சென்னை: பாரதிராஜாவின் மறைவை தொடர்ந்து சோஷியல் மீடியாவிலும், சில ஊடகங்களிலும் பல்வேறு விவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தபடியே உள்ளன.. பாரதிராஜாவின் இறுதி நாட்களில் குடும்பத்தினர் அவரை தனியாக விட்டுவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது மகன் மனோஜின் மரணம் குறித்த பல்வேறு வதந்திகளுக்கு பாரதிராஜாவின் உடன்பிறந்த சகோதரரும் பிரபல தயாரிப்பாளருமான ஜெயராஜ் நேர்காணல் ஒன்றில் மிக விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் வரலாற்றுச் பக்கங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், wow tamizhaa என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஜெயராஜ், ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்துத் தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.. ஜெயராஜ் பேசும்போது, "என் அண்ணன் பாரதிராஜாவை அவரது குடும்பத்தினர் இறுதி நேரத்தில் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் அனைத்தும் தவறானவை. எதிர்பாராத சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மட்டுமே குறிப்பிட்ட அந்த நேரத்தில் குடும்பத்தினரால் அருகில் இருக்க முடியாமல் போனது. தேனிக்கு செல்ல வேண்டியிருந்ததால், அதற்கு முன்பாக, அண்ணனைப் பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸையும், தகுந்த ஆட்களையும் நியமித்துவிட்டு, அவர்களுக்குத் தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் வழங்கிவிட்டுத்தான் எனது அண்ணியும், உறவினர்களும் தேனிக்குக் கிளம்பி சென்றிருந்தனர். தேனியில் உள்ள வேலைகளை முடித்ததுமே சென்னைக்குக் கிளம்பி வந்துவிடுவதாக சொல்லிவிட்டுதான் சென்றார்கள். ஆனால் இதை ஊடகங்கள் உட்பட எல்லாருமே பூதாகரமாக திரித்து பேசிவிட்டார்கள். என் அண்ணனைத் தனது வழிகாட்டியாகக் கருதியவர் கங்கை அமரன்.. ஆனால், அங்கு நடந்த உண்மைச் சூழ்நிலை என்னவென்று கங்கை அமரனுக்குகூட தெரியாது.. அவர் தனது தனிப்பட்ட ஆதங்கத்தின் காரணமாக அப்படி பேசிவிட்டார். அந்த பேட்டிகளை பார்த்தவுடன் நாங்கள் அவரிடம் பேசி உண்மைகளை விளக்கினோம். நிலைமையைப் புரிந்து கொண்ட கங்கை அமரனும், தான் அப்படி பேசியதற்காக எங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இந்த விஷயம் இப்போது ஊடகங்களில் பெரிதாக்கப்பட்டுவிட்டதால் அனைவரும் இதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து ஊடகங்கள் இந்தச் சர்ச்சையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அண்ணன் காலமான தகவல் கிடைத்தபோது நான் தேனியில் உள்ள எனது வீட்டில் இருந்தேன். இந்தத் துயரச் செய்தி கிடைத்த அடுத்த நிமிடமே எனது அண்ணியும் மச்சான் மனோஜ்குமாரும் யாரிடமும் சொல்லாமல் உடனடியாக சென்னை நோக்கி கிளம்பிவிட்டனர். அவர்கள் திண்டுக்கல் வந்ததும்தான், என்னைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் நான் இருந்த பகுதிக்குள் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காத காரணத்தால், அவர்களால் என்னை உடனே தொடர்பு கொள்ள முடியாமல் போனது. பிறகு சிக்னல் கிடைத்தவுடன், எனக்கு ஏன் முதலில் தகவல் தெரிவிக்கவில்லை என்று நான் கோபப்பட்டேன். சிக்னல் கிடைக்காத காரணத்தை அவர்கள் விளக்கினார்கள்.. அபபோது என்னிடம் வண்டி எதுவும் இல்லாததால் உடனடியாக ஒரு டாக்ஸியைப் பிடித்துக் கொண்டு நானும் எனது மனைவியும் சென்னை நோக்கிக் கிளம்பினோம். ஒருகட்டத்தில் அண்ணனின் உடல்நிலை நன்றாக தேறி வந்தது.. அவர் 95 வயது வரை வாழ்ந்து இன்னும் இரண்டு படங்களாவது இயக்குவார் என்ற பலத்த நம்பிக்கை எங்கள் எல்லாருக்குமே இருந்தது. 'குற்றப்பரம்பரை' கதையைத் படமாக எடுக்க வேண்டும் அல்லது வேறு ஒரு படமாவது இயக்கிவிட்டுத்தான் எனது சினிமா பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று அண்ணன் அடிக்கடி சொல்வார்.. அந்த நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு இந்தத் திடீர் மறைவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அண்ணன் உடல்நலத்தோடுதான் இருந்தார். ஆனால், குருவி உட்காரப் பனம்பழம் விழுந்த கதை போல அண்ணி ஊருக்குச் சென்ற நேரத்தில் இந்தத் துக்க நிகழ்வு எதிர்பாராமல் நடந்துவிட்டது. இறுதி நேரத்தில் அருகில் யாரும் இருக்க முடியாமல் போனது எங்களுக்கும் அண்ணிக்கும் பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டதே தவிர, யாரும் அவரைத் தனியாக விட்டுவிட்டுச் செல்லவில்லை. அதேபோல, மனோஜிற்கு சர்க்கரை நோய் இருந்த விஷயம் எங்கள் குடும்பத்தில் யாருக்குமே தெரியாது. தனக்குச் சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தால், பாரதிராஜா தன் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே என்று துடிதுடித்துப் போவார் என்ற பயத்தில், மனோஜ் யாருக்கும் தெரியாமல் தனக்குத் தானே இன்சுலின் செலுத்திக் கொண்டு அதை மறைத்து வந்தான். கடைசி நேரத்தில்தான் இந்த விஷயம் எங்களுக்கே தெரிய வந்தது. இதனால் என் அண்ணன் பாரதிராஜாவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அதனால் உண்மை நிலையை அறியாமல் ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்" என்று ஜெயராஜ் தனது நேர்காணலில் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ்
தேனிக்கு சென்ற அண்ணி
சர்ச்சையை நிறுத்தி கொள்ளுங்கள்
கடைசி ஆசை நிறைவேறவில்லை
தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்கள்