திருவனந்தபுரம்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி நவம்பர் 7 ம் தேதி (நாளை மறுநாள்) கொச்சியில் போராட்டம் நடத்த உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. தீபாவளி நவம்பர் 8 ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் முந்தைய நாள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கைவிட வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் தீவிரமாக போராட்டம் நடத்தினர். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நிறுவனர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்களான சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில் அபிஜித் தீப்கே விடுவிக்கப்பட் நிலையில் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா சிறையில் ஒருவாரம் அடைக்கப்பட்ட பிறகு தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் செயல்பாடு முடங்கியது. ஆனால் தற்போது புதிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''ஜனநாயகம் காப்போம்.. SIR நீக்குவோம்.. கொச்சி ராஜேந்திர மைதானத்தில் நவம்பர் 7ம் தேதி மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெற உள்ளது'' என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான அபிஜித் தீப்கே, கட்சியின் தேசிய செயலாளர் ஆஃப்ரின் நவாஸ், கட்சியின் தென்மண்டல ஊடகம் தலைவர் விஜய் மல்லங்கி உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கடந்த மாதம் 13ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு வாரம் சிறையில் இருந்த பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் மீதான வழக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று கூட இருவரிடமும் 4 மணிநேரம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியில் உள்ள அனைவரும் குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அபிஜித் தீப்கே வீடியோவும் வெளியிட்டு இருந்தார். ஆனால் தற்போது திடீரென்று தீபாவளிக்கு முந்தைய நாள் அபிஜித் தீப்கே கொச்சியில் போராட்டம் அறிவித்து இருப்பது கவனம் பெற்றுள்ளது.