சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'டோரதி' படத்தைச் சுற்றி இப்போது பெரிய விவாதமே போய்க்கொண்டிருக்கிறது. படத்தில் பேசப்பட்டுள்ள பாலின வேறுபாடுகள், சில காட்சிகள் குறித்து ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, இயக்குநர் மோகன் ஜி தெரிவித்த கருத்துக்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலடி கொடுத்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இப்படியான சூழலில், படத்தைப் பார்த்த நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவு இப்போது கவனம் ஈர்த்திருக்கிறது.
விஷ்ணு விஷால் பதிவு
விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், 'டோரதி' படத்தைப் பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "வாழு, வாழ விடு. வேறுபாடுகளையும் தேர்வுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களின் வாழ்க்கையை சிதைக்காமலோ, அவர்களுக்குத் துன்பம் கொடுக்காமலோ இருக்கும் வரை, இந்த உலகில் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான உரிமையும் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு" என்று சொல்லி இருக்கிறார்.
மேலும், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினர் சிறப்பான பணியை செய்துள்ளதாகப் பாராட்டியிருக்கிறார். ரிஷிகாந்தின் நடிப்பு தனக்குப் பிடித்திருந்ததாகவும், குறிப்பாக சனந்தின் அப்பாவித்தனம் மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜாவைப் பற்றி குறிப்பிடும்போது, "ராஜா சார் இப்போதும் ராஜா சார் தான்" என்றும் பாராட்டியுள்ளார். கடைசியாக, "நமக்கு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேவை... அன்பும் தேவை" என்று அவர் கூறியிருப்பதுதான் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டோரதி படத்தை பற்றிய விவாதம் ஏற்கெனவே சூடுபிடித்திருக்கிறது. படத்தில் பாலின வேறுபாடுகள் குறித்து பேசப்பட்ட விதம் மற்றும் இறுதிக்காட்சியில் இடம்பெறும் முத்தக்காட்சி ஆகியவை சிலருடைய விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. அதே நேரத்தில், படத்தின் கருத்தையும் அதில் நடித்தவர்களின் நடிப்பையும் பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள். இந்த சூழலில் இயக்குநர் மோகன் ஜி தெரிவித்த கருத்துகளுக்கு கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த பதிலடி, படம் தொடர்பான விவாதம் இன்னும் தீவிரமானது. ஒரு படத்தின் கருத்தை விமர்சிப்பதற்கும், அதில் பேசப்படும் மனிதர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் உணர்வுகளை பற்றி பேசுவதற்கும் இடையே உள்ள வேறுபாடு குறித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இப்படியான நேரத்தில் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவு, படத்தை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களின் வாழ்க்கைத் தேர்வுகளை ஏற்றுக்கொள்வது பற்றிய அவரது நிலைப்பாட்டையும் காட்டுகிறது. டோரதி படத்துக்கு விமர்சனங்கள் ஒருபுறம் வந்தாலும், திரையுலகை சேர்ந்த பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்டோர் படத்தைப் பாராட்டி இருந்தனர். நடிகர் ரஜினிகாந்தும் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.. இதனால், படத்தைச் சுற்றி இரண்டு விதமான கருத்துகள் உருவாகியுள்ளன. படத்தில் பேசப்பட்ட விஷயங்களையும் அதன் அணுகுமுறையையும் விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வலியுறுத்தும் படமாக இதைப் பார்ப்பவர்கள் மறுபக்கம் இருக்கிறார்கள்.மோகன் ஜி - கார்த்திக் சுப்புராஜ் பிரச்சினை
டோரதிக்காக கார்த்திக் சுப்புராஜ் கேட்டது ஒன்று.. ஆனால் இளையராஜா கொடுத்தது வேற! பின்னணி சுவாரசியம்
இளையராஜாவை நேரில் சந்தித்து காலில் விழுந்த கார்த்திக் சுப்புராஜ்.. நெகிழ்ச்சி காட்சி
பிரபலங்கள் பாராட்டு