அற்பமான வழக்கு.. மரத்திற்கு சிரிக்கும் திறன் இருந்தால் உங்களைப் பார்த்து சிரித்திருக்கும்.. ஐகோர்ட்


  • திருவனந்தபுரம்: உங்களில் பலருக்கும் பக்கத்து வீட்டாருடன் சின்னச்சின்ன விஷயங்களுக்காக மனக்கசப்பு ஏற்படும். பாதையில் யார் காரை நிறுத்துவது, தென்னை மரம் அல்லது வேறு மரம் வளர்க்கும் போது அதனால் ஏற்படும் தொந்தரவு, பாதை ஆக்கிரமிப்பு என ஏதாவது சிக்கல் வரும். அப்படி தகராறு ஏற்படும் போது, அது சில நேரங்களில் பகையாக மாறிப்போவதும் உண்டு. கேரளாவில் அப்படியொரு மோதல், வழக்கு உயர்நீதிமன்றத்தில் வந்துள்ளது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி 'சிரிக்கும் திறன் இருந்தால் மரமே உங்களைப் பார்த்து சிரித்து இருக்கும்' ஒரு கப் 'டீ' மூலம் தீர்க்க வேண்டிய அற்பமான வழக்கு என்று கூறி முடித்து வைத்தார்.

    Advertisement

    மனிதர்களுக்குள் இருக்கும் ஈகோ, சின்னஞ்சிறிய விஷயங்களைக்கூட எவ்வளவு பெரிய சட்டப் போராட்டமாக மாற்றிவிடுகிறது என்பதற்கு கேரளாவில் உள்ள ஒரு வீட்டின் தென்னை மரத் தகராறு வழக்கே ஒரு சாட்சி. ஒரு கப் தேநீர் அல்லது காபியைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பேசித் தீர்த்திருக்க வேண்டிய அற்பமான விஷயத்தை, நீதிமன்றம் வரை கொண்டு சென்று சண்டையிட்ட அண்டை வீட்டாரைக் கண்டு உயர்நீதிமன்றமே ஆதங்கத்துடனும் கருத்து தெரிவித்துள்ளது.

    Advertisement

    விவகாரம் என்ன?

    திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கரகுளம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினருக்கு இடையேதான் இந்தத் தென்னை மரத் தகராறு ஏற்பட்டுள்ளது. அண்டை வீட்டார் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து மட்டை விழுவது, தேங்காய் விழுவது போன்றவை தங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், எனவே அந்த மரத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பக்கத்து வீட்டில் உள்ளவர் வழக்கு தொடர்ந்தார். அதற்கு மரத்தின் உரிமையாளரும் விடாமல் எதிர் வழக்காட, இந்தச் சாதாரணப் பிரச்சினை நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறுதியாக கேரளாவின் உயர்நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.

    Advertisement

    உறவை வளர்க்கும் தீர்ப்பு

    இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.குனிகிருஷ்ணன், அண்டை வீட்டாரின் உறவை வளர்க்கும் விதமாக மிகவும் சுவாரசியமான, உணர்வுபூர்வமான தீர்ப்பை வழங்கியுள்ளார். பஞ்சாயத்து அதிகாரிகள், குறைதீர்ப்பாளர் மற்றும் வக்கீல் கமிஷனரின் ஆய்வுகளின்படி, அந்தத் தென்னை மரத்தால் யாருக்கும் "எந்த ஆபத்தும் இல்லை" என்று கண்டறியப்பட்டதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

    அண்டை வீடுகளில் நடக்கும் சின்னச் சின்னப் பிரச்சினைகளை எப்படித் தீர்க்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ள முக்கிய வழிகாட்டுதல்களை பார்ப்போம். அண்டை வீட்டாருக்கு இடையிலான ஒரு சாதாரணத் தகராறிலிருந்து உருவான தேவையற்ற சட்டப் போராட்டத்திற்கு இந்த வழக்கே சிறந்த உதாரணம். காபி அல்லது தேநீர் அருந்திக்கொண்டே அமர்ந்து பேசி, இத்தகைய தகராறுகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். "உன் அண்டை வீட்டாரை உன்னைப் போலவே நேசி" என்ற பைபிள் வசனத்தை நாம் படித்துப் பழக வேண்டும். நீதிமன்றப் போராட்டங்களை விடுத்து, அண்டை வீட்டாருடன் இணக்கமாக வாழப் பழக வேண்டும்.

    Advertisement

    மரமே உங்களைப் பார்த்து சிரித்திருக்கும்

    "அந்தத் தென்னை மரத்துக்கு மட்டும் சிரிக்கும் திறன் இருந்திருந்தால், சண்டையிடும் இந்த அண்டை வீட்டாரைப் பார்த்து அது நிச்சயம் சிரித்திருக்கும்" என்று நீதிபதி பி.வி.குனிகிருஷ்ணன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    இறுதியாக, ஒரு கோப்பை தேநீர் மூலம் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம் முழு அளவிலான சட்டப் போராட்டமாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி பி.வி.குனிகிருஷ்ணன், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சட்டம், நீதிமன்றம் என்பதைத் தாண்டி அண்டை வீட்டாருக்குள் அன்பும், விட்டுக்கொடுத்தலும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது.

    ஒரு வரப்பு தகராறு பல விவசாய நிலங்களில் நிலத்தகராறாக உருவெடுத்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு எல்லாமே விட்டுக்கொடுத்து செல்லும் சிறிய உணர்வு இருவருக்கும் ஏற்பட்டிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது.. ஆனால் வறட்டு கவுரவமும், பிடிவாதமும் பல குடும்பங்களை காலி செய்திருக்கிறது என்பது கசப்பான உண்மை.

    English Summary

    A trivial dispute that should have been resolved over a cup of tea—"If trees had the ability to laugh, the tree itself would have laughed at you," remarked the Kerala High Court regarding a dispute over a coconut tree.