சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்ல, "மரம் மனிதன்" என்ற பெயரையும் சம்பாதித்தவர் நடிகர் விவேக். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவுரையை ஏற்று, ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற கனவோடு தனது வாழ்க்கையின் கடைசி வரை மரம் நடுவதை தீவிரமாக செய்தார். இன்று அவர் நம்முடன் இல்லாவிட்டாலும், அவர் தொடங்கிய அந்த பசுமைப் பயணம் இன்னும் நின்றுவிடவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற Green Kalam Moment நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விவேக்கின் மனைவி உருக்கமாக பேசியது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அவர் பேசும்போது, "விவேக் சார் உயிரோடு இருந்த காலத்திலேயே 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்காங்க. அவர் மறைந்த பிறகும் அந்த பணியை நாங்கள் நிறுத்தவில்லை. Green Kalam Moment என்ற பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 80 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கோம். இது ஆரம்பம் தான். இன்னும் நிறைய செய்ய வேண்டும்" என்று சொல்கிறார். அதோடு, கடந்த சில மாதங்களாக அந்த பணியில் ஒரு சிறிய தொய்வு ஏற்பட்டதாகவும், ஆனால் இப்போது மீண்டும் புதிய நம்பிக்கை வந்திருப்பதாகவும் அவர் மனம் திறந்து பேசினார். "கொஞ்ச நாளா ஒரு தொய்வு இருந்தது. ஆனா இப்போ நம்ம சகோதரரின் ஆட்சி வந்திருக்கிறது. தமிழக அரசு எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புறேன். அதனால் மீண்டும் புத்துணர்ச்சியோட மரம் நடும் பணியை இன்னும் பெரிய அளவில் தொடங்கப் போறோம்" என்று கூறினார். மேலும், முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றதையும், அந்த முயற்சிக்கு விஜயின் அம்மா சோபா சந்திரசேகர் வாழ்த்து சொன்னதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த பசுமைப் பணிக்கு அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்றார். பேச்சின் இறுதியில், விவேக்கின் நிறைவேறாத கனவை நினைத்து அவர் கண்கலங்கிய தருணம் அங்கிருந்த பலரையும் நெகிழ வைத்தது. "உலகம் வெப்பமயமாதலை தடுக்க ஒரு கோடி மரம் நட வேண்டும் என்பதுதான் விவேக்கின் மிகப்பெரிய ஆசை. அதை அவர் முழுமையாக செய்து முடிக்க முடியவில்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற கனவை நாமெல்லாரும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும். மரம் நடுவோம்... உலகத்தை காப்பாற்றுவோம்" என்று உணர்ச்சியோடு பேசினார். விவேக் உயிருடன் இருந்த காலத்தில், எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் மரக்கன்றுகளைப் பற்றியே பேசுவார். பள்ளி, கல்லூரி, அரசு நிகழ்ச்சி, தனியார் நிறுவனம் என்று எங்கு அழைத்தாலும், "ஒரு மரம் நட்டால் ஒரு உயிரை காப்பாற்றியதற்கு சமம்" என்று சொல்லி ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஊக்குவித்தார். அப்துல் கலாமை சந்தித்த பிறகுதான் இந்த மரம் நடும் இயக்கம் அவருடைய வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியமாக மாறியது. திரைப்பட படப்பிடிப்பு இருந்தாலும், வெளியூர் பயணம் இருந்தாலும், இடம் கிடைத்தாலே மரக்கன்றுகளை நட்டுவிட்டு தான் அங்கிருந்து கிளம்புவார். அதனால்தான் இன்று வரை ரசிகர்கள் அவரை "சின்ன கலைவாணர்" என்று மட்டுமல்ல, "பசுமை மனிதர்" என்றும் நினைவுகூர்கிறார்கள். விவேக் மறைந்த பிறகு இந்த பணி நின்றுவிடும் என்று பலர் நினைத்த நேரத்தில், அவரது குடும்பத்தினர் அமைதியாக அந்த பொறுப்பை ஏற்று தொடர்ந்து செய்து வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 80 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.விவேக் மனைவி பேட்டி
மரம் நடுதல்
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்!
கண் கலங்கிய விவேக் மனைவி