திருவனந்தபுரம்: கேரளாவில் பினராயி விஜயன் வீட்டில் ரெய்டு சென்ற ED டீம் மீது தாக்குதல் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ED அதிகாரிகள் சென்ற காரை அடையாளம் தெரியாத கும்பல் தாக்கியுள்ளது.. காரின் உள்ளே அதிகாரிகள் இருந்தபோதே கண்ணாடியை உடைத்து நொறுக்கினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதனால் அங்குப் பெரும் பரபரப்பு உருவானது.
கேரள அரசியலில் கடந்த வாரம் நடந்த மெகா ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினரைக் குறிவைத்து அமலாக்கத்துறை இன்று அதிரடி ரெய்டு நடத்தினர். ED நடத்திய இந்த அதிரடிச் சோதனைகள், அம்மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பூகம்பத்தைக் கிளப்பியுள்ளன.
சட்ட விரோதப் பண பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் இந்த ரெய்டை நடத்தியுள்ளனர். தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் பினராயி வீட்டில் ரெய்டு நடத்துவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கொதித்து எழச் செய்துள்ளது. திருவனந்தபுரம் டூ கண்ணூர் வரை அரங்கேறிய அமலாக்கத்துறை மெகா வேட்டை மற்றும் சிபிஎம் தொண்டர்களின் அக்ரோஷப் போராட்டம் குறித்து நாம் பார்க்கலாம்! சிஎம்ஆர்எல் எனப்படும் கேரளா கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் மற்றும் பினராயி விஜயன் மகளின் நிறுவனத்திற்கும் இடையே சட்டவிரோத பணமறிமாற்றம் நடந்துள்ளது என்பதே புகாரின் சாரம்சம். இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என சிஎம்ஆர்எல் வழக்கு தொடர்ந்தது. இந்தக் கோரிக்கையைக் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த அடுத்த 24 மணிநேரத்திற்குள், திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் தற்போதைய இல்லம், கண்ணூரில் உள்ள அவரது பூர்வீக வீடு மற்றும் அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸின் கோழிக்கோடு இல்லம் எனக் கேரளா முழுவதும் 10க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை ஆரம்பித்தனர். விஜயனின் இல்லத்திற்கு வெளியே விடிய விடிய நூற்றுக்கணக்கான சிபிஎம் தொண்டர்கள் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பல மணிநேரச் சோதனைக்குப் பிறகு, பெண் அதிகாரிகள் உட்பட அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் ஏறிப் புறப்பட முயன்றபோது, ஆவேசமடைந்த தொண்டர்கள் காரை முற்றுகையிட்டனர். முதலில் அமலாக்கத் துறைக்கு எதிராக கோஷங்களை மட்டுமே எழுப்பினர். பிறகு திடீரென கார் மீது ஹெல்மெட்டுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசினர். இதில் காரின் முன் பக்கக் கண்ணாடி நொறுங்கியது. மத்தியப் பாதுகாப்புப் படையினரும் கேரள போலீஸாரும் தடியடி நடத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரக் கடுமையாகத் திணறினர். இறுதியாக மூத்த தலைவர்கள் தலையிட்ட பிறகே தொண்டர்கள் கலைந்து சென்றனர். இந்த ஒட்டுமொத்தச் சலசலப்பிற்கும் பின்னால் இருப்பது கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL) என்ற தாது நிறுவனத்திற்கும், பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்கு சொந்தமான 'எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்' என்ற ஐடி நிறுவனத்திற்கும் இடையே நடந்த ரகசியப் பணப் பரிவர்த்தனைதான். கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கு இடையே, எக்ஸாலாஜிக் நிறுவனம் CMRL நிறுவனத்திற்கு எவ்வித ஐடி சேவைகளையும் வழங்காமலேயே, சட்டவிரோதமாக ₹1.72 கோடி பணத்தைப் பெற்றுள்ளதாக வருமான வரி இடைக்காலத் தீர்ப்பாயம் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள எஸ்எஃப்ஐஓ குற்றம் சாட்டியுள்ளது. இந்த கார்ப்பரேட் மோசடி விவகாரத்தில் வீணா மீது கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பணமோசடி விவகாரத்தை தான் தற்போது அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. இந்தச் சோதனைகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக எம்.ஏ.பேபி, "டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியாவுக்கு என்ன செய்தார்களோ, அதையேதான் தற்போது கேரளாவிலும் ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணி அரங்கேற்றுகிறது. அமலாக்கத்துறை என்பது பாஜாகவின் ஒரு அரசியல் நீட்சியாகவே மாறிவிட்டது. தேர்தலில் எங்களை வென்ற UDF கூட்டணியின் புதிய அரசு இதற்குத் துணை போகிறதா? பினராயி விஜயனின் பிம்பத்தைச் சிதைக்கத் திட்டமிட்டு நடத்தப்படும் இந்த வன்ம நாடகத்தை நாங்கள் மக்கள் மன்றத்தில் முறியடிப்போம்" என்றார்.கேரளா
என்ன விவகாரம்
அதிரடி ரெய்டு
என்ன நடந்தது
கண்டனம்