டோரதி கிளைமாக்ஸ் முத்தம் ஏன்? “இப்படி முடிச்சிருக்கலாமே”ன்னு சொல்றவங்க இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

  • சென்னை: கார்த்திக் சுப்புராஜின் டோரதி படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படத்தைப் பற்றி ஒரு விஷயத்தை மட்டும் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறார்கள். படம் நல்லா இருக்கு... ஆனா கிளைமாக்ஸ் மட்டும் வேற மாதிரி இருந்திருக்கலாமே என்பதுதான் அது. குறிப்பாக கடைசி காட்சியில் சுப்பு மற்றும் கார்த்தி இடையே வரும் அந்த முத்தத்தை பலரால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிலருக்கு அந்த முடிவு திடீரென்று வந்தது போல இருக்கிறது.

    Advertisement

    இன்னும் சிலர், அந்த உறவு அந்த இடத்துக்கு எப்படி வந்தது என்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக காட்டியிருக்கலாம் என்று நினைக்கிறார்கள். உண்மையிலேயே சில விமர்சனங்களிலும் இதே கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், "இந்த படம் இப்படித்தான் முடிந்திருக்க வேண்டும்" என்று நினைக்கிறவர்களின் மனநிலையையே கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், இந்த கிளைமாக்ஸ் ஏன் இப்படி வைக்கப்பட்டது என்பதற்கான இன்னொரு கோணம் புரியலாம்.

    Advertisement

    சோசியல் மீடியா கருத்து

    இதுகுறித்து பா. சரவணகாந்த் என்ற facebook வாசகர் எழுதியிருக்கும் பார்வைதான் இங்கே கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. அவர் சொல்கிற விஷயம் என்னவென்றால், டோரதி 3 இடங்களில் ஏதாவது ஒன்றில் முடிந்திருந்தால் பலருக்கும் வசதியாக இருந்திருக்கும். முதலில், சுப்புவை கொல்லாமல் விட்டுவிட்டு கார்த்தி "வரேண்டி" என்று சொல்லிவிட்டு கிளம்பும் இடத்திலேயே படம் முடிந்திருந்தால் பரவாயில்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.

    இன்னும் சிலர், கார்த்தி மீண்டும் சுப்புவைத் தேடிப் போகிறான் என்ற உணர்வோடு படம் முடிந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள். மற்றொரு தரப்பினர், "என்ன ஆனாலும் நீ என் பிரண்டுதான்" என்று கார்த்தி சொல்லி முடித்திருந்தால் இன்னும் எளிதாக இருந்திருக்கும் என்கிறார்கள். இந்த மூன்று முடிவுகளுமே பார்வையாளர்களுக்கு ஒரு வகையில் பழக்கமான முடிவுகள். "நடந்தது நடந்துடுச்சு... இனி விதி விட்ட வழி" என்று கடந்து செல்வது ஒரு மனநிலை.

    Advertisement

    ரசிகர்களின் மனநிலை

    "பாவம்... அவளுடைய வாழ்க்கை இப்படித்தான் போகட்டும். கார்த்தி போய் பார்த்து நல்லா இருந்தா இருக்கட்டும்" என்று விலகி நிற்பது இன்னொரு மனநிலை. "என்ன ஆனாலும் நீ என் நண்பன்" என்று உறவை நட்புக்குள்ளேயே வைத்துக்கொள்வது இன்னொரு மனநிலை. ஆனால் கார்த்திக் சுப்புராஜ் இந்த மூன்றையும் தாண்டி இன்னொரு விஷயத்தை சொல்ல முயற்சி செய்திருக்கிறார் என்று பா. சரவணகாந்த் பார்க்கிறார். அது ஏற்றுக்கொள்ளுதல்.

    இரவு நேரத்தில் நகரத்தை விட்டு வெளியே செல்லும் பாதைகளில் நின்றுகொண்டிருக்கும் திருநங்கைகளை நாம் பலரும் பார்த்திருக்கலாம். ஆனால் அவர்களை அந்த இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்திய வாழ்க்கை என்ன என்பதை எத்தனை பேர் யோசித்திருக்கிறோம்? ஒரு மனிதரின் பாலின அடையாளம் மாறுபடுகிறது என்பதற்காக அவருடைய வாழ்க்கை வாய்ப்புகளே குறைந்து போகும் சூழல் இன்னும் சமூகத்தில் இருக்கிறது.

    Advertisement

    கிளைமேக்ஸ் முத்தம்

    குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை, கல்வியைத் தொடர முடியாத நிலை, வேலை வாய்ப்புகள் குறைவது என பல பிரச்சனைகள் ஒன்றோடு ஒன்று சேரும்போது, அவர்களுக்கு வாழ்க்கையை நடத்துவதற்கான வழிகளே சுருங்கிப் போகின்றன. இதைத்தான் "சூப்பர் டீலக்ஸ்" படத்தில் ஷில்பா கதாபாத்திரம் மூலமாகவும் பார்த்திருக்கிறோம். குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படாமல், சமூகம் முழுவதும் தன்னை எப்படி பார்க்கிறது என்ற போராட்டத்துக்குள் சிக்கியிருக்கும் ஒருவராக அந்த கதாபாத்திரம் காட்டப்பட்டது.

    சமூகத்தை மாற்றிய 'டோரதி’.. சந்தோஷமாக வெளியே வரும் மக்கள்! நெகிழ்ந்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்!

    கடைசியில் "நீ ஆம்பளையா இரு, பொம்பளையா இரு... ஆனா வீட்ல இரு" என்ற வார்த்தை வரும்போது, அங்கே சொல்லப்படுவது ஒரு பாலின அடையாளத்தைப் பற்றிய தீர்ப்பு இல்லை. நீ எப்படி இருந்தாலும் நீ எங்களோட ஆள்தான் என்ற ஏற்றுக்கொள்ளுதல்தான். டோரதியிலும் கார்த்திக் சுப்புராஜ் அதே ஏற்றுக்கொள்ளுதலை வேறொரு உறவின் வழியாக சொல்ல முயற்சி செய்திருக்கலாம் என்பதுதான் பா. சரவணகாந்த் பார்வை.

    Advertisement

    ஆண் - பெண் நட்பு சில நேரங்களில் காதலாக மாறுவது நமக்கு புதிதான விஷயம் கிடையாது. அந்த மாதிரி உறவு மாற்றத்தை நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே அதே மாற்றத்தை சுப்பு மற்றும் கார்த்தி உறவில் வைப்பதுதான் பலருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் அந்த முத்தக் காட்சி வந்தவுடன், "இது ஏன்?" என்ற கேள்வி எழுகிறது.ஆனால் இன்னொரு கேள்வியையும் நாம் கேட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது.

    சுப்புவை இன்னும் ஒரு ஆணாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று நாம் ஏன் நினைக்கிறோம்? அந்த காட்சியில் கார்த்தியும் டோரதியும் தங்களுடைய உணர்வைப் பற்றி தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுடைய உறவை என்ன பெயரில் அழைக்க வேண்டும் என்று பார்வையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இதனால்தான் அந்த முத்தக் காட்சி சிலருக்கு பிடிக்காமல் போவது வெறும் "காட்சி பிடிக்கவில்லை" என்பதோடு முடிந்துவிடவில்லை. நம்முடைய பழக்கமான பார்வைக்கும் அந்த காட்சி சவால் விடுகிறது.

    Advertisement
    டோரதி vs மீசைய முறுக்கு 2... 5 நாள் வசூலில் யாருக்கு கை ஓங்குது? நேற்றைய நிலவரம் இதுதான்!

    குழப்பமான கேள்வி

    இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்... கிளைமாக்ஸ் அனைவருக்கும் வேலை செய்துவிட்டது என்று சொல்ல முடியாது. சில விமர்சகர்களும் அந்த மாற்றம் இன்னும் இயல்பாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், படம் பாலின அடையாளம், நட்பு, காதல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை ஒரே இடத்தில் வைத்து விவாதிக்க முயற்சி செய்கிறது என்பதையும் பல விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    அதனால்தான் டோரதியின் கடைசி முத்தத்தை பார்த்து "ஏன் இப்படி முடிச்சாங்க?" என்று கேட்பதற்கு அடுத்ததாக, நமக்கு அந்த முடிவு ஏன் இவ்வளவு அசௌகரியமாக இருக்கிறது? என்ற கேள்வியையும் கேட்டுப் பார்க்கலாம். கதையின் முடிவு பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பார்வை. ஆனால் அந்த ஒரு காட்சி நம்முடைய பார்வையையும், ஏற்றுக்கொள்ளும் மனநிலையையும் கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்றால், இயக்குநர் சொல்ல வந்த விஷயம் அங்கேதான் தொடங்குகிறது.

    டோரதி படத்தின் கிளைமாக்ஸ் பற்றிய விவாதம் அங்கே முடிவதில்லை. அந்த முத்தம் உண்மையில் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையிலான முத்தமா... இல்லை, ஒருவரை ஒருவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு முடிவா? என்பதுதான் இப்போது பேச வேண்டிய கேள்வியாக இருக்கிறது.

    English Summary

    Dorothy: Many people leaving the screening of Karthik Subbaraj's *Dorothy* keep talking about one specific aspect of the film: while the movie is good, the climax could have been different. In particular, many found it difficult to accept the kiss shared between Subbu and Karthi in the final scene. For some, the ending felt abrupt.