இந்திய கப்பலை துளைத்த ஏவுகணை.. ஆனாலும் 2,000 கிமீ பயணித்து கொச்சி வந்தது எப்படி? சாதித்த கடற்படை

  • திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது ஓமன் கடலில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பலை துளைத்து கச்சா எண்ணெய் டேங்கருக்குள் சென்ற ஏவுகணை அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை. இதையடுத்து வெடிக்காத ஏவுகணையுடன் அந்த கப்பல் சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவை கடந்து கொச்சி வந்த நிலையில் இந்திய கடற்படையினர் அந்த வெடிக்காத ஏவுகணையை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

    Advertisement

    ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து போரை தொடங்கின. சில வாரங்களுக்கு முன்பு போர் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது போர் முடிவடைந்தாலும் கூட அமெரிக்கா - ஈரான் இடையே சண்டை தொடர்கிறது.

    Advertisement

    இதனால் மத்திய கிழக்கு பிராந்திய கடல் பகுதிகளில் பயணிக்கும் கப்பல்கள் அதிக பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள.

    இதில் சிக்கும் வணிகக் கப்பல்கள் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் கடல் கண்ணிவெடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. ஜூன் 9 முதல், ஓமன் கடல் பகுதியில் அமெரிக்கப் படைகளின் முற்றுகையால் இந்திய வீரர்கள் அடங்கிய மூன்று கப்பல்கள் தாக்குதல்களை சந்தித்துள்ளது. சுமார் 1,800க்கும் அதிகமான இந்திய மாலுமிகள் மத்திய கடல் பகுதியில் தவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் மத்திய கிழக்கு பிராந்திய கடல் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் தான் தற்போது ஒரு திடுக்கிட வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.'எம்டி ஒலிம்பிக் லைஃப்' (MT Olympic Life) என்ற கச்சா எண்ணெய் கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜாரியாவில் இருந்து கொச்சி நோக்கி மே 26ம் தேதி புறப்பட்டது. இந்த கச்சா எண்ணெய் கப்பல் மார்ச்செல் தீவின் கொடியுடன் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது. பயணத்தின் முதல் நாளிலேயே இந்த கப்பல் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சுமார் 60 கடல் மைல் தொலைவில் பயணித்தது. அப்போது திடீரென்று கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

    கப்பலின் ஒரு பகுதி ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. கப்பலை துளையிட்டு உள்ளே சென்ற ஏவுகணை கச்சா எண்ணெய் டேங்கிற்குள் போய் சிக்கியது. அதிர்ஷ்வசமாக கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை வெடிக்கவில்லை. இந்த தாக்குதல் மே 26ம் தேதி நடந்தது. ஏவுகணை கப்பலை தாக்கியதால் அதில் இருந்த கேப்டன், மாலுமிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் வெடிக்காததால் அவர்கள் நிம்மதியடைந்தனர். அதன்பிறகு வெடிக்காத ஏவுகணையுடன் தொடர்ந்து பயணிக்க முடிவு செய்தனர்.

    Advertisement

    இந்த ஏவுகணை எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்பதால் 'திக்திக்' மனநிலையில் அவர்கள் கப்பலில் பயணித்தனர். இந்த கப்பல் அரபிக்கடல் உள்பட சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு வரை பயணித்து கொச்சி வந்துள்ளது. இதையடுத்து இந்திய கடற்படையை சேர்ந்த நிபுணர்கள் குழுவினர் அந்த கப்பலை தாக்கிய ஏவுகணையின் வெடிபொருள் அடங்கிய பாகத்தை மிகவும் கவனமாக நீக்கினர்.

    இது மிகவும் ஆபத்தான பணியாகும். சிறு தவறு நடந்தாலும் ஏவுகணை வெடிக்கலாம் என்பதால் கவனமாக செயல்பட்டு ஏவுகணையின் வெடிப்பொருள் அடங்கிய பகுதியை detonation mechanism முறையில் தனியே பிரித்து அகற்றினர். கொச்சியிலுள்ள இந்திய கடற்படையின் சிறப்பு வெடிபொருள் செயலிழக்கச் செய்யும் குழு (EOD)தான் ஏவுகணையின் வெடிப்பொருட்கள் அடங்கிய பகுதியை வெற்றிகரமாக நீக்கி சாதித்துள்ளது.

    English Summary

    The Indian Navy has executed a high-stakes, successful operation in Kochi to remove an unexploded missile warhead from the 'MT Olympic Life' crude oil tanker. The vessel had traveled over 2,000 kilometers from the Gulf of Oman with the dangerous payload embedded within its fuel tank, highlighting the Navy's elite explosive disposal capabilities.