சென்னை: விருதுநகரில் தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் ஊருக்குள் பஸ் வராது என்று ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த பெண் சோசியல் மீடியாவில் வீடியோ வெளியிட, அது வைரல் ஆனது. அதற்காக நேரடியாக சென்று எம்எல்ஏ செல்வம் நடவடிக்கை எடுத்திருக்கிறார். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ களத்தில் இறங்கியது சரிதான். ஆனால், அவர்களிடம் பேசும்போது பயன்படுத்திய வார்த்தைகள்தான் இப்போது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. "எம்எல்ஏவாக இருந்தால் மற்றவர்களை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசலாமா?" என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விருதுநகர் பகுதியில் தனியார் பேருந்துகளால் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. பேருந்தின் முன்பக்கத்தில் விருதுநகர் என்று பெயர் போட்டிருந்தாலும், சில பேருந்துகள் விருதுநகர் ஊருக்குள் வராமல், வேறு வழியாக சென்று மற்ற ஊர்களுக்கு செல்வதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் மக்கள், குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், விருதுநகர் பேருந்து நிலையத்திற்கு செல்லாது என்று கூறி, பெண்களிடம் முறையற்ற வகையில் பேசியதாக ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரம் கவனத்துக்கு வந்ததை தொடர்ந்து, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் போனில் பேசி இருக்கிறார். தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் ஒரு மாத காலம் பணியிடைநீக்கம் செய்து அதை வீடியோவாக எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பெண்களிடம் முறையற்ற வகையில் பேசுவது தவறு. அதேபோல, பயணிகளுக்கு சேவை வழங்க வேண்டிய பேருந்து அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு பேருந்து எந்த ஊருக்கு செல்கிறது, எங்கு நிற்க வேண்டும், எந்த வழியாக செல்ல வேண்டும் என்ற விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். பயணிகளிடம் மரியாதையாக பேசுவதும் ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்புதான். இந்த விஷயத்தில் எம்எல்ஏ தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதைப் பலரும் வரவேற்கின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த விதம் குறித்தும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் எம்எல்ஏ பேசிய வீடியோவை அவரே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டதால் அது வைரலானது. அந்த வீடியோவில் எம் எல் ஏ டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை செய்யும் போது நீ, நா.. ஒருமையில் பேசி இருக்கிறார் இதை வைத்து தான் பலரும் விமர்சிக்கின்றனர். தவறு செய்ததாக புகார் எழுந்தவர்கள் மீது விசாரணை நடத்தி, விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுப்பதுதான் மக்கள் பிரதிநிதியின் பொறுப்பு. அதற்காக அவர்களிடம் மரியாதை குறைவாக பேச வேண்டுமா? என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. "எம்எல்ஏவாக இருப்பதால் மற்றவர்களை ஒருமையில் பேசலாமா? மக்கள் பிரதிநிதி என்றால் மற்றவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டாமா? தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க சொல்லலாம். அதற்காக வீடியோவில் இப்படி பேச வேண்டிய அவசியம் என்ன?" என்ற கேள்விகளை சிலர் முன்வைக்கின்றனர். அதே நேரத்தில், பெண்களிடம் முறையற்ற வகையில் பேசியதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், எம்எல்ஏ நேரில் சென்று தட்டிக்கேட்டது சரிதான் என்றும், பயணிகளின் பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.விருதுநகர் பஸ் பிரச்சனை
விருதுநகர் எம்எல்ஏ ஆக்சன்
விமர்சனங்கள்
மக்கள் கருத்து