. 2003-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் அவருடைய இரண்டு கால்களும் மோசமாக பாதிக்கப்பட்டன. பிளாஸ்டிக் சர்ஜரி செய்தும் கால்களை முன்புபோல இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை. நீண்ட நேரம் நிற்கவும் நடக்கவும் முடியாத நிலை ஏற்பட்டது. செருப்பு அணிந்துகூட நடக்க முடியாமல், கைத்தடி உதவியுடன்தான் நடமாட வேண்டிய சூழல் உருவானது. அதேபோல தனிப்பட்ட வாழ்க்கையிலும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறார். 1996-ல் அவருடைய கணவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பிறகு மூத்த மகனையும் இழந்திருக்கிறார். இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் தன்னை சோர்வடைய விடாமல் வைத்துக்கொள்ள பிடித்தமான வேலைகளை தொடர்ந்து செய்வதாக அவர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். தினமும் பேப்பர் படிப்பது, புத்தகங்கள் படிப்பது, டிவி பார்ப்பது, சுடோகு விளையாடுவது எனத் தன்னுடைய நேரத்தைப் பயனுள்ளதாக வைத்துக்கொண்டிருக்கிறார். தன்னால் முடிந்த தேவைகளைத் தானே செய்துகொள்ளவும் விரும்பியிருக்கிறார். அவருடைய மருமகள்கள் படப்பிடிப்புப் பயணங்களிலும் மற்ற தேவைகளிலும் தன்னை அன்புடன் கவனித்துக்கொள்வதாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். சினிமாவில் மட்டுமல்லாமல், தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் வத்சலா ராஜகோபால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார். சித்தி, ஆனந்தம், முந்தானை முடிச்சு உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஒரு நடிகையாக அவருடைய பயணத்தைப் பார்த்தால், இளம் வயதில் கிடைக்காத வாய்ப்பு முதுமையில் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை வைத்து அவர் பல படங்களிலும் தொடர்களிலும் நடித்திருக்கிறார். விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட பிறகும் தன்னால் முடிந்தவரை கலைப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். அதனால்தான் வத்சலா ராஜகோபால் அவர்களை வெறும் பாட்டி நடிகை என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. இன்று 93 வயதில் வயது மூப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்திருக்கும் அவருடைய உடல், பல்லாவரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஒரு தலைமுறை ரசிகர்களுக்கு பல படங்களிலும், சீரியல்களிலும் பாசமான பாட்டியாக தெரிந்த வத்சலா ராஜகோபால், நிஜ வாழ்க்கையில் பல சோதனைகளைக் கடந்து வந்தவர். சினிமாவில் அறிமுகமாக வயது ஒரு தடையில்லை என்பதற்கு அவருடைய வாழ்க்கையே ஒரு உதாரணம். அவருடைய மறைவு செய்தி ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் நடித்த கதாபாத்திரங்கள் வழியாக அந்த முகம் தொடர்ந்து நினைவில் இருக்கும்.கேரளாவில் தொடங்கிய கலை
மணிரத்னம் கொடுத்த முதல் வாய்ப்பு
நாகேஷுடன் நடிக்க வாய்ப்பு
முத்துக்குமரனுக்கு ஆதரவாக சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் ஆவேசம்.. வாஹிதா சொன்னது என்ன?
விபத்தில் கால்கள் பாதிப்பு
குலசை கோவிலில் ஆடிய சீரியல் நடிகைகள்.. முத்தாரம்மனிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறியது என உருக்கம்
சீரியல்களிலும் மறக்க முடியாத முகம்