மரத்திலிருந்து இறங்கி வந்த 40 குரங்குகள்.. ஆளுக்கு ஒரு வாழையிலை! கேரளா கோயிலில் வினோத ஓணம் சத்யா

  • திருவனந்தபுரம்: குரங்குகள் வாழையிலையில் சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா? வருடா வருடம் இப்படியான விருந்து குரங்குகளுக்கு நடக்கிறது.. அதுவும் 40 குரங்குகளுக்கு மட்டுமே நடக்கிறது.. அதென்ன 40 குரங்குகள்? எங்கே இருக்கின்றன? எதற்காக இந்த விருந்து? கேரளாவில் நடந்து வரும் இந்த நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் குவிந்துபடி உள்ளனர். அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

    Advertisement

    கேரளாவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வயநாடு மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அத்தப்பூக்கோலம் மொத்த பேரின் கவனத்தையும் ஈர்த்து சாதனை படைத்துள்ளது.

    Advertisement

    மகாபலி சக்கரவர்த்தி

    மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக உள்ளூர் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பல மணி நேர உழைப்பில் உருவான இந்த பூக்கோலத்தில், பல பல கலர்களில், பல டன் எடையுள்ள மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோலத்தை பார்ப்பதற்கு வயநாட்டில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகிறார்களாம்.

    அதேபோல ஓணம் திருநாளில் மனிதர்களை போலவே விலங்குகளுக்கும் ராஜயோகம் அடித்துள்ள வினோத சம்பவம் கேரள மாநிலத்தில் நடந்துள்ளது.. கொல்லம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சாஸ்தாக்கோட்டை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில்தான் இந்த ஆச்சரியம் நடந்துள்ளது..

    ஓணம் சத்யா அறுசுவை விருந்து

    வழக்கமாக மனிதர்கள் மட்டுமே உற்சாகமாக கொண்டாடும் ஓணம் சத்யா எனப்படும் அறுசுவை விருந்து, இந்த முறை மரங்களில் வசிக்கும் குரங்குகளுக்கு வாழை இலையில் பரிமாறப்பட்டுள்ளது..

    Advertisement

    தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த ஐம்பெரும் சாஸ்தா கோயில்களில் ஒன்றான சாஸ்தாக்கோட்டை கோயிலில், பல நூற்றாண்டுகளாகவே இப்படியொரு பாரம்பரியம் நடந்து வருகிறது.. இதற்கு வானர சத்யா அல்லது வானர போஜன சாலா என்று பெயரிடப்பட்டுள்ளது..

    வாழையிலையில் விருந்து

    ஓணம் பண்டிகையின் முக்கிய நாட்களான உத்திராடம் மற்றும் திருவோணம் ஆகிய 2 நாட்களில், கோயில் வளாகத்தில் உள்ள இதற்கெனவே அமைந்திருக்கும் பகுதியில் இந்த குரங்குகளுக்கு இந்த பிரம்மாண்டமான விருந்து படைக்கப்படுகிறது. மனிதர்களை போலவே மொத்த குரங்குகளும் வரிசையாக உட்கார்ந்து முறைப்படி சாப்பிடுகின்றன.. குரங்குகள் வாழையிலையில் சாப்பிடுவதை பார்ப்பதற்காகவே, ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்தபடி உள்ளனர்.

    Advertisement

    இந்த கோயிலை சுற்றி அடர்ந்த காடுகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன.. இந்த 40 குரங்குகளுக்கு மட்டுமே இந்த பிரத்யேக விருந்துக்குத தகுதியானவை என்று கோயில் தரப்பினர் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள்.. வெளியூரிலிருந்து அனுமதியில்லாமல் வரும் குரங்குகளை, இந்த எல்லைக்குள்ளேயே நுழைய அனுமதிக்கப்படுவதில்லையாம்..

    40 அம்பலக்குரங்குகள்

    அதனால் இந்த காட்டில் வசிக்கும் 40 குரங்குகள் மட்டுமே "அம்பலக்குரங்குகள்" என்ற தனிப்பெயருடன் கோயில் குடும்பத்தினராகவே கருதப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.. அப்படித்தான் இப்போதைய பண்டிகைக்கும் விருந்து ரெடியானது..

    வாழையிலை விருந்து தயாரானதுமே, ஒவ்வொரு மரங்களிலிருந்து நைசாக குரங்குகள் இறங்கி வருகின்றன.. பளபளக்கும் வாழை இலையில் பரிமாறப்பட்டிருக்கும் சுடச்சுட சோறு, மணம் பரப்பும் பருப்பு குழம்பு, அவியல், பச்சடி, மொறுமொறுப்பான பப்படம், சுவையான ஊறுகாய் உள்ளிட்ட அறுசுவை உணவுகளை, சண்டையும் கூச்சலும் இல்லாமல், ஒழுக்கமாக சாப்பிட்டுவிட்டு திரும்பி செல்வதை பக்தர்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்.

    Advertisement

    ஓணம் திருநாளின் மகிழ்ச்சி

    ஆரம்பத்தில் புதிய சூழலை கண்டதும் கொஞ்சம் தயங்கி நின்றதாம் குரங்குகள்.. பிறகு போகப் போக தங்களுக்குரிய இலையை தேடிப்பிடித்து அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டு,மனிதர்களின் நாகரிகத்தையே மிஞ்சும் வகையில் நடந்து கொள்கின்றனவாம்..

    இந்த விருந்தை சாப்பிட குரங்குகள் வழக்கம் போல் மண்டபத்திற்கு வந்தன. முதலில் ஒரு குரங்கு வந்தது. அது தனக்குரிய உணவை சாப்பிட்டு விட்டு சென்றது. அதனை தொடர்ந்து மற்றொரு குரங்கு கூட்டம் வந்து உணவை சாப்பிட்டு சென்றன...

    ஓணம் திருநாளின் உண்மையான மகிழ்ச்சியும் அன்பும் மனித குலத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல, தங்களைச் சுற்றியுள்ள வாயில்லா ஜீவன்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற உன்னத பண்பாட்டை இந்த பாரம்பரிய நிகழ்வு இந்த உலகிற்கு உரக்க சொல்லி தந்து கொண்டிருக்கிறது.

    Advertisement

    கொல்லம் மாவட்டத்தின் இந்த அரிய மற்றும் சிலிர்க்க வைக்கும் காட்சிகளைக் கண்டுகளிக்க வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கூட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருவதுடன் சோஷியல் மீடியாவிலும் பரவி பரவசத்தை தந்து வருகிறது..!!

    English Summary

    40 Monkeys in Kerala Get Onam Feast on Banana Leaves.. Rice, Dal, Avial and Papad in a Unique Tradition