திருவனந்தபுரம்: 2029 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசு தோற்கடிக்கப்பட்டு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். பாஜம மத ரீதியாக மக்களை பிரிப்பதாகவும் அரசியல் ஆதாயங்களுக்காக திட்டமிட்டு கலவரங்கள் உருவாக்கப்படுவதாகவும் அவர் சாடினார்.
இளைஞர்கள் தலைமையில் உள்ள கரப்பான் பூச்சி கட்சி பாஜகவுக்கு மிக பெரிய தலைவலியாக மாறியுள்ளது. பிரதான எதிர்க்கட்சிகளை விட மத்திய பாஜக அரசை வீரியமாக எதிர்க்கும் இந்த அமைப்புக்கு இளைஞர்கள் ஆதரவும் மிக பெரியளவில் உள்ளது. இதன் காரணமாகவே நீட் விவகாரத்தில் மோடி அரசை இவர்களால் இறங்கி வர வைக்க முடிந்தது.
அடுத்த கட்டமாக தேர்தல் ஆணையர் விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதற்கிடையே கொச்சியில் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் 'ஜந்தர் மந்தர் அட் கொச்சி' என்ற பெயரில் போராட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் சீர்திருத்தம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா ஆகியவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய அபிஜித் தீப்கே, ஆட்சி மாற்றம் என்பது தேர்தலின் மூலமாக மட்டுமே சாத்தியம் என்றும் அதற்காக மக்கள் தயாராக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தேர்தல் நடைமுறைகள் சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும் நடைபெற வேண்டும் எனக் கோரினார். மத்திய அரசு தலைமை தேர்தல் ஆணையரைப் பாதுகாப்பதற்காக நாட்டின் இளைஞர்களுக்கு எதிராக போர் தொடுப்பதாக அபிஜித் தீப்கே குற்றம்சாட்டினார். ஞானேஷ் குமாருக்கு மத்திய அரசு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். தேசியக் கொடியுடன் ஜந்தர் மந்தருக்குள் நுழைந்ததாக கூறி டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட் அவர் மேலும், "இந்த மூவர்ண கொடியை ஏந்தியதற்காக நான் சிறையில் அடைக்கப்பட்டேன். எனது சகோதரர்கள் சௌரவ், ஆஷுவும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போதுதான் இதுபோல கடைசியாக நடந்தது. மேலும் மக்கள் என்ன சாப்பிட வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும், யாரை நேசிக்க வேண்டும்.. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அனைத்தையும் மத்திய அரசு கட்டுப்படுத்த முயல்கிறது. SIR மூலம் தேர்தல் முடிவுகளையே மாற்றியுள்ளனர்.நமது இந்திய தேசம் என்பது பி.ஆர். அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் உருவான நாடு.. அப்படிப்பட்ட நமது பாரதத்தில் கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக நாட்டின் குரல் ஒடுக்கப்பட்டு இருந்தது. ஜந்தர் மந்தர் போராட்டம் மக்களுக்கு பேசும் துணிச்சலை மீண்டும் கொடுத்துள்ளது. பாஜக மதரீதியாக மக்களை பிரிக்கிறது.. அரசியல் ஆதாயங்களுக்காக இங்கு திட்டமிட்டு கலவரங்கள் உருவாக்கப்படுகிறது. எங்களை அராஜகவாதிகள் என்று அழைக்கிறீர்கள். நாங்கள் அராஜகவாதிகள் அல்ல; அம்பேத்கரியவாதிகள், காந்தியவாதிகள்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், பிரதமரை விமர்சிக்க அனுமதிக்கும் ஜனநாயக சூழலே உண்மையான ஜனநாயகம் என்றும் கூறினார். கேரள மாநிலம் கொச்சியில் இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக, நடிகர் பிரகாஷ் ராஜ் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து ராஜேந்திர மைதானம் வரை நடைபெற்ற பேரணிக்கு தலைமை தாங்கினார். தீபாவளி பண்டிகைக்கு பிறகு கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டங்கள் மீண்டும் தீவிரமடையும் என தெரிகிறது.போராட்டம்
சிறையில் அடைக்கப்பட்டேன்
தேர்தல் முடிவுகளையே மாற்றுகிறார்கள்
பாஜக மீது பாய்ச்சல்