சென்னை: சாலமன் பாப்பையா என்றதும் நம் நினைவுக்கு முதலில் வருவது பட்டிமன்றம். மைக்கை பிடித்துக் கொண்டு தனக்கே உரிய நகைச்சுவை கலந்த தமிழில் விவாதத்தை நகர்த்தும் அந்த முகம் பல தலைமுறைகளுக்கு பரீட்சமானது. ஆனால் அவருக்கு சினிமாவில் ஒரு சின்ன மறக்க முடியாத பயணம் இருந்தது. இன்னும் சுவாரசியம் என்னவென்றால் அந்த சினிமா பயணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்துடன் முடிந்துவிட்டது. அதற்கு பின்னால் நடந்த கதைதான் இப்போது அவர் மறைவை ஒட்டி மீண்டும் பேசப்படுகிறது.
சாலமன் பாப்பையா சினிமாவுக்கு புதிதாக வந்த நடிகர் கிடையாது. கல்லூரி காலத்தில் இருந்தே நாடகம், பேச்சு என மேடை அனுபவம் இருந்தவர். பின்னாலும் சினிமாவிலும் முகம் காட்ட ஆரம்பித்தார். முதல்வன், பாய்ஸ், சிவாஜி என இயக்குனர் ஷங்கரின் படங்களில் அவர் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் டூயட், புது வருஷம், எஸ் மேடம் போன்ற படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் ரசிகர் மக்கள் மனதில் அவர் சினிமா கேரக்டராக பதிந்தது சிவாஜி படத்தில் தான்.
ரஜினிகாந்த், ஸ்ரேயா நடித்த சிவாஜி படத்தில் ரஜினியின் பக்கத்து வீட்டுக்காரராக தொண்டைமான் என்ற கேரக்டரில் சாலமன் பாப்பையா வருவார். ரஜினி பெண் பார்க்க வரும் காட்சிகளில் தன்னுடைய இரண்டு மகள்களான அங்கவை, சங்கவை பற்றி அவர் பேசும் அந்த ரைமிங் காமெடி காட்சிகள் அப்போது தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்போது நினைத்தாலும் அந்த காட்சிகளில் சாலமன் பாப்பையாவின் முகமும் பேச்சும் நினைவிற்கு வரும். ஆனால் அந்த படம் அவருக்கு ஒரு விதமான கசப்பான அனுபவமாக மாறிவிட்டது. சிவாஜி வெளியான பிறகு அங்கவை, சங்கவை தொடர்பான காட்சிகள் சர்ச்சையானது. குறிப்பாக உருவகேலி தொடர்பான விமர்சனங்களும் இருந்தது. பின்னர் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா ஒரு பேட்டியில் பேசும்போது, சாலமன் பாப்பையாவிடம் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கதை வேறு என்றும் படத்தில் கடைசியில் வந்த காட்சிகள் வேறு விதமாக இருந்தது அதனால் படம் வெளியான பிறகு விமர்சனங்களால் சாலமன் பாப்பையா மனதளவில் பாதிக்கப்பட்டு விட்டார். அவருடைய வீட்டிலும் இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு இருந்தது. அதனால் தான் அதற்குப் பிறகு வந்த சினிமா வாய்ப்புகளை அவர் பெரும்பாலும் ஏற்கவில்லை என்று ராஜா அதில் கூறியிருந்தார். சினிமா அவரை விட்டு விலகவில்லை சினிமாவை தான் அவர் விட்டு விலகி இருந்தார். ஒரு பக்கம் பட்டிமன்ற மேடைகளில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள், இன்னொரு பக்கம் தமிழை எளிமையாக மக்களிடம் கொண்டு சென்ற பேராசிரியர். ஆனால் சிவாஜிக்கு பிறகு சாலமன் பாப்பையா பெரிதாக நடிக்காததற்கு காரணம் அவரை பற்றி எழுந்த விமர்சனங்கள் தான் என்று ராஜா பேசிய பழைய வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையா
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேட்டி
மீண்டும் சினிமாவில் நடிக்காத காரணம்