டோரதிக்காக கார்த்திக் சுப்புராஜ் கேட்டது ஒன்று.. ஆனால் இளையராஜா கொடுத்தது வேற! பின்னணி சுவாரசியம்

  • சென்னை: ஒரு படத்தில் ஒரு காட்சியை பார்க்கும்போது அந்த காட்சியின் பின்னால் வரும் இசை நம்முடைய கவனத்துக்கு வராமல் இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் அந்த இசைதான் அந்த காட்சியை இன்னும் ஆழமாக நமக்குள் கொண்டு போய் நிறுத்தும். அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தைத்தான் டோரதி படத்தின் ஒரு காட்சியில் இளையராஜா உருவாக்கியிருக்கிறார்.

    Advertisement

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் டோரதி, 90-களின் மதுரை பக்கத்து கிராமத்தை பின்னணியாக வைத்து உருவாகியிருக்கிறது. நீண்ட நாட்களாக மனதில் இருந்த இந்த கதையை கொரோனா காலகட்டத்தில் திரைக்கதையாக உருவாக்கி, பல கட்டங்களில் மாற்றி எழுதியதாக கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

    Advertisement

    இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்பதுதான் கார்த்திக் சுப்புராஜின் நீண்ட நாள் ஆசை. சொல்லப்போனால், படத்துக்கான பிட்ச் டெக் தயாரிக்கும் போதே இசையமைப்பாளர் என்ற இடத்தில் இளையராஜாவின் பெயரை போட்டுவைத்திருந்தாராம்.

    அந்த அளவுக்கு ஆசை இருந்தாலும், இளையராஜாவிடம் சென்று நேரடியாக "என் படத்துக்கு இசையமைக்க வேண்டும்" என்று கேட்பதற்கே கார்த்திக் சுப்புராஜுக்கு தயக்கம் இருந்திருக்கிறது. கடைசியில் படத்தை முடித்துவிட்டு, "இப்படியொரு படம் பண்ணியிருக்கேன். உங்களுக்கு பிடிச்சிருந்தா இசை பண்ணிக் கொடுங்க" என்று கேட்டிருக்கிறார்.

    படத்தை பார்த்த இளையராஜா, "நாளைக்கு காலை 8 மணிக்கு வந்துருங்க, ஸ்டார்ட் பண்ணிரலாம்" என்று சொன்னதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து 25 நாட்கள் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அந்த 25 நாட்களும் தனக்கு கனவா, நிஜமா என்று தெரியாத அளவுக்கு இருந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

    Advertisement

    அந்த கூட்டணியில் உருவான பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டன. முதலில் வெளியான 'கல்யாண விருந்து' பாடலை அந்தோணி தாசன், யுகேந்திரன், பிரியா ஜெர்சன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். அடுத்ததாக வெளியான 'முத்துமணி' பாடலை இளையராஜா மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியிருக்கிறார்கள். அந்த பாடலுக்கு இளையராஜாவே வரிகளையும் எழுதியிருக்கிறார்.

    குறிப்பாக 'முத்துமணி' பாடல் உருவான தருணத்தைப் பற்றி கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்த விஷயம் ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியது. தன்னுடன் இசைப்பணியை தொடங்கிய முதல் நாளிலேயே இளையராஜா ஹார்மோனியத்தை எடுத்து 'முத்துமணி' பாடலுக்கான இசையை உருவாக்க ஆரம்பித்ததாகவும், அவர் 'வனக்கிளியே' என்று பாடத் தொடங்கிய அந்த தருணத்தை பார்த்தபோது வார்த்தைகளே இல்லாமல் போய்விட்டதாகவும் கார்த்திக் கூறியிருக்கிறார்.

    Advertisement

    ஆனால் இப்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவது பாடல்கள் மட்டும் கிடையாது. படத்தின் பின்னணி இசையிலும் இளையராஜா எப்படியெல்லாம் காட்சியை அணுகியிருக்கிறார் என்பதுதான். படத்தில் சுப்பு ஒரு அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ளும் காட்சி வருகிறது. அதன்பிறகு வெளியே இருப்பவர்கள் ஜன்னலை தட்டி கத்துகிறார்கள். இந்த காட்சியை படமாக்கும்போதே கார்த்திக் சுப்புராஜின் மனதில் ஒரு வித்தியாசமான இசை இருந்திருக்கிறது. ஒரு ஓபரா அரங்கில் 10, 50 பேர் சேர்ந்து கூட்டமாக ஹம்மிங் கொடுப்பது போல இந்த காட்சியின் இசை இருக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார்.

    இந்த விஷயத்தை இளையராஜாவிடம் சொல்லியபோது, உங்களுக்கு ஓபரா மியூசிக் மாதிரியே தான் வேண்டுமா? இல்லை நான் வேற மாதிரி மியூசிக் கொடுக்கவா? என்று இளையராஜா கேட்டாராம். அதற்கு கார்த்திக் சுப்புராஜ், "சார்... அதுதான் வேண்டும். அதற்குத்தான் காத்திருக்கிறேன்" என்று சொன்னாராம். அதன்பிறகு அந்த காட்சிக்காக இளையராஜா உருவாக்கிய இசைதான் அந்த காட்சியை இன்னும் வித்தியாசமான அனுபவமாக மாற்றியிருக்கிறது.

    Advertisement

    முதலில் கிளாசிக்கல் பாணியில் தொடங்கும் அந்த இசையில் ஒரு பெண்ணின் ஹம்மிங் வருகிறது. அது கர்நாடக இசை பாடுவது போல இருக்கும். அதன்பிறகு ஆண் குரலும் சேர்கிறது. இரு குரல்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு, சண்டை போடுவது போல அந்த ஹம்மிங் அமைக்கப்பட்டிருக்கிறது.
    அந்த ஆண் குரலுக்காக பாடகர் சஞ்சய் சுப்ரமணியத்திடம் போனில் பேசி, எப்படி பாட வேண்டும் என்று இளையராஜா விளக்கி அந்த குரலை வாங்கியிருக்கிறார். பெண் குரலில் வரும் ஹம்மிங்கை பிரியா ஜெர்சன் பாடியிருக்கிறார். இதுதான் அந்த காட்சியின் சுவாரஸ்யமே.

    திரையில் ஒரு பக்கம் கதாபாத்திரங்கள் பதற்றமாக ஜன்னலை தட்டி கத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை நாம் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் அந்த காட்சிக்குள் இருக்கும் பதற்றத்தையும், குழப்பத்தையும், மோதலையும் இரண்டு குரல்களின் ஹம்மிங் மூலம் காதால் கேட்க வைக்கிறார் இளையராஜா. ஒரு காட்சிக்கு "இங்கே சத்தம் போதும்" என்று முடிவு செய்யாமல், அந்த காட்சியில் இருக்கும் உணர்வையே வேறொரு இசை வடிவத்தில் எப்படி சொல்லலாம் என்று யோசித்திருக்கிறார்.

    Advertisement

    அதனால்தான் கார்த்திக் சுப்புராஜ் இந்த இசையைப் பற்றி பேசும்போது, இப்படி ஒரு விஷயத்தை யோசித்து செய்திருக்கிறாரே என்று நினைத்தாலே மெய்சிலிர்ப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நாம் திரையில் அந்த காட்சியை ரசித்தபோது பின்னால் ஒலித்த இந்த இசை தனியாகவே ஒரு அனுபவமாக இருந்திருக்கிறது. டோரதி படத்தின் வெளியிடப்பட்ட OST-ல் மொத்தம் 18 பின்னணி மியூசிக் ட்ராக் அவ எப்ப உன்கிட்ட வந்தா எதுக்கு அந்த சண்டை போட்டு கேக்கணும்இடம்பெற்றுள்ளன. படத்தின் பின்னணி இசையையும் தனி ஆல்பமாக வெளியிட வேண்டும் என்ற யோசனையை படத்தின் ஆரம்பத்திலேயே இளையராஜாதான் சொன்னதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

    அதனால் டோரதி படத்தின் இசை என்பது இரண்டு பாடல்களை மட்டும் ரசிப்பதற்கான விஷயம் இல்லை. 'கல்யாண விருந்து', 'முத்துமணி' போன்ற பாடல்களில் ஒரு பக்கம் பழைய ராஜாவின் இசை வாசனையை ரசிகர்கள் உணர்கிறார்கள். மறுபக்கம், இப்படிப்பட்ட பின்னணி மியூசிக் ட்ராக் காட்சியின் உணர்வை எப்படி இசையாக மாற்றுகிறார் என்பதை கேட்க முடிகிறது.

    English Summary

    When watching a scene in a movie, the background music often goes unnoticed. Yet, at times, it is precisely that music that allows the scene to resonate deeply within us. Ilaiyaraaja has created just such an experience in a scene from the film *Dorothy*.